அவர் துரோகம் என்னை வாட்டுது!
என்ன செய்வது தோழி?
அன்புத் தோழி...
என் பெற்றோருக்கு நாங்கள் 3 பெண்கள். நான் இரண்டாவது பெண். நான் அதிகம் படிக்கவில்லை. 12வது தான் படித்தேன். அக்காவும், தங்கையும் பட்டப்படிப்பு படித்தவர்கள். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்னர்தான் திருமணம் செய்தனர். ஆனால் எனக்கு 12வது முடித்ததும் திருமணம். இத்தனைக்கும் வசதிக்கு, அழகுக்கு குறைவில்லை. அதனால் அவசரமில்லை. ஆனாலும ‘நல்ல மாப்பிள–்ளை’ என்று அப்பா சொன்னதால் தலையாட்டினேன். அதை விட முக்கியமான விஷயம் ‘விவரம் புரியாமல்’ தான் சம்மதம் சொன்னேன் என்பது இப்போது புரிகிறது.
நான் அதிகம் படிக்காவிட்டாலும் அவர் அரசு நிறுவனத்தில் பொறியாளர் என்பது எனக்கு மகிழ்ச்சி. திருமணம் ஆன சில நாட்களில் பட்டணத்தில் தனிகுடித்தனம். நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்.பிள்ளைகள் பிறந்த பிறகும் அந்த அன்பு குறையவில்லை. ஆனால் அவ்வப்போது கோபப்படுவார். சில நேரங்களில் அடித்தும் இருக்கிறார். அக்கம், பக்கத்தில் இருப்பவர்களை பார்க்கும் போது என் கணவர் எவ்வளவோ மேல் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமை தான்.
அதுமட்டுமல்ல எனது வீட்டு ஆட்களிடமும் நன்றாக பழகுவார். அவர்களுக்கு, கேட்காமலே உதவிகள் செய்வார். நாங்கள் இரண்டு பேரும் ஒரே நகரத்தை சேர்ந்தவர்கள். அவர் அப்பா, அம்மாவை பார்க்க போகும் போது, எங்க அப்பா, அம்மா தங்கையையும் போய் பார்த்து விட்டு தான் வருவார். என் தங்கைக்கும் நல்ல ஆலோசனைகளை சொல்வார். ஆனால் அவள், அவரிடம் அத்தனை ஒட்டுதலாக இல்லை. எங்கள் வீட்டுக்கு அதிகம் வர மாட்டாள். அதேபோல் என் திருமணத்திற்கு பிறகு அக்காவும் என்னிடம் பேசுவதை குறைத்து விட்டார்.
ஏதாவது விசேஷங்களில் பார்க்கும் போது மட்டும் பேசுவார். விசாரிப்பார். நான் காரணம் கேட்டால், ‘அப்படி எல்லாம் இல்லை’ என்பார். இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கல்லூரியில் படிக்கிறார்கள். கூடவே அவருக்கு இதயநோய். அது வந்த பிறகு அவர் கோபத்தையும் குறைத்துக் கொண்டார். அடிப்பதையும் நிறுத்தி விட்டார். நானும் அவர் மனம் கோணாமல், உடல் நலம் பாதிக்காமல் பார்த்து, பார்த்து செய்கிறேன். அதனால் அவர் மட்டுமல்ல, மற்றவர்களும் என்னை பாராட்டுவார்கள்.
ஆனால் சில நாட்களாக அவரிடம் மனம் ஒட்டவில்லை. அவருக்கு வேண்டியதை செய்ய தயக்கமாக உள்ளது. அது மட்டுமல்ல ஏன் அவருக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகரித்து வருகிறது. அவர் கோபப்பட்டாலும், அடித்தாலும் அவர் என்னிடம் உண்மையாக இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அதனால் அவர் மீது பாசமாக இருப்பேன் ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்திருக்கிறார். அதுவும் என் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்களுக்கு திருமணம் ஆகும் போது அவள் 8வது படித்துக் கொண்டு இருந்தாள். அதற்கு பிறகுதான் வயதுக்கு வந்தாள். அதன் பிறகு சின்ன பெண் என்றும் பாராமல் அவளிடம் சில்மிஷங்கள் செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது, இருட்டில், வெளியில் அழைத்துச் செல்லும் போதெல்லாம் அத்துமீறியுள்ளார். வீட்டில் எனக்கு ஏதாவது கொடுத்து அனுப்பும் போது, அதை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவாள்.
அப்படி எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நான் தூங்கியபிறகு, குளிக்கும் போது அவளிடம் சில்மிஷங்கள் செய்துள்ளார். அதனால் அவள் எங்கள் வீட்டுக்கு வருவதையே தவிர்த்தாளாம். அப்போது விவரம் புரியாமல் அவளை வீட்டுக்கு வரும்படி அழைத்தால், ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து விடுவாள். நானும் காரணம் தெரியாததால் அவளை திட்டுவேன்.பயத்தில் இந்த விஷயத்தை யாரிடமும் அவள் சொல்லியதில்லை. ஆனால் அம்மா வீட்டுக்கு அருகே வசிக்கும் அவளின் நெருங்கிய தோழியிடம் சொல்லி அழுவாளாம்.
அந்த தோழி சமீபத்தில் தன் அம்மாவிடம் இந்த விவரங்களை சொல்லியுள்ளாள். போன மாதம் நான் ஊருக்கு சென்ற போது அந்த தோழியின் அம்மாவிடம் வழக்கம் போல் என் கணவர் குறித்து பெருமையாகவும், அவர் உடல்நிலை சரியில்லாதது குறித்தும் பேசி கொண்டிருந்தேன். அதற்கு அவர், ‘ உன் கணவர் ஒன்றும் யோக்கியமில்லை’ என்றார். உடனே நான் கோபப்பட இந்த விஷயங்களை எல்லாம் சொன்னார். அந்த அம்மா, புறம் பேசும், கோள்மூட்டும் ஆளில்லை. யாரையும் குறைத்து பேசமாட்டார்.
