செல்லுலாய்ட் பெண்கள்
நிலவின் குளிர் நிழல் அழகின் பிரதி பிம்பம் புஷ்பலதா : 66
நடிகை புஷ்பலதா என்றதுமே எப்போதும் நினைவில் நிழலாடுவது,‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது’ பாடல்தான். அந்தப் பாடலின் இடையில், //‘குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ’// என்று நடிகர் பாலாஜி வாயசைத்து நடிக்க, புஷ்பலதா அத்தான் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாக நாணத்தில் பூத்துக் குலுங்கி, இடது பக்கக் கன்னத்தில் அழகான குழி விழ, முழு நிலவைப் பார்த்து ஒயிலாக மலர்ந்து சிரிப்பார் பாருங்கள்;
அந்த அத்தானோடு சேர்ந்து நம் அத்தனை பேரின் மனங்களையும் கொள்ளை கொள்ளுவார். எத்தனையோ படங்களில் புஷ்பலதாவைப் பார்த்து ரசித்திருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் மட்டும் கொள்ளை அழகுடன் என்றும் நீங்காத நினைவுகளில் மூழ்கி நம்மைக் கிறங்க வைத்து விடுவார். மிக அழகான நடிகைகளில் ஒருவர்.
நடிப்புத் திறனிலும் குறை சொல்ல முடியாதவர். ஒரு சில படங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகி அல்லது அக்காள், அண்ணி, தங்கை இப்படியான வேடங்களே அவருக்கு அளிக்கப்பட்டது புரியாத புதிர். நாட்டியம் கற்றுத் தேறிய கோயமுத்தூர் பொண்ணு கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த பெண். 6 பெண் மக்கள், 2 ஆண் பிள்ளைகள் என எட்டு குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பத்தில் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவர்.
தந்தையாருக்குச் சொந்தமாகப் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிப்பதும் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வதும் தொழில். புஷ்பலதா குழந்தைப் பருவத்தில் சரியாகச் சாப்பிடாமல் மிகவும் மெலிந்து நோஞ்சான் குழந்தையாகக் காணப்படுவாராம். அதனால் தந்தையாருக்குப்பெரும் கவலை பிடித்துக் கொண்டது. ‘பெண் குழந்தை இப்படி நோஞ்சானாக இருக்கிறாளே’ என்று விசனப்பட்டு, நாட்டியம் கற்றுக் கொடுத்தால் குழந்தைக்கு அது சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும் என்று நாட்டியம் கற்க ஏற்பாடு செய்தார்.
7 வயது குழந்தை புஷ்பலதாவும் மிகச் சூட்டிகையாக நாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்தார். நோஞ்சான் உடலும் வெகுவேகமாகத் தேறியது. அக்காலகட்டத்தில் இறுக்கமான சூழலைக் கொண்ட குடும்ப உறவுகளுக்கு மத்தியில், பெண் குழந்தையை நாட்டியம் கற்க அனுப்பியது உறவினர்களிடையே பெரும் புரளிப் பேச்சாக மாறியது. குடும்பப் பெண்கள் நாட்டியம் கற்பதும் ஆடுவதும் கௌரவமானதல்ல என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருந்ததால், உறவினர்கள் இவர்கள் குடும்பத்தைத் தங்கள் உறவிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார்கள்.
நாடகமும் நாட்டியமும் பெரும் துணையானது.
9 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நிகழ்ந்த்து. புஷ்பலதாவின் வாழ்க்கையை அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு நகர்த்துவதில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அந்தக் கால நாடக நடிகைகளில் ஒருவரும் ஹார்மோனியக் கலைஞருமான பி.எஸ். ரத்னாபாய். வீட்டுக்கு அருகிலேயே இருந்த அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால், புஷ்பலதா மீது மிகுந்த வாஞ்சையும் அன்பும் கொண்டவராக இருந்தார்., பெரும்பாலான நேரங்களை அவர் வீட்டிலேயே கழித்தார் புஷ்பலதா.
