உலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோநாம் ஒவ்வொருவரும் அழகிதான். மனம், உடல் அழகு, முக வசீகரம், அறிவு என இதற்கான அளவுகோல்கள்  தான் மாறுகின்றன. மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் என பல வகை போட்டிகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் நீச்சலாடை அணிவகுப்பாகவே முதலில் துவங்கியது. குறிப்பாக அந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்ட நீச்சலாடைகளை அறிமுகப்படுத்தும் சடங்காகவே இந்த உலக அழகி போட்டி ஆரம்பத்தில் இருந்தது. இப்போது இது வளர்ச்சி பெற்று அறிவை சோதிக்கும் களமாக மாறியுள்ளது.

‘‘எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கைகளுக்கு உழைப்பதே என் எதிர்காலத் திட்டம்’’ என நெத்தியடியாய் அடித்த ஒரே காரணத்திற்காக அனு கீர்த்தி என்ற தமிழக இளம் பெண்ணால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கேட் வாக் செய்ய முடிந்தது. 2018ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி சீனாவின், சான்யா நகரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. உலக தேவதைகள் அத்தனை பேரும் அங்கே குவிந்திருந்தனர். அந்தாண்டிற்கான உலக அழகி போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்றவர்களும் அதை பார்க்க குவிந்த கூட்டமும் தான் விழாக்கோலத்திற்கு காரணம்.

முடிவெடுக்கும் திறன், அழகு, சிந்தனை என பல கட்ட தேர்வுகள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் டிசம்பர் 8ம் தேதி உலகின் சிறந்த அழகி யார் என்பதை அடையாளம் காணும் களமாக சீனா மாறி இருந்தது. இந்தியா சார்பில் திருச்சியை சேர்ந்த அனுகீர்த்தி உள்பட 118 பேர் கலந்து கொண்டனர். அனுகீர்த்தி முதல் 30 இடம் வரை வந்த நிலையில் இறுதிச் சுற்றுக்குள் அவரால் முன்னேற முடியவில்லை. அவர் 2018ம் ஆண்டின் பெஃமினா மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் மெக்சிகோவை சேர்ந்த 26 வயதான சில்வியா வெனிசா போன்ஸ் டி லியோன் சான்ஷே 2018ம் ஆண்டிற்கான உலக அழகி மகுடத்தை சூட்டிக் கொண்டார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகியான இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகிக்கான கிரீடத்தை புன்னகையுடன் சூட்டினார். இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த 20 வயதான நிக்கோலீன் பிச்சப்பா லிம்ஸ்நூகான் பெற்றார். அடுத்த மூன்று இடங்களை பெலாரஸ், ஜமைக்கா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.

- கோமதி பாஸ்கரன்