மார்பகப் புற்றுநோய் (Infor on Bra & Breast)“பெண்களுக்கு மட்டுமல்ல... மிக அரிதாக ஆண்களுக்கும் வரும்.”

புற்றுநோய் என்றால் எல்லோரும் அச்சப்படுகின்றனர். வெளியில் சொன்னால் கேவலம் என நினைக்கின்றனர். அதை மறைத்தும் வைக்கின்றனர். இந்த  மனப்பாங்கை நீக்கவும், புற்றுநோய் குறித்த புரிதலை ஏற்படுத்தி, எளிமையாக புரியும் விதத்தில் அறிவியல் ரீதியான காரணங்களுடன்  புற்றுநோய்  குறித்து விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் ஷாஜகான். மேலும் முகநூல் பக்கம், வாட்ஸ்அப் போன்றவற்றில் புற்றுநோய் குறித்து வரும் ஆதாரமற்ற  தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ள நூலாசிரியர், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு சார்ந்த விசயங்களையும், தவறான  எண்ணங்களையும் இந்தப் புத்தகத்தின் மூலமாக நூலை வாசிப்பவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். புற்றுநோய் வருவதற்கான காரணம், அதன்  நிலை, வளர்ச்சி பற்றிய புரிதல், நம் பொதுப்புத்தியில் அது பற்றி நாம் வைத்துள்ள தவறான தகவல்கள் குறித்த விரிவான விளக்கங்களுடன், இதில்  இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வாசிப்பவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும்.

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு ஆயிரத்தில் 120 முதல் 180 பேருக்கு வரும் என்றால், ஆண்களுக்கு ஆயிரத்தில் ஒருவருக்கு வரலாம். புற்று  நோய்களில் உயிர்களைப் பறிப்பதில் முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். அதேபோல், பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில்  இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய்  இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய்  இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப்  பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே  கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர் என்கிறார் இவர்.

அதேபோல் மார்பகப் புற்றுநோய்க்கும் பெண்கள் அணியும் பிராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரா அணிவதால் புற்று நோய் வரும் என்பது மிகப்  பெரும் அபத்தம். அக்டோபர் 13ல் வரும் “நோ பிரா டே” என்பது பிரா எதிர்ப்புக்கானது அல்ல. பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோயைப் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவானது. மறுநாள் அக்டோபர் 14ல் வரும் ‘பிக் பிங்க் டே’ (Big Pink Day) என்பது மார்பகப் புற்றுநோய்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நிதி திரட்டும் நாள்.மனிதனால் உருவாக்க முடியாத இயற்கையின் பல விந்தைகளில் பெண்ணின் மார்பகமும் ஒன்று.  பெண்களின் மார்பகம் என்பது உடலின் இதர பகுதிகளைப்போல தசைகளாலும் எலும்புகளாலும் ஆனதல்ல. பால் சுரக்கும் திசுக்களையும், கொழுப்புத்  திசுக்களையும் கொண்டது. வலைப்பின்னல் போல இருக்கும் இவற்றை இதர திசுக்களும் இழைநாளங்களும் இணைத்துப் பிடித்து மார்பகம் என்ற  வடிவத்தை தருகின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருகிற உறுப்பான மார்பகத்தில் உருவாவதால் மார்பகப் புற்று நோய் எனப்படுகிறது,  இது பால் சுரப்பிகளில் அல்லது பாலைக் கொண்டு செல்லும் குழாய்களில் உருவாகும் கட்டியாகும். ஆரம்பத்திலே இதைக் கண்டுபிடிக்காவிட்டால்  எல்லா இடங்களுக்கும் பரவும் வாய்ப்பும் இருக்கிறது.

