தயிர் சாதம் இல்லாமல் நான் இல்லை!



என் சமையல் அறையில்

நடிகர் அருள் டி சங்கர்


‘‘பார்க்கும் உணவை எல்லாம் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை. என்னை பொறுத்தவரை உணவுன்னா ஆரோக்கியமானதா இருக்கணும். அப்படிப்பட்ட உணவை நான் தேடி தேடி போய் சாப்பிடுவேன்’’ என்றார் நடிகர் அருள் டி சங்கர்.

தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைப் பார்த்த அருளுக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமா மேல் தனிப்பட்ட மோகம் இருந்தது. ஆனால் குடும்பம், கமிட்மென்ட் என்ற காரணத்தால தன் 40 வயது வரை காத்திருந்தவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று 2010ம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.

‘‘நான் பாலுமகேந்திரா அவர்களின் மாணவன். அவரிடம் துணை இயக்குநரா தான் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு படம் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் அந்த துறை உனக்கு செட்டாகாது, அதனால் நடிகனா மாறிடுன்னு அறிவுரை சொன்னார். குருநாதர் சொல்லை தட்ட முடியாது என்பதால் நடிகனாயிட்டேன். இது வரை 32 படங்களில் நடிச்சிருக்கேன்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் என் நடிப்பு பயணத்தை தொடர்ந்தேன். தற்போது ஏழு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். தமிழ் மட்டுமில்லை, மலையாள சினிமாவிலும் நடிச்சிட்டு இருக்கேன். விளம்பர படங்கள், குறும்படங்கள், டாக்கு மென்டரி படங்களிலும் நடிக்கிறேன்’’ என்றவர் தன் உணவுக்கான பயணம் பற்றி பேசத் துவங்கினார்.

‘‘நான் சைவ பிரியர். அசைவ உணவினை விரும்பி சாப்பிடமாட்டேன். நான் பெரிய அளவில் உணவு விரும்பியோ அல்லது அதிக ஈடுபாடு கொண்டவனோ கிடையாது. அதாவது எங்கு சாப்பாடு பார்த்தாலும் போய் சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை. அதே சமயம் ஆரோக்கியமான சுகாதாரமான சுவையான சாப்பாடுன்னா நான் அங்கு முதல் வரிசையில் இருப்பேன். இப்போது சினிமாவில் இருப்பதால் என் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நானும் என்னை மாற்றிக் கொள்ளணும். அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கணும்.

 அதனால்உணவில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். காலையில் எழுந்தவுடன் சீரக தண்ணீரை காய்ச்சி குடிப்பேன். அதன் பிறகு இரவு படுக்கும் முன் திரிபாலா பால் குடிப்பது என் வழக்கம். ஷூட்டிங்காக ஒரு முறை கேரளா சென்றிருந்தேன். அங்கு ஆப்பம், புட்டு, கடலை கறி, கட்டஞ்சாய் எல்லாம் ரொம்ப விரும்பி சாப்பிட்டேன். அதற்கு முக்கிய காரணம் அங்கு எல்லாமே வேக வைத்த உணவு என்பதால், உடம்புக்கு கெடுதல் செய்யாது, எல்லாவற்றையும் விட லைட் உணவு. கேரளாவில் இருந்து வந்த பிறகு கட்டஞ்சாயிக்கு நான் அடிமையாயிட்டேன்னு சொல்லலாம்.

சென்னையை பொறுத்தவரை இங்கு சில இடங்களில் சாப்பிட எனக்கு பிடிக்கும். அதையும் நான் ரொம்ப தேர்ந்து எடுத்து தான் சாப்பிடுவேன். அண்ணாநகரில் ‘கிரசன்ட்’ன்னு ஒரு ஓட்டல் இருக்கு. அங்கு வெஜிடபிள் ஃபிரைட் ரைஸ் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ஃபிரைட் ரைஸ் சாப்பிடணும்ன்னு எப்ப தோணுச்சுனாலும் அங்க போயிடுவேன். அப்புறம் ‘ஹாப்பி கூலிங்’. பெயருக்கு ஏற்ப அங்க ஜில்லுன்னு ஃபிரஷ் ஜூஸ் ரொம்பவே நல்லா இருக்கும். இதுவும் சென்னை அண்ணாநகரில் தான் இருக்கிறது.

பொதுவா சினிமா சம்மந்தமான டிஸ்கஷன்னா ‘காபி டே’ காபி ஷாப்புக்கு போவது வழக்கம். அங்க சுமார் இரண்டு மணி வரை அமர்ந்து பேசுவோம். அதே போல் சின்ன பட்ஜெட் படங்கள், குறும்படங்கள் மற்றும் டாக்குமென்டரி படம்ன்னா ஹாப்பி கூலிங் தான் என்னுடைய பெஸ்ட் ஸ்பாட். இங்க சமோசா மற்றும் இதர ஸ்னேக்ஸ் எல்லாம் இருக்கும். ஆனா நான் எப்ப போனாலும் என்னுடைய பேவரெட் பழச்சாறுகள் தான். ஒரு மணி நேரம் டிஸ்கஷன் போனாலும் அது எனக்கான இடம்.

