எழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது!சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி சந்திரபிரபாவுடன் ஒரு நேர்காணல்...

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
- பிரமிள்

எழுத்தாளர் எஸ்.ரா. என்றழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, பிரமிள் எழுதிய இந்த கவிதை வரிகள், பிடிக்கும் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த இன்னொரு கவிதை, சந்திரபிரபா. எஸ்.ரா,வின் காதல் மனைவி. எந்நேரமும் கற்பனையில் ‘சஞ்சாரம்’ செய்யும் ஒரு படைப்பாளியுடன் 23 வருடங்கள் வாழ்ந்து வரும் இனிய அனுபவங்களை மனம் திறக்கிறார் சந்திரபிரபா...

எழுத்தாளரின் மனைவியாக இருப்பது சுகமா அல்லது சுமையா?

யானை ரொம்ப பலமானது. வலிமையானது. ஆனால் அது யானைப்பாகனோடு பழகும் போது அவன் சொல்வதை கேட்டு நடக்கிறது. தன் மீது அவனை ஏற்றிக் கொள்கிறது. காரணம் அவர்களுக்குள் உள்ள உறவு. புரிதல். அன்பு, யானைப்பாகனுக்கு யானை தான் உலகம். அதன் பசி அறிந்து உணவு கொடுக்கிறான். அதை குளிக்க வைக்கிறான். நன்றாக கவனித்துக் கொள்கிறான். எழுத்தாளனின் மனைவியும் அது மாதிரி தான். அது ஒரு மகிழ்ச்சியே

பிறந்தது வளர்ந்தது படிச்சது?


என்னோட சொந்த ஊர் ராஜ பாளையம். அப்பாக்கு வங்கியில் மேனேஜராக பணி. அதனால அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் இருந்தது. ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் வசித்திருக்கிறோம். வீட்டின் மூத்தபெண். சிவகாசி பாலிடெக்னிக்கில் கட்டிடக்கலை படித்தேன். படிப்பில் எப்போதும் முதல் மாணவியாக இருந்து வந்தேன். புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். படித்து முடித்து சில ஆண்டுகள் பொதுப்பணித்துறையில் பணியாற்றினேன். தற்போது தேசாந்திரி பதிப்பகத்தை நடத்தி வருகிறேன். இது எஸ்.ராவின் நூல்களை முழுமையாக வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது

எஸ்.ரா அவர்களின் அறிமுகம்...

நான் சிவகாசியில் பாலிடெக்னிக்கில் படிச்சிட்டு இருந்தேன். எஸ்.ராவின் தங்கை என்னோடு அதே பாலிடெக்னிக்கில் படித்தாள். என் அண்ணன் எஸ்.ரா படித்த கல்லூரியில் படித்தார். அண்ணனின் நண்பர் என்பதால் வீட்டிற்கு அறிமுகம் ஆனார். அவரது தங்கை என்னோடு படித்த காரணத்தால் இன்னும் நெருக்கம் அதிகமானது. கதைகள் படிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அப்படி தான் எங்கள் நட்பு துவங்கியது.

பின்பு அதுவே காதலாகியது. நிறைய பேசிக் கொண்டோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். வீடு எங்கள் காதலை ஏற்றுக் கொண்டது. எழுத்தை மட்டுமே நம்பி முழுநேரமாக வாழ வேண்டும் என அவர் விரும்பியதை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கை பெரும் நெருக்கடியை சிரமங்களை தந்தது. ஆனாலும் அவர் அதில் உறுதியாக இருந்தார். நெருக்கடியான வாழ்க்கை சூழலிலும் அவர் தொடர்ந்து எழுத உதவும்படியாக வீட்டை நானே முழுமையாக பார்த்துக் கொண்டேன். எங்களை இணைச்சது இலக்கியம் தான்.    

அன்பை யார் முதலில் பரிமாறிக் கொண்டது....


சினிமாவில் வேணா காதலை வெளிப்படுத்துவதைப் பார்க்க நல்லா இருக்கும். நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்ல முடியாது. புரிந்து கொள்வது தான் முக்கியம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். நேசித்தோம். நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பின்பு தான் திருமணம் செய்து கொண்டோம்.

எஸ்.ரா என்ற எழுத்தாளர்...


கல்லூரியில் படிக்கும் போதே அவர் கதை எல்லாம் எழுதுவார். இவர் எழுதிய முதல் கதை ‘தண்டவாளம்’கணையாழியில் வெளியானது. அந்த கதையை வெளியான நாட்களிலே வாசித்திருக்கிறேன். அப்போது இருந்து எழுத்து இலக்கியம் தான் அவரது உலகம். சதா படிப்பு, எழுத்து பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். ஊர் சுற்றுவார். அவரைப் போல தேடித்தேடி படிப்பவரை காண்பது அரிது. வீடு முழுவதும் புத்தகங்கள் தானிருக்கின்றன. எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக எந்த வேலைக்கும் போகவில்லை. இதற்காகவே சென்னைக்கு வந்தார்.  

