அமலாபால் என்னை அழ வைத்தார்ஆடைகாஸ்ட்யூம் டிசைனர் கவிதா

ஆடை படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் நான்காவது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது ஆடை படம்.  அந்தப் படத்தில் நடிகை அமலா பாலுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த கவிதாவிடம் சர்ச்சைக்குள்ளான ஆடை படம் குறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

? ஆடை வடிவமைப்பாளராக உங்களைப் பற்றி...

நான் சென்னைப் பொண்ணு. ஆனால் என் தாய்மொழி தெலுங்கு. சின்ன வயதில் இருந்தே எனக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. அண்ணா ஆதர்ஷ் பள்ளியில் +1ல் ஃபேஷன் டிசைனிங் பிரிவை தேர்வு செய்தேன். தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில்  இருந்த ‘பியர்ல் ஃபேஷன்
அகடமி’ யில் இணைந்து பேஷன் டிசைனிங் படித்தேன். நான்கு ஆண்டுகளாக சினிமாத் துறையில் ஃபேஷன் டிசைனராக இருக்கிறேன். எனது முதல் பட வாய்ப்பு அஞ்சான் படத்தில் அமைந்தது. தொடர்ந்து லிங்கா படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆடை வடிவமைப்பாளராக என் வேலை பிடித்துப் போகவே தொடர்ந்து காஷ்மோரா, இறைவி, தில்லுக்கு துட்டு, துப்பறிவாளன், ஜூங்கா, அடங்கமறு, சிந்துபாத், ஆடை என வாய்ப்புகள் தொடர்ந்தன. இப்போது நடிகர் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல், சிம்ரன்-த்ரிஷா இணையும் சுகர், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் என பணிகள் தொடர்கிறது. துவக்கத்தில் அஞ்சான் மற்றும் லிங்கா படத்தில் ஒரே நேரத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை ஆடை வடிவமைப்பாளராக 20 படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

? திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனரின் பங்களிப்பு குறித்து...

ஆடை வடிவமைப்பை பொறுத்தவரை பொறுப்பு முழுவதும் எங்களுடையது. இது ஒரு டீம் ஒர்க். இதில் பிளானிங் மற்றும் ஃப்ரீ புரொடக் ஷன் வேலைகள் நிறையவே உண்டு. ஆடைகளை வடிவமைப்பது என்பது கதையைப் பொருத்தது. சில படத்தில் உடைகள்தான், கேரக்டராகவே பார்ப்பவருக்கு கன்வே ஆகும். மூட் ஆப் தி ஃபிலிம் என ஒன்று உள்ளது. அதுவும் உடைகளையே கன்வே பண்ணும். படத்தின் முழுக் கதையும் தெரிந்தால் உடைகளை வடிவமைப்பது ரொம்பவே சுலபம். படம் முடிவானதுமே காஸ்டியூம் டிசைனிங் வேலைகளைத் தொடங்கிவிடுவோம். கேரக்டர்ஸ், பேட்டர்ன், கலர்  இவற்றை இயக்குநர், டைரக்டர் ஆஃப் போட்டோ கிராஃபர், நடன இயக்குநர்கள் இவர்களோடு அமர்ந்து பேசி முடிவு செய்வோம். போட்டோ சூட் மற்றும் பாடல்களை எடுக்கும்போது காஸ்டியூம் டிசைனராக ஒருவர் உடன் இருப்போம். அப்போதுதான் உடைகளை ஹைலைட் செய்து படத்தில் காட்ட முடியும்.

? ஆடை படத்திற்குள் நீங்கள் வந்தது குறித்து…

படப்பிடிப்புத் தளத்தில் பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் நடிகை அமலாபால் கூடவே இருந்தால் நன்றாய் இருக்கும் என முடிவு செய்து வந்ததே இந்த வாய்ப்பு. நான் செய்யும் வேலைகளைப் பார்த்து இயக்குநர் ரெத்னகுமார் சார் என்னை இந்தப் படத்தில் ஓ.கே செய்தார்.

? ஆடை படத்தில் உங்களின் பங்களிப்பு …

‘ஆடையே இல்லாத படத்தில் ஆடை வடிவமைப்பாளருக்கு என்ன வேலை’ என எல்லோரும் என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியே என்னை கஷ்டப்படுத்தியது. இந்தப் படத்தில் எனக்கு நிறையவே வேலைகள் இருந்தது. முழு கதையும் எனக்கு முன்பே சொல்லப்பட்டதால், நிறைய டிஸ்கஷன்கள் செய்து, பிளான் செய்த பிறகே ஆடை படத்தின் உடைகளை டிசைன் செய்தேன்.

