ஸ்கல்ப்சுரல் பெயின் டிங் என்னும் சிற்ப ஓவியக்கலை!



கலைக்கும் கைத்தொழிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு தொழிலை நேர்த்தியாக செய்தால் அதுவே அவருக்குண்டான கலை. அப்படிப்பட்ட கலைகளில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டால் அதையே கைத்தொழிலாக மாற்றிக் கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் கைநிறைய சம்பாதிப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. எந்த ஒரு கலைக்கும் முக்கியமாக முயற்சியும் பயிற்சியும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட முடியும்.

தஞ்சாவூர் பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங், மணல் ஓவியம் இதன் வரிசையில் தற்போது புதுமையான கலை ஸ்கல்ப்சுரல் பெயின்டிங் (Sculplural Painting). சிற்ப கலையும் ஓவியமும் சேர்ந்தது தான் ஸ்கல்ப்சுரல் பெயின்டிங். இது ஒரு புதுவிதமான கலை. அந்தக் கலையை குறித்து முழுமையான பயிற்சி பெற்றுள்ளார் கிறிஸ்டினா ரஞ்சன். கல்லூரி விரிவுரையாளர் மற்றும் ‘கிறிஸ்டினா ஆர்ட் ஸ்டூடியோ’ எனும் கலை குறித்த பயிற்சி அளித்து வரும் இவர் ஸ்கல்ப்சுரல் பெயின்டிங் குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘கலைகளின் மீது எனக்கு தீராத காதல் உண்டு. தெருவில் கிடக்கும் கல்லை ஒருவர் வெறும் கல்லாகப் பார்ப்பார், அதே நேரத்தில் ஒரு கலைஞன் அதை சிற்பமாகப் பார்ப்பார். அப்படித்தான் வேஸ்ட் என தூக்கி எறியப்படும் பாட்டில்களையும் நான் கலைப் பொருட்களாக மாற்றி அமைத்தேன். அதற்கு டீகோபேஜ் என்னும் பெயர். தேவையற்ற பொருட்களை மட்டுமே கொண்டு கலைப் பொருட்களை அமைக்கலாம் என்றில்லை.

எழுத்துக்களை கொண்டும் கலை வண்ணம் படைக்கலாம். எழுத்துக்களை சித்திரங்களாக்கும் கேலிகிராபி கலையைக் கற்றுக்கொண்டு மருத்துவர் முதல் மாணவர் வரை அனைவருக்கும் சித்திர எழுத்துக்கலைப் பயிற்சி அளித்து வருகிறேன். கல்லூரிகளில் கலைகளை பயிற்றுவிக்கும் விரிவுரையாளராக பணியாற்றி வருவதோடு, சென்னை அயனாவரத்தில் கிறிஸ்டினா ஆர்ட் ஸ்டூடியோ என்ற கலைக்கூடத்தை ஆரம்பித்து இக்கலைகளை பயிற்றுவித்து வருகிறேன்.  

பொதுவாக கலைகளில் பல வகையுண்டு. அதில் நிகழ் கலைகள் என்றால், நடனம், இசை, நாடகம், சொற்பொழிவு, தற்காப்பு கலை அடங்கும். எழுத்துக் கலைகளில், கதை, கவிதை, கட்டுரை, நாடகம். கட்புலக் கலைகள் ஓவியம், சிற்பம், ஒளிப்படம் என்றும் உள்ளன. இக்கலைகளில் ஸ்கல்ப்சுரல் பெயின்டிங் (Sculplural Painting) என்பது ஒரு புதுவிதக் கலை.

அதாவது, ஓவியத்தையும், சிற்பத்தையும் ஒன்றுசேர செய்வது. ஸ்கல்ப்சுரல் பெயின்டிங் என்கின்ற கலை ரஷ்ய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவ்ஜினியா எர்மிலோவா (Evgenia Eermilova) என்ற ரஷ்ய பெண்மணி இந்த கலையை கண்டுபிடித்துள்ளார்.

