நியூஸ் பைட்ஸ்



டோனி மாரிசன் மரணம்

டோனி மாரிசன் (88) பிரபல ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். 11 நாவல்களை எழுதியுள்ள டோனி மாரிசன், தன் இலக்கிய பணிக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். கருப்பின மக்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் உருக்கமாக ஆவணம் செய்துள்ளார். அவர் எழுதிய ‘Beloved’ (அன்புக்குறியவர்) என்ற நாவல் இவரை உச்சிக்கு எடுத்துச்சென்றது மட்டுமில்லாமல், உலகம் முழுதும் பல ரசிகர்களை பெற்றுத்தந்தது.

முத்தலாக் தடையை மீறினால் தண்டனை

முத்தலாக் - இஸ்லாமிய முறையில் மனைவியை பிரிய நினைக்கும் கணவர், மூன்று முறை ‘தலாக்’ என்று சொல்லி உடனடி விவாகரத்து செய்யும் முறை. பல பெண்கள் வாட்ஸ்-அப் மூலமாகவும், தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும் கூட விவாகரத்து செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. முத்தலாக்கை முழுவதுமாக தடை செய்ய, முத்தலாக் கொடுக்கும் கணவனின் பெயரில் மனைவியோ அல்லது நெருங்கிய உறவினரோ புகார் கொடுத்தால், மூன்று ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் செலுத்த வேண்டும். மேலும், மனைவி தன் குழந்தைகளுடன் வாழவும், அதற்கு கணவன் ஜீவனாம்ஸம் தரவும் வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது.   

சவுதிப் பெண்கள் வெளிநாடு போகலாம்!

சவுதி அரேபிய அரசாங்கம், கடந்த சில காலமாக பெண்களுக்கு பல உரிமைகளை தரும் சிறப்பு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. பெண்கள் வாகனம் ஓட்டவும், பெண்கள் செய்தியாளர்களாக பணியாற்றவும் அனுமதியளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்போது 21 வயதை தாண்டிய பெண்கள், வெளிநாட்டிற்கு படிக்கவோ, வேலைக்காகவோ, அல்ல சுற்றுலா செல்லவோ, இனி தன் குடும்பத்தில் இருக்கும் அப்பா, அண்ணன், கணவர் என யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆண் துணை இல்லாமல் விமானத்தில் பயணம் செய்யலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிஉள்ளது.

திருநங்கை அழகிப் போட்டி

கடந்த வாரம் மெக்சிகோ நகரில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. எல்லா அழகிப்போட்டி நடைபெறுவது போல் இதிலும் பல சுற்றுகள் இருந்தன. பிக்னி, பிராந்திய உடை மற்றும் பாரம்பரிய உடைகளில் திருநங்கைகள் தங்களின் அழகினையும் திறமையையும் வெளிப்படுத்தி மேடையை அலங்கரித்தனர். இதில் இந்தாண்டு அழகிப் பட்டத்தை மெக்சிகோவின் கொலிமா மாநிலத்தை சேர்ந்த இவானா கசார் பெற்றார்.

பிங்க் கோச்!

பறக்கும் ரயில்களில் பெண்களுக்கு என தனிப் பெட்டிகள் உள்ளது. அதே போல் தனிப் பெட்டிகளை மற்ற ரயில்களிலும் ரயில்வே துறை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி தனியாக பயணிக்கும் பெண்கள் மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். தனியாகவும் கைகுழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் வசதிக்கு ஏற்ப இந்த சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதன்படி, குறைந்தது இரண்டு பெட்டிகள் பெண்களுக்கானதாக அறிமுகப்படுத்தபட உள்ளன. இந்த பெட்டிகளை பெண்கள் எளிதில் அடையாளம் காண்பதற்காகவே பிங்க் நிறத்தில் கொண்டு வர உள்ளனர்.

படகு போராட்டம்

கிரீட்டா தன்பர்க், 15 வயது நிரம்பிய பள்ளி மாணவி. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். காலநிலை மாற்றத்தை எதிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் பாராளுமன்றம் முன்பு கடந்த ஆண்டு முதல் போராட்டம் நடத்தினார். இவரின் போராட்டத்திற்கு 112 நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆதரவு கொடுத்தனர். தற்போது இவரின் இந்த போராட்டத்தை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல இருக்கிறார். அதில் முதல் கட்டமாக அமெரிக்காவிற்கு படகு மூலம் தன் போராட்டத்தின் மையக் கருவை கொண்டு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார் கிரீட்டா தன்பர்க்.

- ஸ்வேதா கண்ணன்