அங்கிருந்தான் நாடகத்துறை சார்ந்தவர்களுடன் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தந்தையாரின் நிதி நிலையும் ஆட்டம் கண்டது. குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அதனால், பத்து வயதிலிருந்தே நாட்டிமும் நாடகமும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கைத் தேவையாக ஆனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்துடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு எம்.ஜி.ஆரின் பல நாடகங்களில் நடிப்பதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தது. அது திரையுலகை நோக்கியும் மெல்ல நகர்த்திச் சென்றது.
‘நல்ல தங்கை’யாகத் திரையுலகுக்கு அறிமுகம்
‘மந்திரிகுமாரி’ படத்தில் கள்ளர் கூட்டத் தலைவனாக, பிரதான வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன், கோவையைச் சேர்ந்தவர். தங்கள் ஊர்ப் பெண் என்ற பாசத்திலும் புஷ்பலதாவை நாடகங்களில் பார்த்திருந்ததாலும் அவரது திறமை மீது இருந்த நம்பிக்கையிலும் தான் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ‘நல்ல தங்கை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். 1955ல் ’நல்ல தங்கை’ படத்தில் குழந்தை முகம் மாறாத தோற்றத்தில் பதின்பருவச் சிறுமியாக பாவாடை, தாவணி அணிந்த சிறு பெண்ணாக அறிமுகமானார் புஷ்பலதா.
இரண்டும்கெட்டான் வயதாக இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. நாடகங்களிலும் நாட்டியத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அழகு கொஞ்சும் இளம் பெண்ணாக ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
புஷ்பலதாவின் பாத்திரப் படைப்புகள்
புஷ்பலதா ஏற்று நடித்த படங்களிலும் மிகவும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவராக, பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகப் பல படங்களில் தோன்றியிருக்கிறார். ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண் சகுந்தலா (புஷ்பலதா). மூத்த அக்காள் கோகிலா (சாவித்திரி), படித்தவள் என்றாலும் உலகம் அறியாத வெகுளிப்பெண். இளம் பெண்ணுக்கே உரிய எந்தப் பண்பு நலன்களையும் கடைப்பிடிக்கத் தெரியாதவள். அதனால் சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் கெட்ட பெயரையும் அபவாதத்தையும் சேர்த்தே சுமக்கிறாள்.
ஆனால், அதன் பின் விளைவுகள் எதையும் அறியாதவள். தங்கை கோகிலாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அண்ணன் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) ஊராரின் பேச்சுக்குப் பயந்து மான அவமானங்களைப் பெரிதாக எண்ணி, வீட்டையும் ஊரையும் உறவுகளையும் துறந்து கண் காணாமல் ஓடிப் போகிறான். ஏராளமான சொத்துகள் இருந்தபோதும் மகள் கோகிலாவின் பொருட்டு ஊரார் ஏற்படுத்திய பழியால் மரியாதை இழந்து விரக்தி மனப்பான்மையுடன் இருக்கும் தந்தை (எஸ்.வி.ரங்காராவ்).
தாயில்லாத வீடு. ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு இளைய மகள் சகுந்தலாவுக்கு. அன்பு, கண்டிப்பும் கறாருமான தன்மை, எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை என வீட்டின் ஒட்டு மொத்தப் பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்து நிறைவேற்றும் பெண்ணாக அற்புதமாகவே நடித்திருந்தார்.
வெகுளிப்பெண் பாத்திரத்தில் சாவித்திரிக்குக் கிடைத்த பெயரிலும் புகழிலும் பாதியளவாவது புஷ்பலதாவுக்குக் கிடைத்ததா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். நல்லதோர் பாத்திரப் படைப்பு இந்த சகுந்தலா. ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் கூட ஏறக்குறைய இதே மாதிரியான பாத்திரம்தான். முறை மாப்பிள்ளை பிரபு (பாலாஜி) பல பெண்களுடன் தொடர்பு கொண்டு திரியும் பொறுப்பற்றவன்.
அதனால், அவனது தந்தை (முத்தையா) தன் மகனை மணக்க இருக்கும் முறைப்பெண்ணான தங்கை மகளின் (புஷ்பலதா) பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டு செத்துப் போகிறார். ஒவ்வொரு முறை அவளிடம் பணத்துக்காக அவளைக் காதலிப்பது போல் குழைந்து பேசி பணம் கேட்கிறான். அநாவசியச் செலவுகளுக்குப் பணம் தர மறுக்கும் கறார்ப் பெண்ணாக அவள் இருக்கிறாள்.
