மும்பைக்கு போகணும் வடா பாவ் சாப்பிடணும்..!: நடிகர் ஹரீஷ் கல்யாண்



என் சமையல் அறையில்!

‘‘சாப்பாடுன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் ரொம்ப ஃபுட்டீ டைப். தேடித் தேடிப் போய் சாப்பிடுவேன்’’ என்று பேசத் துவங்கினார் ‘இஸ்பேட்  ராஜா’ நடிகர் ஹரீஷ் கல்யாண். ‘‘பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது, நிறைய சாலையோர உணவகங்களில் தான் நான் அதிகம்  சாப்பிடுவேன். இப்பதான் மால்கள் மற்றும் காபி ஷாப்கள் எல்லாம் இருக்கிறது. அந்த சமயத்தில் அதெல்லாம் கிடையாது. நண்பர்களுடன் வெளியே  போக வேண்டும் என்றால், இது போன்ற உணவகத்தில் சாப்பிடுவதுதான். அது ஒரு விதமான ஜாலியான உணர்வு. குறிப்பா நண்பர்களுடன் போகும்  போது அதனை நம்மால் தவிர்க்கவே முடியாது. நடிகனான பிறகு ஆரோக்கியம் மற்றும் உடல் அமைப்பு மேல் கவனம் செலுத்த வேண்டும் என்ற  கட்டாயம் ஏற்பட்டது. அதனால் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுன்னு இருந்தாலும் அவ்வப்போது எனக்கு பிடிச்ச உணவினை சாப்பிட தவறமாட்டேன்.

எனக்கு வீட்டுச்சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். அதே போல் நம்ம ஊர் உணவுகள் பாரம்பரிய முறையில் செய்வது ரொம்பவே பிடிக்கும். நான் அசைவ  உணவுப் பிரியை. பிரியாணி எனக்கு ரொம்பவே பிடிச்ச உணவு. தக்காளி சாதத்தை பிரியாணின்னு சொல்லிக் கொடுத்தா கூட நான் சாப்பிடுவேன்.  அதே போல் தென்னிந்திய உணவில் சொல்லணும்ன்னா தோசை ரொம்வே பிடிக்கும். சில சமயம் ஷூட்டிங்காக வெளிநாடு போகும் போது, ஒரு  தோசை கிடைக்காதான்னு எல்லாம் நான் ஏங்கி இருக்கேன். மூன்று வேளையும் எனக்கு தோசை இருந்தா போதும். நான் சலிக்காமல் சாப்பிடுவேன்.  அதே போல் சைனீஸ், தாய் மற்றும் வட இந்திய உணவுகள் கூட விரும்பி சாப்பிடுவேன்’’ என்றவர் தான் தேடிச் சுவைத்த உணவுகள் குறித்து  பகிர்ந்து கொண்டார்.

‘‘ஐதராபாத்தில் ‘ராகி சங்கதி’ன்னு ஒரு உணவு கிடைக்கும். அது எனக்கு ரொம்பவே பிடித்தமான உணவு. பார்க்க கேழ்வரகு களி மாதிரிதான்  இருக்கும். எப்போதெல்லாம் ஐதராபாத்தில் காலடி வைக்கிறேனோ அப்போது எல்லாம் ராகி சங்கதியை சாப்பிடாமல் வந்ததில்லை. கேழ்வரகு களி  மாதிரி இருக்கும். ஐதராபாத்திற்கு எப்போ போனாலும் இதை சாப்பிடாமல் நான் ஃபிளைட் ஏறமாட்டேன். இது எல்லா உணவகத்திலும் கிடைக்காது.  ஒரு சில உணவகத்தில் தான் கிடைக்கும். ஐதராபாத் ஜுப்ளி ஹில்சில் உள்ள ராயலசீமா ருச்சுலு உணவகத்தில் இதனை நாட்டுக்கோழி குழம்பு  மற்றும் சட்னியுடன் சேர்த்து தருவார்கள். மிகவும் சுைவயாக இருக்கும். மீன் குழம்பும் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன். ராகி சங்கதி பிடிக்கும்  அளவுக்கு எனக்கு அந்த ஊர் பிரியாணி பிடிக்காது. அது ஏன்னு தெரியல. நம்மூர் பிரியாணி மேல் இருக்கிற மோகம் எனக்கு வேறு எந்த பிரியாணி  மேலும் வந்ததில்லை.

