தி கிட்பெண் மைய சினிமா

சந்தர்ப்ப சூழ்நிலையால் பிறந்த குழந்தையைக் கைவிட்ட ஓர் அம்மாவின் துயர்மிகுந்த கதைதான் ‘தி கிட்’.

காதலனால் கைவிடப்பட்ட ஓர் இளம் பெண். தர்ம ஆஸ்பத்திரியில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அப்பா அருகில் இல்லாததால்  குழந்தையைச் சுமை என அவள் நினைக்கிறாள். தனக்குத் தெரிந்த பணக்காரர் ஒருவரின் வண்டியின் பின்சீட்டில் யாருமில்லாத போது குழந்தையை  வைத்துவிட்டு மிகுந்த மனவேதனையில் சென்றுவிடுகிறாள்.
ஆனால், அந்த வண்டி திருடு போய்விடுகிறது. திருடர்கள் வண்டியை நிறுத்தி கீழே  இறங்கும்போது வண்டிக்குள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. பதற்றமடையும் திருடர்கள் குழந்தையை குப்பைத்தொட்டிக்கு அருகில்  வைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக பறந்துவிடுகின்றனர்.அந்த வழியில் உல்லாசப் பயணமாக வரும் நாடோடி அழுகின்ற  குழந்தையை எடுக்கிறான். அங்கே வரும் ஒரு அம்மாவிடம் இது யாருடைய குழந்தை என்று கேட்கிறான். அவள் ‘‘தெரியாது...’’ என்றதும் குழந்தையை  மீண்டும் குப்பைத்தொட்டிக்கு அருகில் வைக்கும்போது அங்கே போலீஸ் வந்துவிடுகிறது.

 சூழ்நிலையால் குழந்தையைத் தன் வீட்டுக்கு நாடோடி எடுத்துச்செல்கிறான். குழந்தையின் துணியை அவன் சரிசெய்யும் போது ஒரு கடிதம்  கிடைக்கிறது. ‘‘தயவு செய்து இந்த அனாதைக் குழந்தையை அன்போடும் பொறுப்போடும் பார்த்துக்கொள்ளுங்கள்...’’ என்று அந்தக் கடிதத்தில்  எழுதியிருக்கிறது. தானும் ஓர் அனாதை என்பதால் குழந்தையைத் தன் குழந்தை போல் வைத்துக்கொள்கிறான் நாடோடி. குழந்தையை வைத்துவிட்ட  வண்டி திருடு போனது தெரியாமல் அந்த வண்டிக்குச் சொந்தமான வீட்டுக்கு வருகிறாள் அந்த தாய். வண்டி திருடு போனது தெரிந்து மயக்கம்  அடைகிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு.அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகிறான். நாடோடியின் வேலை உடைந்த ஜன்னல்களின் கண்ணாடியைச் சரி  செய்வது. சிறுவன் நாடோடியிடம் இன்றைக்கு எந்தத் தெருவில் வேலை என்று கேட்பான். நாடோடி ஒரு தெருவைச் சொல்வான். இருவரும்  வேலைக்குச் செல்வார்கள். முதலில் சிறுவன் யாருக்கும் தெரியாமல் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைப்பான். சரியாக அந்த நேரத்தில்  நாடோடி அங்கே வருவான். உடைந்த கண்ணாடியைச் சரி செய்வான். கொஞ்சம் பணம் கிடைக்கும். இதுதான் இவர்களின் வேலை.