அறையில்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் அலைந்து திரிந்தார். நிறைய கஷ்டங்கள். அதை பற்றி பெரிதாக அவர் வருத்தப்பட்டதேயில்லை. வெளியே சொன்னதுமில்லை. பணத்தை பற்றி ஒரு போதும் பெரிதாக எண்ணியதேயில்லை. புத்தகம் வாங்குவது தான் அவரது ஒரே செலவு. வேறு எதற்கும் பணம் செலவு செய்யமாட்டார். நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பார். டெல்லி திரைப்பட விழாவிற்கெல்லாம் போய்வருவார். பொருளாதார நெருக்கடி வரும் போது சில மாதங்கள் பத்திரிகைகளில் வேலை செய்வார். பின்பு அதை விட்டுவிடுவார். இருபது வருஷங்களுக்கு முன்பாகவே கம்ப்யூட்டரில் எழுத துவங்கிவிட்டார்.

ஒரு நாளைக்கு நாலைந்து மணி நேரம் கம்ப்யூட்டரில் எழுதுவார். அதை திருத்துவார். வீட்டில் இருந்தாலும் டிவி பார்க்கமாட்டார். பழைய பாட்டுகளை விரும்பி கேட்பார். அருணா சாய்ராம் கச்சேரி என்றால் நாங்கள் ஒன்றாக கிளம்பி போய்விடுவோம். அருணா சாய்ராமின்  கச்சேரி எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சினிமா, அரசியல் என பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் பழகுவார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.  சினிமா, ஓவியம், நாடகம் ஆய்வு என பன்முகத் தன்மைகள் கொண்டவராக தன்னை வளர்த்துக் கொண்டார். அது தான் அவரது அடையாளம்.

திருமணம்....

95ல் திருமணம். விருதுநகரில் நடந்தது. திருமணமாவதற்கு முன்பு அவர் சென்னையில் இருந்தார். திருமணமான சில நாட்களில் சென்னைக்கு குடிவந்தோம். நிறைய கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கினோம். யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. பெரிய வசதிகள் எதுவும் கிடையாது. இவ்வளவு பெரிய நகரில் எப்படி வாழப்போகிறோம் என பயமாக இருந்தது. ஆனால் மெல்ல கால் ஊன்றினோம்.

கடந்த கஷ்டங்களை நினைத்தால் மனது கனத்துவிடுகிறது. எழுத்தாளர்களை சமூகம் பெரிதாக நினைப்பதில்லை. அவர்கள் கதைகளை படித்து பாராட்டுவார்களே தவிர அவர்கள் எப்படி வாழுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  தன்னை அங்கீகரிக்கவில்லையே என ஒரு போதும் அவர் வருத்தப்பட்டதேயில்லை. தன் வேலை எழுதுவது என்று உறுதியாக இருந்தார். அந்த மனவுறுதி தான் அவரை இன்று இந்த உயரத்திற்கு கொண்டு போயிருக்கிறது.

நீங்கள் தான் அவரது துணையெழுத்தா?

ஆனந்த விகடனில் அவர் எழுத ஆரம்பிச்சது தான், எழுத்துலகில் அவருக்கு கிடைச்ச  பெரிய பிரேக். ஆனந்த விகடனில் மாணவ பத்திரிகையாளராக வேலை செய்தார் என்பதால் விகடன் எம்.டி பாலசுப்ரமணியத்திற்கு இவர் மீது தனி ப்ரியம். ஆசிரியர் அசோகன், கண்ணன் எல்லோரும் அவரது நண்பர்கள். ஆகவே துணையெழுத்தை தொடராக எழுத சொன்னார்கள். அவர் முதலில் தயக்கம் காட்டினார். நான் தான் உற்சாகம் கொடுத்தேன். துணையெழுத்தை வாசகர்கள் கொண்டாடினார்கள்.

அதுவே அவருக்கான பரந்த வாசகர்களை உருவாக்கியது. வாரவாரம் துணையெழுத்தை படித்துவிட்டு போனில் பாராட்டுகிறவர்கள் ஏராளம். நிறைய பேர் வீட்டிற்கே தேடி வருவார்கள். அப்போது கே.கே.நகரில் இருந்தோம். துணையெழுத்தை தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரினு அவரது தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றன. விகடனில் அதிக தொடர்கள் எழுதியது இவர் ஒருவர் தான். அதுவும் எனது இந்தியா வந்த போது நூறு வாரங்களுக்கும் மேலாக எழுதினார். அந்த புத்தகத்தை ஐ.ஏ.எஸ் படிக்கிற மாணவர்கள் பாடமாக படிக்கிறார்கள் என்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது

அவரின் பயணத்தில் உங்களின் பங்கு...