அதனால் மட்டுமல்ல, பழைய சம்பவங்களை எல்லாம் ஒப்பீட்டு பார்த்த போது அவர் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று புரிந்தது. என் தங்கை இன்று வரை என் வீட்டுக்கு சரியாக வராததின் காரணத்தையும் உணர்ந்தேன். அதுமட்டுமல்ல, என் கணவர் முதலில் என் அக்காவைதான் பெண் பார்க்க வந்துள்ளார். ஆனால் என்னை பார்த்தவர், எங்க அக்காவை பிடிக்கவில்லை. தங்கையை பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். வீட்டில் எங்க அக்காவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்த பிறகு எனக்கு இவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த விஷயம் அப்பா, அம்மாவுக்கு மட்டுமல்ல அக்காவுக்கும் தெரியும். என்னிடம் யாரும் சொன்னதில்லை. அக்கா என்னிடம் அதிகம் பேசாமல் இருப்பதற்கான காரணங்களும் புரிந்தன.இப்படி அவரது ஒவ்வொரு லீலைகளாக வெளியாக என் கணவர் மீது அன்பு குறைந்து விட்டது. அவரை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. அவருக்கு ஏதாவது செய்யக் கூட மனம் ஒப்பவில்லை. பிள்ளைகள் மூலம்தான் அவருக்கு வேண்டியதை கொடுக்கிறேன்.
அவரிடம் இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. கேட்பதற்கு மட்டும் பதில் சொல்வேன். அவரைப் பற்றி கேட்டதில் இருந்து எனக்கு நிம்மதியே இல்லை. இரவில் சரியாக தூங்குவதில்லை. அவரை மன்னிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் தவிக்கிறேன். என்ன செய்வது புரியவில்லை. விவாகரத்து செய்யலாம் என்றால் பிள்ளைகள், வயதான பெற்றோரை பார்க்க வேண்டி உள்ளது.
யாரிடமாவது சொல்லி ஆறுதல் தேடலாம் என்றால் உனக்கு எப்படி தெரியும், என்ன ஆதாரம் என்பார்கள். என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறேன். என் தங்கையிடம் மன்னிப்பு கேட்கலாமா? இல்லை என் கணவரிடம் இந்த விஷயங்களை கேட்டு விடலாமா? இந்த வேதனையில் இருந்து நான் எப்படி மீள்வது ? என்ன செய்வது எனக்கு வழி காட்டுங்கள் தோழி.
இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
உங்கள் கணவரை மன்னிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அம்மா இப்போது அதையெல்லாம் ஏன் சொன்னார் என்று புரியவில்லை. இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம் இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் அந்த அம்மா இந்த தகவல்களை உங்களிடம் சொல்ல வேண்டும். அவர் நல்லவர் என்றால் இது போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்பது தெரிந்திருக்க வேண்டும்தானே.
அந்த ஒருத்தர் பேச்சை கேட்டு நீங்கள் மனதை தளரவிட வேண்டாம். கண்டதை யோசித்து மனதை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் கணவரிடம் சண்டையும் போடாதீர்கள். அவரிடம் பொறுமையாக பேசுங்கள். அவர் இதய நோயாளி என்பதால் அவருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்பதை உணர்த்தும் வகையில் பேசுங்கள். அதே நேரத்தில் நீங்கள் கேட்க வேண்டியதை தெளிவாக கேளுங்கள்.
‘‘இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. அதேநேரத்தில் 3வது ஆளிடம் பேசுவதை விட நேரிடையாக உங்களிடமே பேசலாம் என்று நினைக்கிறேன். மனதில் இந்த விஷயத்தை அடக்கிக் கொண்டு நடிக்க தெரியவில்லை. என்னால் அவர்கள் கூறியதை நம்ப முடியவில்லை. இருந்தாலும் உங்களிடம் கேட்டுவிட்டால் மனது நிம்மதியடையும்’’ என்று மெதுவாகவும், அன்பாகவும் எடுத்துச் சொல்லி உங்கள் சந்தேகத்தை கேளுங்கள். அவர் ‘அப்படி ஏதும் நடக்கவில்லை’ என்று சொன்னால், நிம்மதியுடன் அடுத்த வேலையை பாருங்கள்.
அடுத்தவர் சொல்வதை விட உங்கள் கணவர் சொல்வதை நம்புங்கள். மனதை குழப்பி கொள்ளாதீர்கள். ஒருவேளை அவர், ‘உண்மைதான். அந்த வயதில் தெரியாமல் செய்து விட்டேன். தப்புதான்’ என்று சொன்னால் அதற்கு பிறகு நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். உண்மையை ஒத்துக் கொண்டதால் நீங்கள் அவரை மன்னிக்க விரும்பினால் மன்னிக்கலாம். தவறை உணர்ந்து உண்மையை ஒப்புக் கொண்டால் மன்னிப்பதில் தவறில்லை. எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். முக்கியமாக ஒன்று கணவன்-மனைவி பிரச்னையை அவர்கள்தான் பேசி தீர்க்க வேண்டும். அதில் 3வது ஆளை நுழைய விடாதீர்கள். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
தொகுப்பு: ஜெயா பிள்ளை
என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:
‘என்ன செய்வது தோழி?’ குங்குமம் தோழி, தபால் பெட்டி எண்: 2924 எண்: 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.
வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...
|