உடலின் மற்ற உறுப்புகளில் உள்ள புற்று நோய்க்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் உள்ள வித்தியாசம் மார்பகப் புற்று நோயை வெற்றி கொள்வது  சாத்தியம்.  எப்படி என்றால் மார்பகம் என்பது உயிர்வாழத் தேவையான முக்கிய உறுப்பல்ல. புற்றுநோயால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை  வரும்போது மார்பகத்தை நீக்கிவிடலாம். அதற்காக பெண்கள் தங்களின் மார்பகம் நீக்கப்பட்டது என்பதை வெளியே தெரியாமல் மறைக்கத்  தேவையில்லை. வெட்கப்படவும் தேவையில்லை. நோய் கண்ட உறுப்பு ஒன்று நீக்கப்பட்டது அவ்வளவுதான். இதில் ஆண்களுக்கும் பெரும் பொறுப்பு  இருக்கிறது. பெண்களின் மார்பகம் பாலுணர்வுடன் தொடர்புடைய உறுப்பாக, பாலூட்டும் உறுப்பாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மார்பகம்  என்பது மறைக்கப்பட வேண்டிய உறுப்பாக கற்பிக்கப்பட்டுள்ளது.

விளைவு, மார்பகத்தில் கட்டி ஏதாவது இருப்பதாக சந்தேகம் வந்தால் வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்கிறார்கள் பெண்கள். பெண்களின்  மத்தியில் இருக்கும் கூச்சமும் வெட்கமும் தயக்கமும் இதில் பெரும் தடையாக இருக்கிறது. வெளியே தெரியும்போது நிலைமை கைமீறி இருக்கிறது.  இதனால்தான் பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. சுய பரிசோதனை குறித்துக்  கற்பிப்பதும் அவசியமாகிறது.சிக்கல் வரும்போது மார்பகத்தை நீக்கிவிட்டால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால்  உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மார்பகத்தில் வரும் கட்டிகளில் 80 சதவிகிதம் புற்றுநோயும் அல்ல. எந்தவொரு நோய்க்கும் சில  அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் இருக்கும். சில வகை நோயின் அறிகுறிகளை மருத்துவர் மற்றும் மருத்துவத் துறையினரால் மட்டுமே  கண்டுபிடிக்க முடியும். சில அறிகுறிகள் நோயை அனுபவிப்பவருக்கும் தெரியும்.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்
*மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
* மார்பக அமைப்பில் மாற்றம்
*  மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
* மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
* மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
* மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக  செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும்.  இவை பல்கிப்  பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது  வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம். சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு,  பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை  எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0  என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.

ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத்  தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும்  பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை. உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம்.  துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத  நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும்  தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும்  தன்னம்பிக்கையும் என்கிறார் நூலின் ஆசிரியர்.  மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படித்து  தெளிவுபெற வேண்டிய சிறந்த புத்தகம்.

-மகேஸ்வரி நாகராஜன்

நூல்: மார்பகப் புற்றுநோய் அறிந்ததும்
அறியாததும் (infor on Bra & Breast)
ஆசிரியர்: ஷாஜகான்
வெளியீடு: உடுமலை.காம்
விலை: ரூ.60/-

புற்றுநோயில் இருந்து மீண்ட பிரபலங்கள்

* மனிஷா கொய்ராலா: கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சையின்போது தலைமுடி உதிர்ந்த நிலையில், தன் பிம்பம் பற்றிய  கவலையின்றி புகைப்படங்களை வெளியிட்டார். சிகிச்சையின்போதே திரைப்படங்களிலும் நடித்தார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு  ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
* 1970ல் இந்தித் திரையுலகின் கனவு நாயகி மும்தாஜ் தனது 54 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முறையான சிகிச்சைக்கு பிறகு  இப்போதும் சுறுசுறுப்பாக உலவுகிறார்.
*  இந்தித் திரைப்பட பின்னணிப் பாடகி பமீலா சோப்ரா 55 வயதில் புற்றுநோயால் தாக்கப்பட்டு, முறையான சிகிச்சைக்குப் பின் தன்னுடைய 80  வயதிலும் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
*  எழுத்தாளர் சாந்தா கோகலே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர். அட்சய திருதியை நாளில் பெண்கள் நகை வாங்குவதைவிட  மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வதே சிறந்தது என எழுதினார்.
* தமிழ் படங்களில் நடித்த நடிகை கௌதமி தனது 35 வயதில் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி, முறையான சிகிச்சைக்குப் பின் விழிப்புணர்வு  பிரச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
* 43 வயதான நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கேன்சருக்கு எதிராகப் போராடி வரும் இவர் தலையை மொட்டை  அடித்த தன் புகைப்படத்தை வெளியிட்டு நண்பர் தின வாழ்த்தை பகிர்ந்தார்.