? படத்தில் நடிகை அமலாபாலின் நியூட் போர்ஷன் குறித்துச் சொல்லுங்கள்…

படத்தில் இருபது நிமிடங்கள் வரும் காட்சி அது. 30 நாட்கள் சூட்டிங் நடந்தது.  அந்த போர்ஷன் எடுக்கும்போது மட்டும் நிறைய வேலைகள் இருந்தது. எனக்கு அந்த நேரத்தில் ரொம்பவும் பயமாகவும் டென்ஷனாகவும் இருந்தது. நியூட் போர்ஷன் எடுக்கும்போது என் மானம் இல்லை, இன்னொரு பெண்ணின் மானம் என் கைகளில் இருந்தது. இயக்குநர் கேட்டால் நிறைய டிசைன் அல்லது நிறைய கலர் அல்லது நிறைய பேட்டன்களை கொண்டு வந்து என்னால் காட்ட முடியும்.

ஆனால் நியூட் போர்ஷனைப் பொறுத்தவரை இது எதற்குள்ளும் வராது. மானத்தை கவர் பண்ண என்ன இருக்கு என்பதை இயக்குநரிடமோ படத்தின் டீமிடமோ காட்ட முடியாத நிலை எனக்கு. இந்த விசயத்தில் டைரக்டர் அண்ட் டீம் ரொம்பவே பிளைண்டாக இருந்தார்கள். எல்லாவற்றையும் நானும் நடிகை அமலாபாலும் சேர்ந்தே முடிவு செய்தோம். இதில் அமலா பால் பங்களிப்பு ரொம்பவே முக்கியம். என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இரண்டு பேரும் சேர்ந்து நிறைய டிஸ்கஸ் செய்தோம். இதற்கான உடை என எதையும் நாங்கள் ரெடிமேடாக வாங்கவில்லை. நாங்களே அனைத்தையும்
தயாரித்தோம்.

உடலில் படும் ஒளிக்கு ஏற்ப நம் ஸ்கின் நிறம் சற்றே மாறும். காஸ்டியூம் டிசைனரைப் பொறுத்தவரை நடிப்பவர்களின் ஸ்கின்னிற்கு ஏற்ப நிறைய விசயங்களை மேட்ச் செய்ய வேண்டும். இந்தப் படத்தில் அந்த மாதிரியான வேலைகள் நிறைய இருந்தது. அமலாபால் எந்த அளவுக்கு கேமராவுக்கு முன்னாடி இருந்தாரோ அந்த அளவிற்கு நான் அவருக்கு பின்னால் இருந்தேன்.  படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பிரேமையும் மானிட்டரைப் பார்த்து பார்த்து ஓ.கே. செய்தோம்.

? படத்தின் டீசரிலும் பஸ்ட் லுக் புரோமோஷனிலும் அவர் நியூடாக இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் கண்டிப்பாக அதற்கு வாய்ப்பில்லை. என்ன செய்தீர்கள்?

ரொம்பவே நியூடாக நடிப்பது சாத்தியமில்லை. அப்படி முழுமையாகப் போக முடியாத நிலையில் நிறையவே மெனக்கெடல் செய்திருக்கிறோம். இருக்கு ஆனால் இல்லை என்பது மாதிரிதான் இது. எல்லாவற்றையும் முழுமையாக இங்கு சொல்லிவிட முடியாது. பட் ஆல்மோஸ்ட் ஷி இஸ் நியூட். இரண்டாம் பாகம் முழுவதும் பிரேம் டூ பிரேம் சில விசயங்களை மாற்றிக்கொண்டே இருந்தோம். இதில் அமலாபால் ரொம்பவே கஷ்டப்பட்டார்.  

? நியூட் போர்ஷன் படப்பிடிப்பு குறித்து...

துவக்கம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. முதல் நாள் நான் அவரின் நடிப்பை பார்த்து அழுதுவிட்டேன். முக்கியமாக ஆடை டீமை பாராட்டவேண்டும். ஒரு யூனிட் என்றால் குறைந்தது நூறு பேர் இருப்பார்கள். ஆனால் மிக மிகக் குறைவானவர்களே உள்ளிருந்தார்கள். அவரவர் வேலையை மட்டும் செய்தார்கள். இயக்குநர், கேமராமேன், லைட் மேன்கள், போக்கஸ்மேன் மற்றும் நான் என மொத்தம் ஒரு ஏழு பேர் மட்டுமே உள்ளிருந்தோம். இதில் தப்பான கண்ணோட்டம் என்பதே அங்கில்லை. அவரவர் வேலையை முடித்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றார்கள். ஒரு ஆர்ட்டிஸ்டா அமலாபால் அவரின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு நடிகை தன் கேரக்டருக்காக இந்த அளவு டெடிகேட்டா இருக்காங்களே என எல்லோருமே அவரவர் பெஸ்ட்டை முடிந்தவரை படத்தில் கொடுத்திருக்கிறோம்.