அவர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிள்ளைங்களையோ என்னையோ விட்டுக் கொடுக்கவே மாட்டார். நாங்களும் அப்படித்தான். குடும்ப பொறுப்பை நான் முழுமையா எடுத்துக்கிட்டேன். அதனால அவரால் சுதந்திரமா எழுத முடிந்தது. அவர் இலக்கியத்தை நேசித்ததை போல நாங்க இவரை நேசித்தோம். எழுத வேண்டியதை முழுமையாக திட்டமிட்டு பெரிய ஷெட்யூல் போட்டு வேலையை செய்து முடிப்பார். எழுத்து எழுத்துனு மட்டுமே நினைப்பு. ஒரு நாள் கூட சும்மா இருக்கமாட்டார். வீட்டை பார்த்துக் கொள்வது எளிதானதில்லை.

ஆனால் அவர் அதை புரிந்து கொண்டிருந்தார். இப்போது அவரது புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகம் ஆரம்பித்துவிட்டேன். டால்ஸ்டாயின் மனைவி இப்படி செய்ததாக ஒருமுறை சொன்னார். அந்த உத்வேகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. தேசாந்திரி பதிப்பகம் ஆரம்பித்த பிறகு எனக்கு அதை கவனித்துக் கொள்வது கூடுதல் பணியாக ஆனது. ஆனால் சந்தோஷமாக அதை கவனித்துக் கொள்ள துவங்கினேன்.  இப்போது அது எஸ்.ராவின் நூறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பலரது புத்தகங்களையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

சாகித்ய விருது....

சாகித்ய அகாடமி விருது, இப்போது கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனா ஒவ்வொரு வருஷமும் நான் எதிர்பார்ப்பேன். இவர் முழு நேர எழுத்தாளர். எழுத்து தான் இவருக்கு எல்லாம். இது போன்ற எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் பெரிய உற்சாகத்தை தரும். அவர் எதையுமே எதிர்பார்க்க மாட்டார்.  இப்போது இவருக்கு சாகித்ய  அகாடமி விருது கொடுத்ததை தமிழகமே கொண்டாடும் போதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவரின் எழுத்துக்கு கிடைச்ச  மரியாதைன்னு நினைக்கிறேன்.

இவர் எழுதியதில் பிடிச்சது....

இவர் எழுதியதில் பிடிச்ச புத்தகம் ‘துயில்’ என்ற நாவல். அதில்  மனிதர்கள் மீதான அன்பையும் கருணையையும் எப்படி வெளிப்படுத்துவதுன்னு ஒவ்வொரு கதாபாத்திரம் மூலம் அழகா வெளிப்படுத்தி இருப்பார். அன்பை உங்க பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சுற்றி இருப்பவர்களிடம் பகிரலாம். ஆனால் அதையும் தாண்டி உலகத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும் இரு கை நீட்டி பகிர்வது எப்படின்னு இதில் விளக்கி இருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவித அன்பினை வெளிப்படுத்தும்.

சென்னை வாழ்க்கை எப்படியிருக்கிறது?


திருமணமாகி வந்தபுதிதில் மிரட்சியாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நானே புதியவர்களுடன் பழகி நட்பை வளர்த்துக் கொள்வேன். வேலை வேலை என எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பரபரப்பு. வாகன நெருக்கடி. அதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது.

கணவராக எஸ்.ரா....

மிகவும் அன்பானவர். வீட்டில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டார். எங்க நாங்க சங்கடப்படுவோமோன்னு தனக்குள் அந்த மனஉளைச்சலை ஏற்றிக் கொண்டார். எழுத ஆரம்பிச்சிட்டா தன்னையே மறந்திடுவார். அந்த சமயத்தில் என்னங்க, எங்களையும் கொஞ்சம் கவனியுங்கன்னு சொன்னா போதும், எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு, குடும்பத்தோடு டூர் கிளம்பிடுவோம். கார் பயணம் என்பதால், எல்லாரும் பேசிக்கொண்டு, விரும்பிய பாடல்களை கேட்டுக்கொண்டு, நினைக்கும் இடத்தில் சாப்பிட்டு செல்லும் போது அந்த சுகமே தனிதான். இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்துவிட்டான்.

அடுத்து சினிமா இயக்கப்போகிறான். அது தான் அவனது கனவு. போன வருஷம் பெண்கள் கிரிக்கெட் பற்றி க்ளீன் போல்ட் என ஒரு குறும்படம் எடுத்தான். நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது தேசாந்திரி பதிப்பக வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறான். அடுத்தவன் ஆகாஷ். +1 படிக்கிறான். அவனுக்கு இசையில் ஆர்வம் உண்டு. கீபோர்ட் படித்தான்.  வீட்டில் உலகின் சிறந்த படங்களை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கிறோம்.  அரசியல், சமூகம். இலக்கியம்னு எல்லா விஷயங்களையும் ஒண்ணா உட்கார்ந்து பேசுவோம்.  அவரோடு ஜப்பானுக்கு போய்வந்தேன். இலங்கைக்கு போய் வந்தேன். ராஜஸ்தான் முழுவதும் சுற்றினோம். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் சந்திரபிரபா.

- ப்ரியா
படங்கள் பரணிகுமார்