அதன் பிறகு புகாரியில் வீட் பரோட்டா, அசோகா ஓட்டலில் மீல்ஸ். சூடான சாதத்துடன், பருப்பு பொடி, கோங்குரா தொக்கு, நெய் சேர்த்து தருவாங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். எக்மோர் பான்தியன் சாலையில் உள்ள சாண்ட்விச் என்னுடைய ஆல்டைம் பேவரெட். அங்க அடிக்கடி போய் சாப்பிடுவேன். கேரளா போனதிருந்து நான் டீக்கு அடிமையாயிட்டேன். அவங்களின் கட்டஞ்சாய் போல இங்கு மசாலா சாய் ஒரு கடையில் ரொம்ப ஃபேமஸ். அண்ணாநகரில் சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் என்பது பெரிய கடை.

அதன் அருகே ‘சாய்வாலா’ன்னு ஒரு டீக்கடை. அங்க மசாலா டீ ரொம்பவே நல்லா இருக்கும். ஒரு முறை சூப்பர் மார்க்கெட்டுக்கு போன போது தான் அந்த கடையை பார்த்தேன். சின்ன கடை தான். சரி போய் டீ சாப்பிடலாம்ன்னு தான் போனேன். அதன் பிறகு நான் அங்கு ரெகுலர் கஸ்டமரா மாறிட்டேன். எப்போதெல்லாம் டீ சாப்பிடணும்ன்னு தோணுமோ அப்பெல்லாம் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிடுவேன். இல்லைன்னாலும் ஒரு வாரத்தில் இரண்டு தடவை அங்க போயிடுவேன்.

‘‘மயிலாப்பூர் மிகவும் பரபரப்பான இடம். அங்கு காளத்தி நியூஸ் ேபப்பர் மார்ட் என்ற சின்ன கடையில் காலை முதல் இரவு வரை ரோஸ்மில்க் கிடைக்கும். 1927ம் ஆண்டு துவங்கப்பட்ட கடை. இங்கு அன்று முதல் இன்று வரை வெயில், பனி என எல்லா காலத்திலும் அதே சுவை மாறாமல் ரோஸ்மில்க் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டும் இல்லை மழை மற்றும் குளிர் காலத்திலும் அங்கு ரோஸ்மில்க் விற்கப்படும் என்பது தான் அந்த கடையின் சிறப்பே. நான் பொதுவா ஏழு நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிட மாட்டேன். அங்கு சாப்பிடவும் பிடிக்காது. ஆனால் சாலை ஓரம் இருக்கும் சின்னச் சின்ன கடைகளில் தான் எனக்கு சாப்பிட பிடிக்கும். அதற்கு காரணம் நான் ஆரோக்கியமான சுத்தமான உணவுக்குதான் முக்கியத்துவம்
கொடுப்பேன்.

பெங்களூரில் வித்யார்த்தி பவன். இது பெரிய நட்சத்திர ஓட்டல் எல்லாம் கிடையாது. சாதாரண உணவகம் தான். ஆனால் இங்கு மசாலா தோசை ரொம்ப நல்லா இருக்கும். ஷூட் போன போது தான் அங்கிருந்தவர்கள் நான் சைவம்ன்னு தெரிந்து என்னை இங்கு அழைச்சிட்டு போனாங்க. அவ்வளவு சுவையா இருந்தது.

அதே போல் திருச்சியில் உள்ள சங்கம் ஓட்டலில் இட்லி. திருவனைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் பொடி தோசை, கும்பகோணம் மெஸ்சில் ரவா தோசை, பாண்டிச்சேரி இந்தியன் காஃபி ஹவுசின் ஐஸ்கிரீம், கோவை அன்னப்பூர்ணா பன் பரோட்டா...’’ என்று சொல்லும் அருளுக்கு ஆல் டைம் பேவரெட் அவர் அம்மா வைக்கும் சின்ன வெங்காய சாம்பார் மற்றும் கருணைக்கிழங்கு வறுவலாம்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது, படிச்சது எல்லாம் பாண்டிச்சேரியில். சொந்த ஊரும் அதுதான். அம்மா அங்க இருக்காங்க. நான் வேலைக் காரணமா சென்னைக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுவைக்கு கிளம்பிடுவேன். அப்படி போகும் போது தான் ‘99 கிலோமீட்டர்’ என்ற உணவகம் என் கண்ணில் தென்பட்டது.

புதுவையில் இருந்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த களைப்பு ஒரு பக்கம் மறுபக்கம் பசியும் சேர்ந்து கொண்டது. எங்கேயாவதுஉணவகம் இருக்கான்னு பார்த்துக் கொண்டே வந்த போது தான் ‘99 கிலாமீட்டர்...’ உணவகம் கண்ணில் தென்பட்டது. காபி குடிக்க தான் உள்ளே போனேன். அங்கு மெனு கார்டை காண்பித்த போது கொஞ்சம் கலங்கிட்டேன்.

