நல்வாழ்வருளும் நல்லிச்சேரி நந்திமங்கை



சக்தி தரிசனம்

திருவையாறு தலத்தில் ஐயாறப்பர்தான் நந்திதேவருக்கு நந்தி எனும் திருநாமத்தோடு பஞ்சாட்சரத்தையும் ஓதினார். தர்மத்தின் வடிவான நந்தியையே தமது வாகனமாக்கி ஈசன் அதன் மீதேறி அமர்ந்தார். திருமழபாடியில் நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயங்களுமாக மொத்தம் ஏழு தலங்களிலிருந்தும் ஏழு விஷயங்கள் கொணரப்பட்டது.

அவையே ஈசனின் சப்த ஸ்தானங்கள் ஆனது. அதேபோல இந்த நல்லிச்சேரி எனும் தலத்திற்கு நந்தி மங்கையில் பஞ்சாட்சரத்தை ஜபித்து ஈசனை பூஜித்தார். ஈசனின் திருக்கழல் ஸ்பரிசத்தை உணர்ந்த எனக்கு அந்த திருப்பாத தரிசனம் எப்போது கிட்டும் என்று ஏக்கத்தோடு தீவிரமாக பூஜித்து தரிசனம் பெற்றாராம். இவ்வாறு நந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும்.

நந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்தி தாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள். திருவானைக்கா போல ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமியாகும். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியை தேடினாள். அது எல்லை காணாத விஷயம் என்பதை அறிந்தவள் தம் இருதயக் குகையில் சிக்கெனப் பிடித்தாள்.

எப்போதும் கால் தூக்கி நடனமிட்டபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாகப் பார்த்தாள். திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார். இங்கு சென்றால் இன்ன தரிசனம் கிட்டும் என்று எப்படி அறிந்து வந்திருக்கிறாள்? பிரபஞ்சத்தின் வட்டச் சுழற்சியை உணர்த்தும் கழலின் அழகை கண்டு தன்னை மறந்தாள்.

தன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்கார வல்லியானாள். பின்னாளில்  எரேனும் தன்னையும் சேர்ந்தே தரிசிப்பார்கள் என்றே. சப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்றவள். கருடன் மீதேறி, சங்கமும் சக்ரமும் கதையும் சார்ங்கம் எனும் வில்லும், நந்தகீ எனும் வாளும் ஏந்தி வந்த விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீல நிற நாயகி இவள். ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள்.

வலிமையும் உற்றாள். அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரையும், அலங்காரவல்லியையும் தரிசித்தார்.
அம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள்.

அதே தரிசனத்தைத்தான் அநவித்யநாத சர்மாவும் பெற்றிருக்கிறார். இத்தலத்தில் காசியைப்போல் அருகேயே மயானமும் அதை நோக்கிய சிவ சந்நதியும் இருக்கிறது. சூரிய பூஜை நடைபெறும் தலம். வெள்ளெருக்கு இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது. தஞ்சாவூர் & கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மெயின்ரோட்டிலேயே இக்கோயிலுக்குச் செல்வதற்கான வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.

- கிருஷ்ணா.