நம்ம ஊரில் சொல்லணும்ன்னா, காரைக்குடி செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் பிடிக்கும். பட்டுக்கோட்டை குமார் மெஸ், அவங்க அசைவ உணவுகளை  ரொம்பவே சுவைச்சு சாப்பிடுவேன். ரொம்ப பாரம்பரிய முறையில் செய்வாங்க. மசாலாக்களை அம்மி அல்லது ஆட்டுக்கல்லில் தான் அரைப்பாங்க.  அது தான் உணவின் சுவைக்கே காரணம்ன்னு சொல்லலாம். சென்னை ஃபுட் ஸ்பாட்டா ஆயிடுச்சு. அதனால இது போன்ற பிரபலமான மெஸ்கள்  எல்லாம் சென்னையிலும் தங்களின் கிளைகளை திறந்து இருக்காங்க.ஆந்திரா, தமிழ்நாடுன்னு இருந்தாலும், வெளிநாட்டு உணவுக்கும்  தனிச்சுவையுண்டு. அமெரிக்கா நியுயார்க் நகரத்தில் ஜோயிஸ் பீட்சா ரொம்ப ஃேபமஸ். ரேஷன் கடையில் க்யூவில் நின்று எப்படி பொருட்களை  வாங்குறோமோ அதே போல் தான் இங்கு ஆர்டரே கொடுக்கணும். எப்ப போனாலும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், கால் வலித்தாலும் ஜோயிஸ்  பீட்சாவை சாப்பிடாமல் வரவே மாட்டேன்.

ஹலால் கைஸ், அமெரிக்காவின் மிகப் பிரபலமான டிரக் உணவகம். இறைச்சி கொஞ்சம் சாதம் மற்றும் குபூஸ் சேர்த்து தருவாங்க. அந்த  இறைச்சியில் மசாலா எல்லாம் கலந்து கிட்டத்தட்ட நம்மூர் சுவையில் இருக்கும். அங்கேயும் எப்போதும் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். ஒரு  முறை சின்ன வயசில் சுவிட்சர்லாந்து போன போது அங்கு மோவன்பிக் என்ற நிறுவனத்தின் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். இங்கு க்வாலிட்டி, அருண்  ஐஸ்கிரீம் போல் அங்கு மோவன்பிக். நாம சாப்பிடும் இந்த ஐஸ்கிரீம்களுக்கு எல்லாம் அது ஈடே இல்லை. அவ்வளவு சாப்ட்டா, கிரீமியா இருக்கும்.  வாயில் போட்டதும் அந்த பாலின் கிரீமை நம்மால் உணர முடியும். இப்ப சென்னையிலும் இந்த பிராண்ட் இருக்கு. 12 வயதில் சாப்பிட்ட அதே  ஐஸ்கிரீமை இப்ப தான் இங்கு சென்னையில் சாப்பிட்டேன்’’ என்றவர் சினிமா ஷூட்டிங் போது ஏற்பட்ட உணவு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘ ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக அதர்பைஜான் என்ற ஊருக்கு போனோம். சிரியா அருகில் இருக்கும் சின்ன ஊர். அங்க நம்மூர் சாப்பாடு  எல்லாம் கிடைக்காது. ரெட் மீட் மற்றும் சாலட்கள் தான் கிடைக்கும். இது எல்லாருக்கும் செட்டாகாது. அரிசி சாதமே கண்ணில் தென்படல.  ஐரோப்பியா, அராப் மற்றும் ரஷ்யன் கலந்த உணவுகள் தான் அங்கு கிடைக்கும். மூன்று வேளை சாப்பாட்டுக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.  மத்தவங்க எப்படியோ சமாளிச்சாங்க. ஆனா எனக்கு கஷ்டமா தான் இருந்தது. இதுவே சிரியா நகரத்துக்கு போனா அங்கு மெகடெனால்ட்ஸ் மற்றும்  கே.எஃப்.சி உணவகங்கள் இருக்கும். ஆனால் இங்கிருந்து ஒவ்வொரு முறை அங்கு போயிட்டு வர முடியாது. அதனால் அங்கிருந்த நாட்கள் சாலட்  தான் என்னுடைய உணவா இருந்தது.

