வறுமையை போக்கிய தீப்பெட்டி
வல்லமை தாராயோ...
தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் பேச்சியம்மாள்
கந்தக பூமி என சொல்லப்படும் விருதுநகர் மாவட்டம். சிறு தொழிலில் வளர்ந்தோங்கி இருக்கும் மாவட்டம். விருதுநகர் மாவட்டம், முந்தைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985ல் புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மாவட்டமும், தெற்கில் திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கில் ராமநாதபுரம் மாவட்டமும் மேற்கில் கேரள மாநிலமும் மற்றும் வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது. வான் மழை பொய்த்துப்போனால் விவசாயம் தொடர்பான வேலைகள் இல்லாமல் போகும். அந்த நிலையில் அந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் பிழைப்புத் தேடி பட்டணங்களுக்கும், மாநகரங்களுக்கும் சென்றனர். அந்த நிலையை மாற்றி நமது மண்ணிலே விவசாயம் பொய்த்தால் வேறு பிழைப்புக்கு வழி செய்யவேண்டும் என முடிவு செய்த அம்மாவட்ட மக்கள் தீப்பெட்டி தொழிலில் இறங்கினர்.
அதனைச் சார்ந்த பட்டாசு தொழிலும் செய்தனர். இதுபோக அச்சுத்தொழிலிலும் முத்திரை பதித்தனர். தேனியாய், எறும்பாய் உழைப்புக்கு முதலிடம் கொடுத்து முன்னேற்றம் காணும் விருதுநகர் மாவட்டம். தன்னை நம்பி வரும் எந்த மாவட்ட, மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பை நல்கி அவர்களை வாழ வைக்கிறது. அத்தகைய பெருமைக்குரிய விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தொட்டிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட முத்துலாபுரம் கிராமத்தில் ரங்கசாமி - பஞ்சவர்ணம் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக பிறந்த பேச்சியம்மாள், முத்துலாபுரம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். மேற்கொண்டு படிக்க ஆர்வம் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. குடும்பத்தின் வறுமையை போக்கும் பொருட்டு தனது பெற்றோர்களின் கஷ்டத்தில் பங்கெடுத்தாள். அதன் விளைவு தான் மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்திற்கு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார்.
அந்த வருமானம் சொற்ப வருமானமாக இருந்தாலும் அவர்களது குடும்பத்திற்கு அப்போதைக்கு அது பெருந்தொகையாகவே இருந்தது. 2007ம் ஆண்டு ராமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் மீண்டும் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். இப்போது அவர் மனதில் வேறு எண்ணம் உருவானது. அதாவது தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருள் எங்கு கிடைக்கும்? அவற்றை எப்படி வாங்குவது? எவ்வாறு விற்பது? தொழிற்சாலையை தொடங்குவதற்கு என்னென்ன செய்யவேண்டும்.
உரிமம் பெற யாரை, எங்கே, எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டார். அது தான் அவரே தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்க விதையாக உருவானது. அவரது ஆறு வருட தீவிர உழைப்பின் காரணமாக தான் சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையை வைத்து தீப்ெபட்டி தொழிற்சாலையை ஆரம்பிக்க முடிவெடுத்தார். தன் முடிவினை தன் கணவரிடம் கூற, அவரும் ஒப்புதல் சொல்ல மறு மாதமே உருவானது தீப்பெட்டி தொழிற்சாலை. வீட்டின் முன் இருந்த இரண்டு சென்ட் நிலத்தில் ஒரு தகரக் கொட்டகை அமைத்து தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் ஓரிரு பெண் தொழிலாளர்களுடன் ஆரம்பித்த இந்த தீப்பெட்டி கம்பெனி இப்பொழுது 30 பெண்கள் பணியாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ‘‘நாங்கள் தயார் செய்யும் தீப்பெட்டி வட மாநிலமான தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் விற்கப்படுகிறது. இதில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்குத்தான் அதிகமான அளவில் லோடு செல்லும்.
வெயில் காலம் என்றால் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் நல்ல விலை கிடைக்கும். மழைக்காலமான ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை எங்களுக்குத் தொழில் சற்று மந்தமாகத்தான் இருக்கும். காரணம் தீப்பெட்டி லோடு ஏற்றி செல்லும் வழிகளில் பெருமழை வந்து தண்ணீர் பார்சலுக்குள் இறங்கினால் மொத்தமும் வீணாகி விடும்.
அதனால் தான் மழைக்காலம் இந்த தொழிலில் மந்த நிலை உருவாகும்’’ என்றவர் அவர் தொழிற்சாலையில் பெரும்பாலும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், பொறுப்பில்லாத கணவனால் கஷ்டப்படும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். ‘‘கஷ்டத்தால் அவதிப்படும் பெண்கள் என்றால் நான் அவர்களை உடனே வேலைக்கு அமர்த்திக்கொள்வேன். தனி பெண்ணாக ஒரு குடும்பத்தை நகர்த்துவது அவ்வளவு சுலபமில்லை. பட்டாசு தொழிற்சாலை போன்று தீப்பெட்டி தொழிலில் பயமில்லை’’ என்கிறார் பேச்சியம்மாள்.
விளக்கேற்றுவதென்றாலும், அடுப்பு எறிவதாக இருந்தாலும் அங்கு தீப்பெட்டி முக்கியம். அந்த சிறு பெட்டியின் விலை ஓன்று தான். ஆனால் அந்த ஒரு பெட்டி உருவாக பல பேர் உழைப்பு தேவைப்படுகிறது. மண் குடிசையில் இருப்போர் முதல் மாட மாளிகையில் இருப்பவர்கள் வரை அன்றாடம் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்கு ஒரு முறையாவது தீப்பெட்டியை பயன்படுத்துகிறார்கள். அந்த தீப்பெட்டி தான் பல பெண்களின் வாழ்க்கையின் துயரத்தை துடைத்தஅவர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.
- சு.இளம் கலைமாறன், படம்:ச.சுடலை ரத்தினம்
|