சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்போம்!புவி அளவுக்கு மீறி வெப்பமடைந்து வருவதன் விளைவாக உலகைப் புரட்டிப்போடும் பருவநிலை மாற்றம் உருவாவதற்கான அடிப்படைக் காரணம்  என்ன என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. அறிவியல்பூர்வமாக பார்த்தால், புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள்  அதிகரிப்பதற்கு புதை படிவ எரிபொருளை அடிப்படையாகக்கொண்டு இன்றைய நாகரிகத்தை கட்டியெழுப்பியது, காடுகளை அழிப்பது, நிலப்  பயன்பாடுகளில் மாற்றங்களைக்கொண்டுவந்ததும்தான் காரணம். ஆழமாக ஆராய்ந்தால், இது வெறும் பசுங்குடில் வாயுக்கள் பிரச்சினையோ அல்லது  புதை படிவ எரிபொருட்களை பயன்படுத்தியது மட்டுமே அல்ல. மாறாக ‘வளர்ச்சி - மேம்பாடு’ என்ற கோட்பாட்டை மையமாகக்கொண்டு எழுப்பப்பட்ட  பொருளா தாரப் போக்குகளும், தத்துவங்களும், செயல்பாடுகளும்தான் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

பருவநிலை மாற்றம் சாதாரண விசயமல்ல. இந்த உலகத்தின் அழிவுக்கான திறவுகோல். உலக தலைவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னந்தனி ஆளாக பல போராட்டங்களில் ஈடுபட்டவர் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க்.  நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை இவருக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக  வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாகப் போராட்டம் நடத்தினார்.  இதன் மூலம் பிரபலமான இவர்  இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு உலக  வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு இந்தியா  உள்பட பல நாடுகளின் 270 நகரங்களில் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆதரவு தெரிவித்து பருவநிலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இவரது இந்த முயற்சியை கௌரவிக்கும் விதமாக டைம் இதழ் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா  தன்பர்க் பெயரும் இடம் பெற்றிருந்தது.2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனி நபர்களின் பெயர்களும், 85 அமைப்புகளின்  பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரட்டி ஆண்ட்ரே (Freddy Andre), ‘‘பூமியைக்  காப்பாற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் கிரேட்டா, நோபல் பரிசுக்கு முழுமையான தகுதி உடையவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஏராளமான கூட்டங்களிலும் பங்கேற்று வரும் அவர், தனது இளமைப் பருவத்தை  அதற்காகவே அர்ப்பணித்து விட்டார் என்றும்ஃப்ரட்டி தெரிவித்துள்ளார்.

கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசை வெல்லும் பட்சத்தில், 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப்பை விட இளம் வயதில்  அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் சிறுமி என்ற சிறப்பையும் இவர் பெறுவார்.பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த  ஏராளமான கூட்டங்களில் பங்கேற்று வரும்  இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும், இந்தாண்டு  ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மன்றத்திலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.பூமி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின்  தலைவர்களுக்கு பொறுப்பிருக்கிறதா என்ற கேள்வியை யு.என் பருவநிலை மாநாட்டில் முன் வைத்திருக்கும் கிரேட்டா, “கடந்த 25 ஆண்டுகளாக  எண்ணற்ற தலைவர்கள் பருவநிலை மாற்றத்தை பற்றியும், மாசு கட்டுப்பாடு பற்றியும் பேசி வருகிறார்கள். இருந்தும் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்  கொண்டுதான் இருக்கிறது. இங்கு ஏதும் நடக்கவில்லை. எனவே எதிர்காலத்தைக் கவனிப்பதாக கூறும் தலைவர்களை பாராட்ட மாட்டேன். மாற்றம்  வருவதை விரும்புகிறார்களா, இல்லையா என்பது தெரிந்தாக வேண்டும். எங்கள் தலைவர்கள் குழந்தைகள் போல் நடந்து கொள்வதால், அவர்களின்  சுற்றுச்சூழல் குறித்த பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம். மூத்த தலைமுறை நமக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  சுற்றுச்சூழல் குறித்து நம் குரல் கேட்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

-அன்னம் அரசு