‘இஸ்பேட் ராஜா இதய ராணி’ படம் குலுமணாலியில் ஷூட்டிங் இருந்தது. அங்கேயும் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். பிரட், ரொட்டின்னு  பேக் செய்யப்பட்ட உணவு தான் இருந்தது. இதுவே நாம சுற்றிப்பார்க்க போகும் போது, நாம உணவை தேடிப் போய் சாப்பிடலாம். ஷூட்டிங்ன்னு  போகும் போது 50 பேர் படக்குழுவினருடன் போகவேண்டி இருக்கும். எல்லாரையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துக் கொண்டு  போக முடியாது. அதனால் அங்கு என்ன உணவு கிடைக்குமோ அதை அட்ஜெஸ் செய்து சாப்பிட வேண்டி இருக்கும். சில சமயம் சமையல் நிபுணர்கள்  வருவாங்க. அவங்க சமைச்சு தருவாங்க. ஆனா அது எல்லா இடங்களிலும் சரி வராது’’ என்றவர் சாப்பாட்டுக்கு ரொம்பவே அடம் பிடித்தது  இல்லையாம்.

‘‘எனக்கு சாப்பிட பிடிக்கும். அதே சமயம் எல்லாவற்றையும் சாப்பிட மாட்டேன். எது எனக்கு ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் தான் தேடிப் போய்  சாப்பிடுவேன். சின்ன வயசில் இருந்தே நான் சாப்பாட அடம் பிடிக்க மாட்டேன். நிறைய காய்கறிகள் சாப்பிட பிடிக்கும். கீரை கூட்டு, கேரட் பொரியல்  ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். சின்ன வயசில் பள்ளிக்கு போகும் போது அம்மா நெய் கலந்த பருப்பு சாதம் தருவாங்க. இப்பக்கூட அந்த டிபன் பாக்சை  நினைக்கும் போது, நெய் பருப்புடன் கலந்த வாசனை வரும். இப்ப நினைச்சாலும் எனக்கு சாப்பிடணும்ன்னு எண்ணம் ஏற்படும். தென்னிந்தியாவில்  எந்த ஓட்டலுக்கு போனாலும் தோசை தான் விரும்பி சாப்பிடுவேன்.

11ம் வகுப்பு படிக்கும் போது எங்க பள்ளிக்கு அருகே ஒரு சின்ன கடை இருக்கும். அங்கு பரோட்டா, சில்லி சிக்கன் பிரமாதமா இருக்கும். டியூஷன்  முடிச்சிட்டு ஃபிரண்சுடன் போய் சாப்பிடுவேன். வார இறுதி நாட்களில் பிரியாணி சாப்பிடுவோம். இப்ப தான் பேரடைஸ், சுக்குபாய் பிரியாணின்னு  எல்லாம் இருக்கு. அப்ப அதெல்லாம் கிடையாது. எங்க வீட்டு பக்கத்தில் சின்ன கடையில் பாய் ஒருவர் பிரியாணி கடை வச்சிருப்பார். அந்த பிரியாணி  டேஸ்ட் இப்ப வரைக்கும் நான் எங்கும் சாப்பிட்டது இல்லை. இது தவிர சிக்கன், மீன் மற்றும் இறால் போன்ற உணவுகளையும் விரும்பி  சாப்பிடுவேன். சின்ன வயசில் மட்டும் இல்லை. இப்பக்கூட பெரிய கடைகளில் எல்லாம் நான் அதிகம் போய் சாப்பிட்டது இல்லை. நான் அதிகமா  சாப்பிட்டது எங்க வீட்டு பக்கத்தில் அல்லது பக்கத்து தெருவில் இருக்கும் லோக்கல் கடைகளில் தான். அங்கு கிடைக்கும்

