முதல் முயற்சியே கடைசி முயற்சி!



‘‘அப்பாவின் இறப்பு சான்றிதழ் வாங்க பட்ட கஷ்டம்தான் என்னுள் ஐ.ஏ.எஸ் கனவை விதைச்சது’’ என்கிறார் கீதா.

கடின உழைப்புடன் பல வருடங்களாக ஐ.ஏ.எஸ் படிக்கும் பலரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரே முயற்சியில், அதிலும் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் பாஸ் செய்தவரை பார்ப்பது அதிசயம்தான். சென்னையைச் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன்தான், கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் 109வது இடமும், தமிழக அளவில் 8வது இடமும் பிடித்து, முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். 

2017ல் பொறியியல் முடித்ததும், சாஃப்ட்வேர் என்ஜினியர் ஆக வேண்டியவர், சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஊக்கமளிக்கும் காணொளிகளை யுடியூபில் பார்த்து, தானும் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

‘‘சமுதாயத்து மேல இருக்கிற சின்னச் சின்ன கோவம் தான், அதை எதிர்த்து கேள்வி கேட்குற அளவுக்கு ஒரு இடத்துக்கு போகனும் என்ற தூண்டுதலை கொடுத்துச்சு” என்கிறார் கீதா. ‘‘அப்பா லாரி டிரைவர். அம்மா, தங்கச்சி, நான் மூணு பேருமே அவர நம்பிதான் இருந்தோம். ஒரு நாள் திடீர்னு விபத்துல அப்பா இறந்துட்டாரு. எங்க குடும்பம் அப்படியே உடைஞ்சு போயிடுச்சு.

அம்மா தான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு எல்லாம் முடிச்சேன். எல்லாரும் அப்பா இல்லாத புள்ள சட்டுப்புட்டுன்னு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி அம்மாகிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனா அம்மாதான் எனக்காக அவங்க எல்லாரையும் சமாளிச்சாங்க. நான் இப்ப ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு அம்மா தான் காரணம்.

அப்பா இறந்த பிறகு, அவரின் இறப்பு சான்றிதழ் வாங்க நாங்க ரொம்பவே அலைய வேண்டி இருந்துச்சு. ஏற்கனவே சோகத்துல இருந்த எங்களுக்கு இது மேலும் கஷ்டம் கொடுத்துச்சு. இருந்தாலும் எப்படியோ தெரிந்தவர் ஒருவர் மூலம் அதை பெற்றோம். அப்போ ஒரு நிமிஷம், இந்த மாதிரி உதவி பண்ண யாரும் இல்லாத எத்தனையோ பேர் படும் கஷ்டம் மனசுக்கு ரொம்ப வலியும் கூடவே கோவமும் ஏற்படுத்தியது. அந்த சமயம் இதை எல்லாம் தட்டிக் கேட்க என்ன செய்யணும்ன்னு தெரியல. அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை.

அதிகாரத்தை கையில் எடுக்கணும்ன்னா எனக்கான ஒரு பதவியை ஏற்படுத்திக் கொள்ளணும்ன்னு தோணுச்சு. அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் செய்த சாதனைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரைப் பற்றி செய்திகளையும் படிச்சேன். அதுவே எனக்குள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவாக மாறியது” என்றார்.

முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முடிந்தது என கேட்டதற்கு, “அது என் அப்பாவோட ஆசீர்வாதம்தான். அவரு பக்கத்துல இல்லாட்டியும், இப்பவும் எங்கள கவனிச்சுக்கிறாரு. அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போதான் ஒரு பெரிய நம்பிக்கை வந்திருக்கு, இந்த சந்தோஷத்தை பகிர அப்பா கூட இல்ல. இருந்தாலும் அப்பாக்கும் சேர்த்து, அம்மாவ சந்தோஷமா வெச்சிப்பேன்” என கண்கலங்குகிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் சந்தித்த சவால்கள்...

‘‘இதுல ரொம்ப சவாலான விஷயம்னா, பணமும் புத்தகமும்தான். அகாடெமில சேர்ந்து, பிரிலிம்னரி  மட்டும்தான் படிக்க முடிஞ்சுது. அடுத்தகட்ட பயிற்சிக்கு படிக்க பணம் செலுத்த முடியல. அந்த தொகையை எங்களால் சமாளிக்க முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடி நானே படிச்சேன்.

ஐ.ஏ.எஸ் படிக்க சி.பி.எஸ்.இ பாட புத்தகங்களும், பொது நிர்வாக புத்தகங்களும் தேவைப்பட்டது. அது வாங்கவும் என்னிடம் காசு இல்லை. அதனால வேலைக்கு செல்ல முடிவு செய்தேன். ஒரு பள்ளியில ஆசிரியையா வேலைக்கு சேர்ந்தேன். மாலையில் டியூஷனும் எடுத்தேன்.

காலையில 4 மணிக்கு எழுந்தா, ராத்திரி தூங்க 12 மணி ஆகிடும். இப்படி இருந்தும் படிக்க ரொம்ப செலவு ஆச்சு. அந்த சமயத்தில் என் குடும்பத்தினர் தான் எனக்கு பக்க பலமா இருந்தாங்க. என்னை படிக்க ஊக்குவிச்சாங்க. என்னுடைய வாழ்வில் எப்போதுமே முன்மாதிரியா இருந்தது, என் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் ஃபின்னி சார்தான்.’’

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்…  
‘‘முதல் முயற்சியையே கடைசி முயற்சியா நினைச்சு படிங்க. இது போனா, அடுத்த அடெம்ப்ட் இருக்குனு சாதாரணமா விடாம, முதல் தடவையே கடின உழைப்போடு படிங்க. சுத்தி இருக்குறவங்க, முதல் முறையே தேர்ச்சி பெற முடியாது, ரொம்ப கஷ்டமான படிப்பு, உனக்கு இது ஒத்துவராதுன்னு எல்லாம் சொல்வாங்க. அதெல்லாம் காதுல வாங்கிக்காதீங்க. உங்க மேல முழு நம்பிக்கை வச்சு, உங்களுக்காக படிக்காம, உங்க குடும்பத்துக்காகவும்,
நாட்டுக்காகவும் படிங்க.  

பிரிலிம்னரி தேர்வுக்கு படிக்கும் போது மெயின் தேர்வுக்கு படிப்பது போல் படிப்பது அவசியம். தேர்வுக்காக பயிற்சி எடுக்கும் அகாடெமியில், எந்தவொரு சின்ன டெஸ்ட் வெச்சாலும், அதை, ஐ.ஏ.எஸ் தேர்வு போலவே நினைச்சு, முழு கவனத்துடன் படிக்கணும்’’ என்று டிப்ஸ் வழங்கினார். கீதா ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமில்லை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவரும் கூட.

கவிதை போட்டிகள் மற்றும் விளையாட்டில் தடகள போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது, ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி மையத்திற்கு செல்லவிருக்கும் கீதா, பதவியில் அமர்ந்ததும் முதல் வேலையாக படிக்க கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவி செய்வது தான் அவரின் முதல் திட்டம் என்கிறார்.

ஸ்வேதா கண்ணன்

ஏ.டி.தமிழ்வாணன்