குழந்தையைக் கைவிட்ட அந்தத் தாய் இன்று எல்லோரும் புகழும் பெரிய நடிகையாக இருக்கிறாள். ஒரு சமயம் பொம்மைகளும் இனிப்புகளும் வாங்கி  ஏழைகள் இருக்கும் தெருவுக்கு வருகிறாள். அந்தச் சிறுவன் வீட்டு முன்பு இருக்கும் எல்லாச் சிறுவர்களுக்கும் தான் வாங்கி வந்ததைக் கொடுக்கிறாள்.  அப்போது ஒரு அம்மா தன் கைக்குழந்தையுடன் அங்கே வருகிறாள். அக்குழந்தையை வாங்கிக் கொஞ்சும்போது தான் கைவிட்ட குழந்தையின் ஞாபகம்  நடிகைக்கு வருகிறது. வேதனை அடைகிறாள். அப்போது அந்தச் சிறுவன் அங்கே வருகிறான். அவன்தான் தன் மகன் என்று தெரியாமல் அவனுக்கும்  ஒரு பொம்மையைக் கொடுத்துவிட்டு ஒருவித மன திருப்தியில் சென்றுவிடுகிறாள்.
நாடோடிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. அப்போது  சிறுவன் உணவு சமைத்து நாடோடியை பார்த்துக்கொள்கிறான். சிறுவன் விளையாடும்போது ஒரு குறும்புக்காரச் சிறுவனோடு சண்டை ஏற்படுகிறது.  சிறுவர்களின் சண்டை பெரியவர்களின் சண்டை ஆகிறது. நாடோடிக்கும் குறும்புக்காரச் சிறுவனின் பலமான அண்ணனுக்கும் சண்டை ஏற்படுகிறது.  அப்போது அங்கே நடிகை வருகிறாள். சமாதானம் செய்து வைக்கிறாள். சிறுவனைத் தூக்கி நாடோடியிடம் ஒப்படைக்கிறாள். ‘‘பையனுக்கு உடல்  நிலை சரியில்லை. மருத்துவரைப் பாருங்கள். நான் நாளைக்கு மறுபடியும் வருகிறேன்...’’ என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள்.

மருத்துவர் வருகிறார். ‘‘நீ தான் குழந்தையின் அப்பாவா...’’ என்று நாடோடியிடம் கேட்கிறார். அதற்கு ‘‘தான் அப்பா இல்லை...’’ என்று சொல்வதோடு  அவன் தாய் எழுதி வைத்த ‘‘தயவு செய்து இந்த அனாதைக் குழந்தையை அன்போடும் பொறுப்போடும் பார்த்துக்கொள்ளுங்கள்...’’ என்ற அந்த  கடிதத்தைக் காட்டுகிறான். இந்தக் கடிதம் தான் நான் குழந்தையை வளர்க்க காரணம் என்கிறான். மருத்துவர் கோபமாகி குழந்தையை அனாதை  விடுதியில் ஒப்படைக்குமாறும், இல்லையென்றால் போலீஸில் புகார் செய்வேன் என்றும் சொல்லி விட்டு அந்தக் கடிதத்தை எடுத்துகொண்டு வெளியேறுகிறார்.

அனாதை விடுதியில் இருந்து அதிகாரிகள் வந்து சிறுவனை நாடோடியிடம் இருந்து பிரிக்கின்றனர். சிறுவன் அவர்களுடன் செல்ல  மறுக்கிறான். சிறுவனை அனாதை இல்ல வண்டியில் பலவந்தமாக ஏற்றிச்செல்கின்றனர். நாடோடி அவர்களுடன் சண்டையிட்டு சிறுவனைக்  காப்பாற்றுகிறான். சிறுவனும் நாடோடியும் ஒரு விடுதியில் தங்குகின்றனர். இந்தச் சமயத்தில் நடிகை சிறுவனின் வீட்டுக்கு வருகிறாள். அப்போது  மருத்துவரும் அங்கே வருகிறார். அவர் சிறுவன் நாடோடியின் மகன் இல்லை. அவன் ஓர் அனாதை என்று நாடோடி கொடுத்த அந்தக் கடிதத்தை  நடிகையிடம் காட்டுகிறார். நடிகை அந்தக் கடிதத்தைப் படித்ததும் அதிர்ச்சியடைகிறாள்.

அவன் தன் மகன் என்று உணர்கிறாள். போலீசிடம் புகார் செய்கிறாள். இரவில் நாடோடியும் சிறுவனும் மகிழ்ச்சியாக விடுதியில் உறங்குகின்றனர்.  விடுதியின் உரிமையாளர் செய்தித்தாள் வாசிக்கும்போது அதில் ‘சிறுவன் காணவில்லை’ என்ற அறிவிப்புடன் கண்டுபிடித்து தருவோருக்கு ஆயிரம்  டாலர் சன்மானம் வழங்கப்படும் என்ற செய்தியும் அச்சாகியிருக்கிறது. அதில் சிறுவனின் அடையாளமும் அவனுடன் இருக்கும் நாடோடியின்  அடையாளமும் குறிப்பிடப்படுகிறது.விடுதியில் தங்கியுள்ள நாடோடியும் சிறுவனும்தான் அவர்கள் என அறிந்து விடுதியின் உரிமையாளர் இருவரும் தூங்கிய பின் சிறுவனைத் தூக்கிட்டுப் போய் காவல்துறையிடம் ஒப்படைக்கிறான். சிறுவனைப் போலீஸ் நடிகையிடம் ஒப்படைக்கிறது. நாடோடி  விழித்தபின் சிறுவனைக் காணாமல் பதறுகிறார். மீண்டும் தனிமையாகி வீட்டுக்குச் செல்கிறார். வீடு பூட்டிக்கிடக்கிறது. வீட்டின் முன்பு சிறிது நேரம்  சோகத்தில் உறங்குகிறார்.