பி.எஸ்.ராமையா அவர் காலத்துக்கு ஏற்ப எழுதிய கதை. ஆனால், 60களிலும் அப்படி ஒரு ஸ்திரீலோலனை மணக்க மனமார சம்மதிக்கும் பெண்ணாக அந்த மல்லிகா பாத்திரம் படைக்கப்பட்டிருந்தது. அதுசரி, எல்லாக் காலத்திலும் இப்படியான ஆண்களும் அவர்களைத் திருத்துவதற்காகவே பிறவி எடுத்த பெண்களும் இருக்கிறார்கள்தானே...ஆனால், தன் அத்தான் வேறொரு பெண்ணை (விஜயகுமாரி) காதலித்து அவளுக்கு துரோகம் செய்திருக்கிறான் என்ற உண்மை தெரிய வரும்போது, அவனைப் புறக்கணிக்கவும் அவள் தயங்கவில்லை.
சகோதரிகளே போன்ற இருவர்
‘பார் மகளே பார்’ படத்தில் வசதியான வீட்டுப் பெண்களேயானாலும் கண்டிப்பு மிக்க தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாக சந்திராவும் காந்தாவும் (விஜயகுமாரியும் புஷ்பலதாவும்). மூத்த பெண் சந்திரா அப்பாவைப் பார்த்து பயந்து நடுங்க, இளைய மகள் காந்தா, நியாயமான காரணங்களுக்காக அப்பாவிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசும் குணமுள்ளவள்; அதே நேரம் சுயமரியாதை மிக்கவளும் கூட ‘வெட்கமாய் இருக்குதடி, இந்த வேலவர் செய்திடும் வேலை எல்லாமே’ என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து பரத நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.
புஷ்பலதா முறையாக பரதம் பயின்றவர். விஜயகுமாரிக்கு நாட்டியம் பரிச்சயம் இல்லாதது. ஆனால், அந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள் இருவருமே மிகச் சிறப்பாக ஆடியிருப்பார்கள். விஜயகுமாரி பலமுறை ஒத்திகை பார்த்து ஆட, எந்த ஒத்திகைக்கும் வராமலே மிக எளிதாக ஆடி விட்டார் புஷ்பலதா என்று இந்தப் படம் பற்றிய தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகை விஜயகுமாரி. விஜயகுமாரி - புஷ்பலதா இருவரும் பல படங்களில் இணைந்து சகோதரிகளாக, உற்ற தோழிகளாக, அண்ணி - நாத்தனார் உறவில் என நடித்திருக்கிறார்கள். அசப்பில் உடன் பிறந்த சகோதரிகள் போன்றே தோற்றம் கொண்டவர்கள் இவர்கள். இருவரும் கோயமுத்தூர் காரர்கள். இருவரும் இணைந்து நடித்த பல பாடல்கள் மிகப் பெரும் ஹிட் பாடல்கள். ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி’, ‘அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்’, ‘கட்டித் தங்க ராஜாவுக்குக் காலை நேரம் கல்யாணம்’ போன்ற பாடல்களைச் சொல்லலாம்.
படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கைத் துணையாகவும் மாறியவர்கள்
‘நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமான ஏ.வி.எம் ராஜனுடன் இணைந்து அப்படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அறிமுகம், அதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது. புதுக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட சண்முக சுந்தரம் என்ற ஏ.வி.எம். ராஜன், ஏற்கனவே திருமணமானவர். புஷ்பலதா மீது கொண்ட தீவிர காதல் 1964 ல் திருமணத்தில் முடிந்தது. திரையுலகில் இம்மாதிரியான காதலும் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கை என்பதா? சாபக்கேடு என்பதா? இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகள்கள்.
அவர்களில் மூத்த மகள் மகாலட்சுமி. இவர் ஸ்ரீ என்ற பெயரில் ‘ராணித்தேனீ’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கு, கன்னட மொழியில் அதிகமான படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் அசல் வாழ்க்கையில் இணைந்தாலும் அழகான ஜோடியாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 15 மட்டுமே. ஜெமினி கணேசன் - சாவித்திரி, எஸ்.எஸ். ராஜேந்திரன் - விஜயகுமாரி இணையைப் போல் தொடர்ச்சியாக இருவரும் அதிக எண்ணிக்கையில் இணைந்து நடிக்கவில்லை. கதாநாயகியாகச் சில படங்களிலும் அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் திரை வாழ்க்கையைத் தொடர்ந்தவர் புஷ்பலதா.