? படத்தின் சவாலான காட்சிகள் குறித்து…

அமலாபால் கண்ணாடி வைத்து உடலை மறைத்துக்கொண்டே மொட்டை மாடியில் சுற்றுவார். ஒரே ஷாட்டில் எடுத்த காட்சி அது. அந்த காட்சி எடுக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஹேண்டி கேம் வச்சுதான் எடுத்தார்கள். அவர் சுற்றுவது பிரேம் முழுவதும் தெரியும். எனவே பிரேமை சுற்றி கேமராவுக்குப் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தோம். மானிட்டருக்குப் பின்னாலும் ஏழு பேர் சுற்றினோம். ஷாட் முடிந்ததும் அமலாபாலை கவர் பண்ணுவதுதான் என்னுடைய முதல் வேலையாக அங்கிருந்தது. டிஸ்யூ காஸ்டியூம் போட்டு எடுத்த ஷார்ட்டில் இயக்குநர் ஒரிஜினல் டிஸ்யூ காஸ்டியூம்தான் இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.

எனவே ஒரிஜினல் டிஸ்யூ பேப்பரை சுற்றித்தான் அந்த காட்சிகளை படமாக்கினோம். டிஸ்யூ பேப்பரை சுற்றிய பிறகு அவரால் உட்காரவோ, வாஸ் ரூம் போகவோ, அடிக்கடி உள்ளே போய் வெளியில் வரவோ முடியாத நிலை. அந்த நேரத்தில் அமலாபால் ரொம்பவே கஷ்டப்பட்டாலும் நிறைய ஒத்துழைப்புத் தந்தார். அந்த காட்சிகளின் படப்பிடிப்பின் போது டிஸ்யூ கிழியக்கூடாது என நான் என் மனதுக்குள் பயந்து கொண்டே இருந்தேன்.
நாய்களுடன் சண்டை போடும் காட்சி, மழை பெய்யும் காட்சி, டு நாட் கிராஸ் காஸ்டியூம் (do not cross) என அடுத்தடுத்து எல்லாமே டென்ஷனை எகிற வைத்த காட்சிகளாக இருந்தது.

? இந்தப் படம் நிறைய சர்ச்சைகளை சந்தித்தது குறித்து…

சர்க்கஸில் நூலிைழயில் சாகசம் நிகழ்த்துவது மாதிரிதான் இந்தப் படமும். கேமராவின் எல்லா கோணத்திலும் நியூட் போர்ஷனை பதிவு செய்திருந்தாலும், எந்த விதத்திலும் ஆபாசமாக முகம் சுளிக்கும் காட்சிகள் காட்டப்படவில்லை. ஒரு நிமிடம் நினைத்திருந்தால் இந்தப் படத்தை மாற்றி இருக்க முடியும். ஆனால் படத்தின் டிக்னிட்டி என்பது கொஞ்சமும் குறையவில்லை.  இந்தப் படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் குறைவு. தணிக்கைத் துறையில் சில விதிமுறைகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர இது ‘ஏ’ படம் அல்ல. அப்படிப்பட்ட எந்த காட்சிகளும் இதில் திணிக்கப்படவில்லை. நியூடிட்டியை எதிர்பார்த்து வரும் சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள்.

எல்லா தரப்பினரும் குடும்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்கலாம். 99 மார்க் வாங்கிய ஒருத்தனிடம் இன்னும் ஒரு மார்க் வாங்கி இருந்தால் 100 மார்க் ஆகியிருக்குமே என்பதுபோல்தான் இந்தப் படத்தின் விமர்சனங்களும் வருகின்றது. இயக்குநரைத் தாண்டி இந்தப் படத்தில் கேமராமேன் மற்றும் எடிட்டரின் பங்களிப்பு ரொம்பவே முக்கியம். அதேபோல் இந்தப் படத்தின் லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருந்தது. அமலா பால் ஓடி வரும் காட்சிகளில் அவரின் வயிற்றில் இருந்து வரும் இரைச்சல் கூட தெளிவாக பதிவாகி இருந்தது. அமலா பாலின் அர்ப்பணிப்பான நடிப்பிற்காக இந்தப் படத்தை எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

மகேஸ்வரி
படம்: ஆ.வின்சென்ட் பால்