ஸ்கல்ப்சுரல் பெயின்டிங் கலைக்கான மூலப்பொருள் ஒருவிதமான ப்ளாஸ்டர். இந்த ப்ளாஸ்டர்  மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு என இன்னும் பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவிதமான வடிவங்களில் பூக்கள், பறவைகள் ஆகியவற்றை உயிரோட்டமுள்ள பொருட்கள் போன்று உருவாக்கி வீட்டை அலங்கரிக்கலாம்.

அதோடு மட்டுமல்லாமல் சுவர்களில் மாட்டக்கூடிய இப்பொருட்களை செய்து வீடு, அலுவலகம், நிறுவனம், ஹோட்டல்கள் போன்றவற்றை அழகுப்படுத்தலாம். அதாவது வீடு உள்பட பல்வேறு இடங்களில் உள்அலங்காரம் என்பது நம் மன்னர் முதல் கொண்டு மக்கள் அனைவரின் ரசனையாகும்.

இக்கலையில் பேலட் நைப் என்ற ஒரு கருவியை உபயோகப்படுத்தி பொருட்கள் செய்யப்படுகின்றன. செதுக்கப்பட்ட ஓவியங்கள் காய்வதற்கு சுமார் ஒரு
வாரம் ஆகும். இணையதளத்தில் இதனை பற்றி விவரங்கள் உள்ளன.

அதை பார்த்த பிறகு தான் எனக்கு இது போன்ற ஒரு கலை இருப்பதே தெரிய வந்தது. நானோ கலை ஆர்வம் கொண்டவள் என்பதால் இணையத்தில் இது பற்றி முழுமையாக கற்றுக் கொண்டேன். பிறகு பொருட்களை வரவழைத்து வீட்டிலேயே நானே அதை இணையத்தில் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செய்ய கற்றுக்கொண்டேன்.

இந்தநிலையில் இக்கலை குறித்த பயிற்சி வகுப்பு சமீபத்தில் சென்னையில் முதல் முறையாகவும், இந்தியாவில் இரண்டாவது முறையாகவும் நடைபெற்றது. இதில் இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அதில் நானும் கலந்துகொண்டு நேரடி பயிற்சி பெற்றேன்.

இக்கலையின் சிறப்பு ஒட்டுவதற்கு எந்தவித பசையும் தேவையில்லை, ப்ளாஸ்டர் கொண்டு பூக்கள் மற்றும் பொருட்களை செய்து வைத்துவிடவேண்டும். காய்ந்தவுடன் அதுவாகவே சேர்ந்துவிடும். இவ்ஜினியா எர்மிலோவாவின் பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் இந்த கலை செய்வதற்கான ப்ளாஸ்டர் கிடைக்கிறது.

இங்கிருந்துதான் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த மூலப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு மாஸ்டர் கோர்ஸில் உள்ள பூவை மட்டும் கற்பதற்கு சுமார் 9 மணிநேரம் ஆகும். இந்த கோர்ஸை கற்றபின் சுமார் 45 நிமிடத்தில் ஒரு பூவை
செய்துவிட முடியும்.

இன்றைக்கு வீட்டை அலங்கரிப்பதற்கு பெருமளவில் செலவழிக்கிறோம். இக்கலையைக் கற்றுக்கொண்டால் நாமே விதவிதமான பூக்கள் மற்றும் பொருட்களை செய்து நம் வீட்டை  அலங்கரித்துக் கொள்ளலாம். அத்துடன் மார்க்கெட்டிங் திறமை இருந்தால் சூப்பர் மார்க்கெட், மால் மற்றும் பெரிய ஓட்டல்கள் போன்றவற்றிற்கு விற்பனை செய்து நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்’’  என்றார் கிறிஸ்டினா ரஞ்சன்.

தி.ஜாஸ்பர்