* எம்.ஜி.ஆரின் கண் பார்வையற்ற தங்கையாக ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடித்தார். * சிவாஜிக்கு மகளாக பல படங்களில் நடித்தவர். அதே சிவாஜி கணேசனை வளர்த்து ஆளாக்கும் தாதியாகவும் ‘வசந்த மாளிகை’ படத்தில் நடித்தார். குறைந்த நேரமே தோன்றினாலும், கருணை பொங்கும் கண்களுடன் ஒரு இளம் விதவையாக, அன்பே உருவாகத் தோன்றுவார். அன்பு செலுத்துவதாலேயே ஜமீன்தாரிணியால் (சாந்தகுமாரி) துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் துறப்பார். அந்தக் கொலையை நேரில் பார்க்கும் சிறுவன் வளர்ந்த பின்னும் தாய் மீது பிடிப்பற்றவனாக பெரும் குடிகாரனாக மாறுவான். * ஜெமினி கணேசனுடன் இணையாக ‘ராமு’ படத்தில் கொஞ்ச நேரமே தோன்றினாலும் அவர்கள் இருவருக்குமான ‘பச்சை மரம் ஒன்று; இச்சைக்கிளி ரெண்டு’ பாடல் பெரும் வெற்றி பெற்றது. * முத்துராமன், கல்யாண் குமார், சிவகுமார் என பலருடனும் இணைந்து நடித்தவர். * கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளியான, ‘தாயே உனக்காக’ படத்தில் சிவகுமாருக்கு ஜோடி. போர் முனையிலிருந்து விடுமுறையில் திரும்பி வரும் வீரனாக சிவகுமாரும் அவரது காதலியாக புஷ்பலதாவும் நடித்திருந்தனர். இப்படம் ‘Ballad of a Soldier” என்ற ஒரு ரஷ்யப் படத்தின் தமிழ் வடிவம். வீட்டில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டுக் கிளம்பும் கதாநாயகி, ஒவ்வோர் இடமாகச் சென்று சேர்வதும் மீள்வதுமாக இருப்பார். நட்புக்காக பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதும் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. * ‘கவிதா’ என்றொரு படம் 60களில் வெளியானது. அதில் இளம் துப்பறிவாளராக பல்வேறு வேடங்களில் நம்பியாருடன் இணைந்து சாகசங்கள் செய்வார்.
70களிலேயே அம்மா வேடங்களுக்கு வந்தவர். பின்னர் கொடுமைக்கார மாமியார் வேடங்களையும் அவர் ஏற்கத் தயங்கவில்லை. புஷ்பலதாவைப் பொறுத்த வரை கதாநாயகியாக நடித்த படங்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், துடுக்குத்தனமும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். திரையுலக வாழ்வின் இறுதிக் காலத்தில் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களை ஏற்றார். ஏராளமான தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர்.
வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சொந்தப்பட முயற்சி
புஷ்பலதாவும் ராஜனும் 1984ல் சொந்தமாக இரு படங்களை தயாரித்தனர். ஆனால், அந்தப் படங்கள் தோல்வி அடைந்ததால் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, 80களுக்குப் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாதது என குடும்பமே சூறாவளியில் சிக்கியது. அது அவர்களின் வாழ்க்கையின் திசைப் போக்கையும் புரட்டிப் போட்டது.
ராஜன் ஆழ்ந்த இந்து மத நம்பிக்கையும் மகமாயி மீது பக்தியும் கொண்டவர். புஷ்பலதா பிறப்பால் கிறித்தவர். மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர். யார் சொல்லி யார் கேட்டார்கள் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் இறங்க வேண்டாம். ஏதோ ஒரு தேவை அல்லது ஆறுதல், 1988ல் குடும்பத்தவர்கள் ஒவ்வொருவராக கிறித்துவ மதத்துக்கு மாறினார்கள்.
