தடைகளை உடைத்தெறிந்த தடகள வீராங்கனை“பாஸ்டர் பொண்ணு பிறக்கும்னு சொன்னதும், அம்மா அப்பாக்கு எதுவுமே புரியல. சரியா ஒன்பது மாசம் கழிச்சு நான் பொறந்தேன். பெண் பிள்ளைதான். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், பாஸ்டர் சொன்ன மாறி எனக்கு தபிதானு பெயர் வெச்சாங்க. ஆண் பிள்ளையா பொறந்தா சாம் என பெயர் வைக்க நினைச்சாங்க. இப்ப என் தம்பி பெயர் சாம். என் கூட அவனும் இங்கதான் பயிற்சி எடுத்துட்டு இருக்கான்” என்கிறார் தபிதா.

சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான இளைஞர்கள் தடகள போட்டியில் மகளிர் பிரிவில் வென்று, இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்தியா திரும்பியுள்ளார். 12 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாராட்டு மழையில் நனைந்தபடியே பயிற்சி மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்தவரை நேர்காணலுக்காக சந்தித்தோம்.    

“நான் பிறக்கும் முன்பே, அதாவது அம்மாவின் கருவறையில் இருக்கும் போதே நான் இறந்து விட்டதா டாக்டர், நர்ஸ் எல்லாரும் சொல்லிட்டாங்க. அம்மாவும் அப்பாவும் ரொம்பவே மனம் உடைஞ்சு போயிட்டாங்க. ரொம்ப கஷ்டத்துல தான் எங்க சர்ச் பாஸ்டரை போய் பார்த்தாங்க. அவர், ‘தபிதாவுக்கு ஒன்னும் இல்ல, நல்லபடியா பொறப்பா’ன்னு அம்மா வைத்துல கை வெச்சு சொன்னார்’’ என்றார்.

அப்பா ஆட்டோ டிரைவர், அம்மா ஹவுஸ் வைஃப். இரண்டு அக்காவும் கல்யாணம் முடிந்து தங்கள் கணவர்களுடன் இருக்க, தபிதா தன் குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அங்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறார்.
பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் தபிதாதான் முதலிடம். இதை கவனித்த பெற்றோர்தான், தபிதாவின் விளையாட்டு ஆர்வத்தை கண்டறிந்து, நண்பர்களின் அறிவுரைப்படி, செயின்ட் ஜோசப்ஸ் அகாடமியில் சேர்த்தனர். கோச் நகராஜன்தான், விளையாட்டுத்தனமாக இருந்த தபிதாவை விளையாட்டு வீராங்கனையாக மாற்றியவர்.

எப்படி இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய கனவுகளுடன், அதை ஜெயிக்கவும் முடிகிறது என்று கேட்டதற்கு, “என்னை ஊக்குவிச்சது வீட்டில் வாங்கியிருந்த கடன்கள்தான். கொஞ்சம் மனம் தளறினாலும், கடன்களை நினைச்சு நல்லா விளையாடனும், ஜெயிக்கனும் என்ற எண்ணம் வந்துரும். என் அம்மா, அப்பா என் மேல வெச்சிருக்க நம்பிக்கையும், எனக்காக எடுத்துக்குற சிரமும் முக்கிய காரணம். சுத்தியிருக்குறவங்க என்ன பேசினாலும், அதை பெருசா எடுத்துக்காம எனக்காக அதையெல்லாம் பொறுத்துட்டு, எப்பவும் எனக்கு துணையா நிற்பாங்க.

அடுத்து, நான் ஜெயித்தாலும் தோற்றாலும் என்னுடைய மொத்த ஆதரவும் கோச்தான்” என சிரிக்கும் தபிதா, தொடர்ந்து தன் கோச் நாகராஜன் பற்றி பேசினார், “நான் சந்திக்கும் தோல்விகள் எதையும் பொருட்படுத்தாம அதுலயிருந்து என்ன கத்துக்கலாம் என சொல்லிக்கொடுத்து, அடுத்த விளையாட்டுக்கு என்ன தயார்படுத்துவாரு.

விடும்மா, தோல்வி எல்லாம் ரொம்ப சாதாரணம், தோல்வி அடைந்தாதான் ஜெயிக்க முடியும் என பேசியே என்ன சமாதானம் பண்ணி அடுத்த ஆட்டத்திற்கு தயார் பண்ணிடுவாரு. இவர்கள் எல்லாருமே என் மேல ரொம்ப நம்பிக்கையும், கனவுகளும் வெச்சிருக்காங்க. எனக்கான கனவ, இவர்களோட கனவா நினைச்சு, என்ன ஊக்கப்படுத்துறாங்க” என்றார்.

