சுதா மூர்த்தியின் கைராசி



வாசகர் பகுதி

இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஸ்தாபனங்களின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி இன்று 1000 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருந்தாலும் எளிமையாக வாழப் பிரியப்படுபவர்! வாழ்ந்தும் காட்டுபவர்! இன்போசிஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை துவக்கி, தலைவியாக இருந்து வரும் அவர், கல்வி மற்றும் ஆன்மிக பணிகளுக்கு சிறந்த சேவை செய்து வருகிறார்! இந்த வகையில் சமீபத்தில், ஒரு இலவச திருமண நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் சுதா மூர்த்தி.

‘‘நானும் நாராயண மூர்த்தியும் எளிமையாக திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். 1978ம் ஆண்டு பிப்ரவரி, 10ம் தேதி ஒரு வாடகை அறையில் நெருக்கமான சிலரின் முன்னிலையில் எங்களுக்கு தெரிந்த மந்திரங்களை, நாங்களே உச்சரித்து திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு வெறும் 800 ரூபாய் மட்டுமே செலவானது. கருமணியில் என் தாலி இருந்தது. எங்கள் திருமணம் பற்றி பலரும் கேலி செய்தனர், நாங்கள் மனம் தளரவில்லை! லட்சக்கணக்கில் கடன் வாங்கி. ஆடம்பரமாக திருமணம் செய்து அவதிப்படுவதை விட, எளிமையாக திருமணம் செய்து, மிச்சமாகும் பணத்தை எதிர்காலத்துக்கு பயன்படுத்தலாம்’’ என்ற சுதா மூர்த்தி பொறியியல் பட்டதாரி.

டாட்டா கம்பெனியில் வேலை பார்த்தபோது, லட்ச ரூபாய்க்கு மேல் கணவருக்குக் கடன் வாங்கிக் கொடுத்து, இன்போசிஸ் என்ற நிறுவனத்தை அவர் தன் நண்பர்களுடன் துவங்க உதவினார். அவரின் அந்த ராசி தான் இன்று இன்போசிஸ், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. அத்துடன் ஸ்தாபகர்கள் மட்டுமல்ல, இன்போசிஸில், பல வருடங்களாக பணிபுரியும் பலர், பல ஆயிரக்கணக்கில் கோடியாதிபதிகளாக உள்ளனர்!!

கைதட்டி காசு கேட்கறதை நிறுத்துங்க!

 134 வருட காங்கிரஸ் சரித்திரத்தில் திருநங்கை யாருக்கும் எந்த பதவியும் கொடுக்கப்பட்டதில்லை. அதனை உடைத்து முதன் முறையாக அகில இந்திய மகிளா காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.16 வருடம் பத்திரிகையாளராக பறியாற்றிய அப்சரா ரெட்டிக்கு அனைத்து மீடியாவான ரேடியோ, தினசரி மற்றும் தொலைக்காட்சி என அனைத்து துறையில் பணியாற்றியதில் பெரும்
பங்குண்டு.

சக திருநங்கையருக்கு, நீங்கள் தரும் ஆலோசனை என்ன? என்று கேட்டபோது அதற்கு அவர், ‘‘கையை தட்டுவதையும், பணம் தராவிடில் திட்டுவதையும் அவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். இப்போது சமூகத்தில் இவர்களையும் அங்கீகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதனால் தனக்கான ஒரு நிலையான வேலையில் ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். என்னால் சாதிக்க முடிந்ததை மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்காகவே அப்சரா ரெட்டியை பாராட்டலாம்!

- ராஜிராதா, பெங்களூரூ.