‘கலக்கி’ யின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. அண்ணாநகர் வள்ளியம்மை கல்லூரிக்கு அருகே ஒரு தெருவில் சின்ன கடை இருக்கு. அங்கு  ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன் நல்லா இருக்கும். இப்போதும் அங்கு ேபாய் பார்சல் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இப்ப ரீசென்டா பட்டுக்கோட்டை  மெஸ்சில் போய் சாப்பிட்டேன். அங்கு மீல்ஸ் மற்றும் ஜிகிர்தண்டா சூப்பரா இருக்கும். மீல்சில் மட்டன், சிக்கன், பிரான் தொக்குன்னு நிறைய  வெரைட்டி இருக்கும். சாப்பிடும் போது அந்த ஊரின் பாரம்பரிய சுவையை உணர முடியும். அதே போல் மயிலாப்பூரில் உள்ள விஸ்வநாதன் மெஸ்சில்  மீன் வறுவல் நல்லா இருக்கும்’’ என்றவருக்கு உணவகங்களை தேடிப் போய் சாப்பிட்டாலும், அம்மா உணவுக்கு எப்போதும் அடிமையாம்.

‘‘நாளு நாள் ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்கு போனா அம்மா சாதம், சாம்பார், பருப்பு நெய்யின்னு செய்து வச்சு இருப்பாங்க. சில சமயம் புலாவ்,  பிரியாணி செய்வாங்க. அவங்களின் பருப்பு நெய் சாதத்திற்கு வேறு எந்த உணவும் ஈடாகாது. தால் தட்கான்னு சொல்வாங்க. பருப்பு தான் கொஞ்சம்  குழம்பு மாதிரி இருக்கும். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதற்கு பெஸ்ட் காம்போ உருளைக்கிழங்கு ரோஸ்ட். சுடச்சுட சாதத்தில் நெய்யுடன் தால்  தட்கா சாப்பிட்டால் அமிர்தமா இருக்கும். நம்மூர் உணவுகள் போல் கேரளா உணவும் நிறைய சாப்பிட்டு இருக்கேன். கேரளா உணவில் தேங்காய்  எண்ணை தான் பிரதானமா இருக்கும்.

அதனால பலருக்கு பிடிக்காது. எனக்கு அப்படி இல்லை. தேங்காய் எண்ணையின் மனம் என்னை அப்படியே சுண்டி இழுக்கும். வட இந்திய  உணவுகளை நான் அதிகம் சாப்பிட்டது இல்லை. பஞ்சாப், மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் தெரு கடைகளில் கிடைக்கும் வடா பாவ் மற்றும்  சாட் உணவுகளை நான் இன்னும் சாப்பிட்டது இல்லை. அங்கு போய் அந்த உணவுகளை சுவைக்கணும். அப்புறம் மதுரை ரயில் நிலையம் அருகே  உள்ள கடைகளில் இட்லி சாப்பிடணும். அதே போல் மதுரையில் ஜிகிர்தண்டா சாப்பிடணும்’’ என்று சிறு பட்டியலிட்டார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

-ப்ரியா

தால் தடுகா

தேவையானவை

துவரம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
பொடித்த கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப.

தாளிக்க

நெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல் பொடியாக நறுக்கியது
பெருங்காயம் - 1 சிட்டிகை
சிகப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை


பருப்பை நன்கு சுத்தம் செய்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 7 விசில் வரை வேக விடவும். பருப்பு நன்கு வெந்ததும், இதனுடன் கரம் மசாலா பவுடர், கசூரி மேத்தி,  கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும், சிகப்பு மிளகாய்,  பெருங்காயம், பூண்டு மற்றும் கடைசியாக மிளகாய் தூள் சேர்த்து பருப்பில் தாளிக்கவும். தாளித்த பொருட்களை பருப்புடன் நன்றாக கலந்துவிட்டு கொத்தமல்லி தழையை சேர்த்து அலங்கரிக்கவும். இதை சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  சப்பாத்திக்கு பெஸ்ட் காம்பினேஷன்.