3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்!



நீங்கள் மேடை நாடகங்களை ரசிப்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த பெண்மணியை பார்த்திருக்க முடியும். எஸ்.வி சேகர், கிரேசி மோகன், ஒய்.ஜி  மகேந்திரன் ஆகியோரின் நாடக நிகழ்ச்சியின் போது இவர் நம் கண்ணில் சிக்காமல் இருக்க மாட்டார். காரணம் பொதுவாக நாடகங்கள் மற்றும் இசை  கச்சேரிகளை அதை நடத்துபவர்களே ஏற்பாடு செய்வார்கள் என நினைத்திருந்தால் அது தவறு.  மேடையில் நடிப்பது, பாடுவது மட்டும் தான்  அவர்களது வேலை. இந்த நிகழ்ச்சிகளை எந்த தேதியில் நடத்தலாம், எங்கு நடத்தலாம், எந்த சபா ப்ரீயா இருக்குன்னு பார்ப்பது முதல் அரங்கத்தை  ஆறு மாதம் முன்பே புக் செய்வது என அனைத்து ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தான் செய்வார்.

‘‘இது மட்டும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை விற்பனை செய்வது, அதற்கு தேவையான அரங்க அமைப்பு, திரைகள், ஒலி, ஒளி  அமைப்பு உள்ளிட்ட பொருட்களை சபாவுக்கு கொண்டு சேர்ப்பது, நடிகர்களை சரியான நேரத்துக்கு காரில் கொண்டு வருவது, வெளிநாட்டி–்ல்  இருந்தால் விமான டிக்கெட் புக் செய்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவழைப்பது என பல்வேறு பணிகளையும் இவர்கள்  மேற்பார்வையில் தான் நடக்கும்’’ என்கிறார் ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமாட்சி.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர். இவரது கணவர் சிவசங்கர், நாடகத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக ஆர்.எஸ்.மனோகர், டெல்லிகணேஷ்  ஆகியோரின் நாடகங்களை சிவசங்கர் அரங்கேற்றியுள்ளார். இவரது வழிகாட்டுதலின் படி பி.ஏ படித்துள்ள மனைவி காமாட்சியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  பணியை கனகச்சிதமாக செய்துவருகிறார்.லட்சுமண் ஸ்ருதி இசை நிகழ்ச்சியாகட்டும், மிமிக்ரி, நடிகர்கள், இசை கலைஞர்களுக்கான பாராட்டு விழா  ஆகட்டும் வெற்றிகரமாக செய்து முடித்துவிடுகிறார் காமாட்சி. இதுவரை 3200 நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு  செய்துள்ளார். ‘‘எங்க நிறுவனம் சொந்தமாக தயாரித்து கடந்த ஆண்டு அரங்கேற்றிய கல்கியின்  பொன்னியின் செல்வன் 2ம் பாகம் என் வாழ்வில்  மறக்க முடியாத தருணம்’’ என்கிறார் காமாட்சி.

பெங்களூர், மதுரை, கோவை, திருச்சி மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இவர் நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். நாடகங்கள் மட்டுமில்லாமல்  சாதகப்பறவையின் இசைநிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். பாஸ்கி, ராதாரவி இணைந்து நடத்தும் ‘நாடகம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட இருக்கிற  சமூக நாடகம் மார்ச் 31ம் தேதி எங்க நிறுவனம் அரங்கேற்றியது. இதை வெற்றிகரமாக நடத்திவிட்டேன். அது என் சாதனை மகுடத்தில் மற்றொரு  மைல்கல்’’ என்கிறார் பெருமை பொங்க காமாட்சி. ‘‘ஆர்.எஸ்.மனோகர்  காலத்திற்கு பின் புராண நாடகங்களை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம்  காட்டாமல் இருந்துவந்தனர். தற்போது பாகுபலி சினிமாவுக்கு பின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நாடகங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இது தவிர  இளம்தலைமுறையினரின் திறமைகளை கண்டறிந்து ஆண்டுதோறும் பொன்னியின் செல்வன் விருது வழங்கி வருகிறோம்’’ என்றார்  காமாட்சி.

பா.கோமதி