“விளையாட்டிற்கு தேவையான வசதிகளையும், டையட் தேவைகளையும் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்பான்ஸர் செய்கிறது. ஆனால், தினம் பயிற்சிக்கு வந்து செல்லும் பேருந்து செலவுதான் கண்ணைக் கட்டுது. காலை பயிற்சிக்கு வந்து போக ஐம்பது ரூபாய், மதியம் இருக்கும் 2 மணி நேரத்தில் பள்ளி செல்ல வேண்டும், பின் மாலை பயிற்சிக்காக மறுபடியும் பிராட்வே வரணும்.  அதற்கு ஐம்பது ரூபாய். இப்படி தினமும் 100 ரூபாய் செலவாவதுதான் ரொம்ப கடினமாக இருக்கு. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால், எங்களை போல் உள்ளவர்கள் ரொம்பவே அவதிப்படுகிறோம். மேலும் எங்களால் ஆட்டோவுக்கும் கொடுத்து கட்டுப்படியாக முடியாது என்ற காரணத்தால் தான் பேருந்தை தேர்வு செய்கிறோம். அந்த கட்டணமுமே எங்களை நெருக்கி பிடிப்பது தான் வருத்தமா இருக்கு. இதற்கு தீர்வாக, அரசாங்கம் விளையாட்டு வீரர்களுக்கென தனி பஸ் பாஸ் அறிமுகம் செய்தால் சுமை குறையும்” எனக் கூறினார்.

தனக்கு கிடைத்த வெற்றி பற்றி பேசும் போது, “என் அக்கா நல்லா விளையாடுவாங்க. ஆனா, அப்போ எங்களுக்கு இப்படி ஒரு விளையாட்டு மைதானம் இருக்குனே தெரியாது. நல்ல வேளையா, எங்க சர்ச் பாஸ்டர்தான் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி பத்தி சொல்லி, என்ன சேர்த்து விட்டாங்க. அம்மா என்ன முடியுதோ அது சமைச்சு கொடுத்திடுவாங்க. அப்பா சின்ன வயசுல கபடி விளையாடியிருக்காரு, அப்பறம் கால்ல பிரச்சனையாகி, விளையாடுறதில்லை. அதனால, நான் ஸ்போர்ட்ஸ் விளையாடும் போது, ரொம்பவே சப்போர்ட் பண்ணுவாரு. அப்பறம் கோச்... இப்படி என் வெற்றிக்கு பின்னாடி இவங்க எல்லாருமே இருக்காங்க.

என்னதான் சாதித்தாலும் அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘‘இந்த பொண்ணு மருந்து எடுத்துக்கிட்டு ஓடுது என்று நிறைய பேர் என் காது படவே பேசுவாங்க. அப்பலாம் ரொம்ப கோவமும் அழுகையும் வரும். அவங்க பொறாமையில பேசுறாங்க, நீ இதெல்லாம் காதுல வாங்கமா உன் இலக்கை நோக்கி போயிட்டே இரு’’ன்னு நான் துவண்டு விழும் போது எல்லாம் எங்க வீட்லயும் சரி, நாகராஜன் சாரும் அட்வைஸ் பண்ணுவாங்க.

அவங்க சொன்ன மாதிரி, ஆசிய போட்டிக்கு தேர்ச்சி பெற்று, அங்க போய், அவங்க எடுத்த ‘டோப் டெஸ்ட்’ல பாஸ் ஆகி, தங்கமும் எடுத்துட்டு வந்திருக்கேன். இந்த வெற்றிதான் அவர்களுக்கான பதில்” என்றார்.

தொடர்ந்து எதிர்கால திட்டங்கள் பற்றி பேசிய தபிதா, “முதல்ல 12ம் வகுப்பு நல்லபடியா பாஸ் பண்ணணும். அது எனக்கு தடகள போட்டியை விட பெரிய டென்ஷன். நல்ல மார்க் எடுத்து கல்லூரியில் சேரணும். இதுக்கெல்லாம் நடுவுல, நிறைய இன்டர் நேஷனல் போட்டிகள் ஜெயிக்கணும். பிற நாட்டு மண்ணுல நம்ம இந்தியாவின் தேசிய கீதம் பாடவெக்கணும் என்பது தான் என் ஆசை” என்கிறார் தன் குறும்புத்தனமான சிரிப்புடன் தபிதா.

ஸ்வேதா கண்ணன்

ஏ.டி.தமிழ்வாணன்