அங்கு எல்லா உணவுகளும் பாரம்பரிய முறையில்தான் தயாரிக்கிறாங்க. கேழ்வரகு தோசை, வாழைப்பூ வடை அவ்வளவு சுவையா இருந்தது. இது தவிர முடக்கத்தான் தோசை, கீரை வடை. கீரை தோசைன்னு 125 வகை தோசை அங்கு கிடைக்கும். காபி, டீ கூட பித்தளை டம்ளரில் தான். எனக்கான உணவகம்ன்னு கூட சொல்லலாம். இப்பெல்லாம் எப்ப பாண்டிச்சேரி போயிட்டு திரும்பி வரும் போது எல்லாம் இங்க சாப்பிடாம வருவதில்லை’’ என்ற அருள் வெளிநாட்டுக்கு சென்று அங்கும் தயிர்சாதம் தான் சாப்பிட்டு இருக்கார்.

‘‘நான் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்த போது அலுவலக வேலையா தாய்லாந்து சென்றேன். அங்க இறைச்சி இல்லாத உணவுகள் கிடையாது. சாதாரண சாலையோர கடைகளில் கூட விதவிதமான இறைச்சிகள் இருக்கும். சில சமயத்தில் எது சைவ உணவுகள் எது அசைவ உணவுகள்ன்னு வித்தியாசமே தெரியாது.

அதெல்லாம் பார்த்திட்டு என்னால அங்கு சாப்பிடவே பிடிக்கல. என்னுடைய நேரமோ என்னவோ, அங்கு தயிர் சாதம் இருந்தது. அங்கிருந்த ஏழு நாட்கள் முழுதும் என்னுடைய உணவு தயிர்சாதமாகவே மாறிடுச்சு’’ என்ற அருள் ரொம்பவே ஹெல்த் கான்சியசாம்.‘‘சின்ன வயசில் இருந்தே நான் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ். இருக்கிற வரை ஆரோக்கியமா இருக்கணும். எந்த வயசில் நம்மை பார்த்தாலும் அழகா தெரியணும். என்னுடைய உடம்புக்கு எது தேவையோ அதை மட்டும் தான் தேடிப் போய் சாப்பிடுவேன்.

என்ன உணவு சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்களின் விகிதத்தை தெரிந்து கொள்வேன். ஒரு பழம் சாப்பிட்டாக்கூட அதில் என்ன விட்டமின் இருக்குன்னு பார்ப்பேன். ஆனா என்னதான் நான் ஹெல்த் கான்சியசா இருந்தாலும் என் அம்மா வைக்கும் சின்ன வெங்காய சாம்பார், கருணைக்கிழங்கு வறுவல் மற்றும் என் மனைவி செய்யும் வெண்பொங்கலுக்கு நான் அடிமை. அவங்க சமைக்கும் பொங்களில் அதிக அளவு நெய்யோ அல்லது எண்ணையோ இருக்காது.

இருந்தாலும் அவ்வளவு சுவையா இருக்கும். வீட்டுல எனக்கு எப்போதுமே தனிப்பட்ட உணவினை என் மனைவி தான் தயார் செய்து தருவாங்க. கேழ்வரகு கூழ், இடியாப்பம், முளைக்கட்டிய பயறு போன்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இதை தவிர ஷூட் இல்லாத போது ஒரு கம்ப்ளிட் மீல்ஸ் வீட்டில் எனக்காவே இருக்கும். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம்ன்னு எல்லாமே இருக்கும்’’ என்றவர் கையில் எப்போதும் ஒரு பேக்கேட் பிஸ்கெட் இருக்குமாம்.

‘‘ஷூட்டிங்குக்காக நாம பல இடங்களுக்கு பயணம் செய்வோம். எங்க குழுவுடன் எப்போதும் சமையல்காரர் இருப்பார். சில சமயம் வரமாட்டாங்க. அல்லது ஷூட்டிங் முடிய காலதாமதமாயிடும். அந்த சமயத்தில் எனக்கு கைக் கொடுப்பது மேரி பிஸ்கெட் தான். எப்போதும் ஒரு சின்ன பேக்கெட் பிஸ்கெட் இருக்கும்’’ என்றார் சிரித்தபடியே நடிகர் அருள் டி சங்கர்.

வெங்காய சாம்பார் மற்றும் கருணைக்கிழங்கு ஃபிரை

தேவையானவை
சின்ன வொங்காயம் - ஒரு கப்
துவரம் பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்.
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு.

செய்முறை

பருப்பை கால் மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பை நன்கு கழுவி அதனுடன் தக்காளி,  சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். பிறகு அதனை நன்கு கடைந்து கொள்ளவும். புளியை கரைத்து அதனை கடைந்து வைத்துள்ள புளியுடன் சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு சிறித தண்ணீர் சேர்த்து மிளகாய் வாசனை போனதும், கடைந்துள்ள பருப்பை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும்.

கருணைக்கிழங்கு வறுவல்

கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதை தனியாக தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து கொண்டு, கடாயில் எண்ணை சேர்த்து அதில் சிறிது கறிவேப்பிலை, வேகவைத்த கருணைக்கிழங்கினை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும்.

ப்ரியா