சிறுவனோடு மற்றவர்களும் தானும் மகிழ்ச்சியாக தேவலோகத்தில் இருப்பதுபோல் கனவு காண்கிறான். அப்போது அங்கே போலீஸ் வருகிறது.  நாடோடியின் கனவு கலைகிறது. போலீஸ் நாடோடியை ஒரு பெரிய வீட்டுக்கு அழைத்துச்செல்கிறது. வீட்டில் இருந்து சிறுவன் வெளியே வந்து  நாடோடியைக் கட்டிப்பிடிக்கிறான். அது நடிகையின் வீடு. மீண்டும் பிரிந்தவர்கள் இணைகிறார்கள். சிறுவன் நாடோடியைத் தன் வீட்டுக்குள் அழைத்துச்  செல்கிறான். படம் நிறைவடைகிறது.வறுமையின் பிடியிலும், ஆதரவற்ற இருளிலும், அனாதை விடுதியிலும் தன் மென்மையான குழந்தைப்  பருவத்தை குரூரங்களுடன் கழித்த சாப்ளின் போன்ற மேதையால் தான் இந்த மாதிரியான படைப்பை அருள முடியும். ஆரம்பத்தில் சிறுவனும்,  சார்லியும் தங்களின் சேட்டைகளாலும், குறும்புகளாலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் இறுதியில் அதிகாரிகள் சார்லியிடம் இருந்து  வலுக்கட்டாயமாக சிறுவனைப் பிரிக்கும்போது எதுவுமே செய்ய முடியாமல் கண்ணீருடன் கையறு நிலையில் காட்சி தரும் சிறுவனின் முகம் நம்மைக்  கலங்கடிக்கிறது.

இந்தப் படத்தில் சில நொடிகளே வந்து போகும் ஒரு அற்புதமான காட்சி. இயேசு ஒரு பக்கம் சிலுவை சுமந்து கொண்டிருப்பார். இன்னொரு பக்கம் ஒரு  அம்மா தன் குழந்தையைக் கூட சுமை என கருதி யாரோ வண்டியில் போட்டுவிடுவாள்.தாயால் கைவிடப்பட்ட குழந்தை சாப்ளின் போன்ற ஒரு  நாடோடியிடம் கிடைத்ததாலும், சாப்ளினும் ஒரு அனாதை என்பதாலும் இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பாக வயது பேதமின்றி  சமத்துவமாக வாழ்ந்து வந்தனர். அந்த அம்மாவையும் நம்மால் குற்றம் சொல்ல முடியாது. அவளின் சூழலும் நிலையும் தன்னால் மகனை  நல்லபடியாக வளர்க்க முடியாது என்ற எண்ணமும்தான் தனக்குத் தெரிந்த ஒரு பணக்கார வண்டியில் குழந்தையைப் போட்டுவிடக் காரணமாக  இருக்கிறது.

சாப்ளினின் நிஜ வாழ்க்கையும் இந்தமாதிரி தான் இருந்தது. சாப்ளினின் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட பிரிவும், சாப்ளினின் தாய்க்கு ஏற்பட்ட  பொருளா தார நெருக்கடியும் தான் சாப்ளினையும் அவரது சகோதரன் சிட்னியையும் அனாதை விடுதிக்கு இட்டுச் செல்கிறது. படத்தில் அனாதையாக  விடப்பட்ட சிறுவனுக்கு அன்பு காட்டி, ஆதரவளிக்க நாடோடி கிடைத்ததைப் போல, நிஜ வாழ்வில் குழந்தைப் பருவத்தில் சாப்ளினுக்கு அன்பும்,  ஆதரவும் கிடைக்காமல் போயிருக்கலாம். அந்த ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் என்ற எண்ணம் மனதிற்குள் முளைவிடுகிறது.

-த.சக்திவேல்