இதுதான் என் வாழ்வில் மிகச் சிறந்த ஆட்டம்!பேட்மின்டன் குயின் சாய்னா நேவால்

இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா நேவாலுக்கும் சக டென்னிஸ் வீரர் காஷ்யபிற்கும் மும்பையில் திருமணம் நடந்தேறியது. “பெஸ்ட் மேட்ச் ஆஃப் மை லைஃப்” என்ற வாசகத்துடன் திருமணப் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் இந்த இளம் ஜோடி. இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப்.

இருவரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதை அறிவிப்பு செய்திருந்தார்.

ஹைதராபாத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தின்போது பேட்மின்டன் குயின் சாய்னா நேவால் வெளிர் நீல நிறமும், வெண்மையும், இளஞ்சிவப்பு நிறமும் கலந்த அழகிய லெகங்காவில் புகைப்படங்களில் தோன்றினார். இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பாருபள்ளி காஷ்யப்பினை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாகத் தனது காதல் திருமணம் குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு சாய்னா நேவால் பேட்டி அளித்துள்ளார். ‘‘2007-08ம் ஆண்டுதான் நாங்கள் அறிமுகமானோம்.

இருவரும் இணைந்தே பயணித்தோம். சில போட்டிகளில் இணைந்து விளையாடினோம். அப்போது ஒன்றாகவே பயிற்சி எடுத்தோம். என் பெற்றோருக்கு என் விருப்பத்தை நான் தெரிவிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. என் பெற்றோரே என் விருப்பத்தைப் புரிந்துகொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார். சாய்னா-காஷ்யப் திருமண வரவேற்பு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க, விளையாட்டு துறையினர் மத்தியில் ஹைதராபாத் நகரில் டிசம்பர் 16 அன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

* உலக பேட்மின்டன் தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ளார்.
* விளையாட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.
* பேட்மின்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்தவர்.
* அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.
* ஒலிம்பிக், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்.

- மகேஸ்வரி