திரைப்பட உலகை விட்டு விலகி, முற்றிலும் அதற்குத் தொடர்பற்றுப் போனார்கள். இப்போது குடும்பத்தினர் அனைவரும் முழு நேர மத போதகர்களாக மாறியிருக்கிறார்கள். ஏ.வி.எம். ராஜனின் பெந்தெகொஸ்தெ உரைகளைச் சில நேரங்களில் யுட்யூபில் காண முடிகிறது. புஷ்பலதா துணிச்சலுக்குப் பெயர் போனவர் என பாராட்டுகளாலும் புகழுரைகளாலும் பலராலும் சித்திரிக்கப்பட்டவர்.
குறிப்பாக, கவிஞர் கண்ணதாசன் டி.ஆர்.ராஜகுமாரி, தேவிகா, மனோரமா, புஷ்பலதா என நான்கு தமிழ்த் திரைப்பட நடிகைகளைப் பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார். எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னிடம் வாலாட்டிய ஒரு நபரிடம் பலர் முன்னிலையில் செருப்பைக் கையில் எடுத்துக் காண்பித்ததாக புஷ்பலதாவின் துணிச்சல் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். அப்படிப்பட்ட துணிச்சல்காரர் ஏன் பொருளாதார நஷ்டத்தைக் காரணமாக்கித் திரையுலகை விட்டே காணாமல் போனார்? மதம் சார்ந்த செயல்பாடு முற்றிலும் அவர்களின் சொந்த விருப்பம். ஆனால், நல்ல திறமை வாய்ந்த நடிகர்களைத் திரையுலகம் இழந்து விட்டது வருத்தமானது.
(ரசிப்போம்!)
நடிகை புஷ்பலதா நடித்த திரைப்படங்கள்
நல்ல தங்கை, செங்கோட்டை சிங்கம், யாருக்கு சொந்தம்?, பணம் பந்தியிலே, செங்கமலத் தீவு, நானும் ஒரு பெண், சித்ராங்கி, கவிதா, பார் மகளே பார், ஏழைப் பங்காளன், வானம்பாடி, பச்சை விளக்கு, ஆலய மணி, கை கொடுத்த தெய்வம், தாயே உனக்காக, சாரதா, மணியோசை, காட்டு ரோஜா, போலீஸ்காரன் மகள், ஆண்டவன் கட்டளை, செல்லப் பெண், மகிழம்பூ, பால் குடம், எங்கள் தங்கம், கற்பூரம், பணமா பாசமா, ஜீவனாம்சம், தரிசனம், வசந்த மாளிகை, திருமலை தெய்வம், புது வெள்ளம், தீர்க்க சுமங்கலி, குமார விஜயம், நீதிக்குத் தலைவணங்கு, சத்யம், உத்தமன், ஆயிரம் ஜென்மங்கள், ஆடு புலி ஆட்டம், அண்ணன் ஒரு கோயில், நவரத்தினம், முத்தான முத்தல்லவோ, அதைவிட ரகசியம், சிட்டுக்குருவி, திரிசூலம், பருவமழை, கந்தர் அலங்காரம், கல்யாண ராமன், மல்லிகை மோகினி, நீதிக்கு முன் நீயா நானா?, பகலில் ஒரு இரவு, வீட்டுக்கு வீடு வாசப்படி, வெற்றிக்கு ஒருவன், தர்மயுத்தம், நாடகமே உலகம், பட்டாக்கத்தி பைரவன், அவன் அவள் அது, தர்மராஜா, கீதா ஒரு செண்பகப்பூ, காதல் கிளிகள், காளி, ருசி கண்ட பூனை, சூலம், அன்னப்பறவை, ரத்த பாசம், பெண்ணின் வாழ்க்கை, முறைப்பொண்ணு, சிம்லா ஸ்பெஷல், டௌரி கல்யாணம், இளைய பிறவிகள், சீறும் சிங்கங்கள், சகலகலா வல்லவன், தேவி தேவி, ஊருக்கு உபதேசம், பிள்ளையார், உறவைக் காத்த கிளி, நினைவுகள், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, காலம் மாறுது, மாமியார்கள் ஜாக்கிரதை, பூவாசம்.
- ஸ்டில்ஸ் ஞானம்
|