தீபாவளி அசத்தல் பலகாரங்கள்
பிரெட் குலோப்ஜாமூன்
என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் - 3, சர்க்கரை - 3/4 கப், தண்ணீர் - 1/2 கப், பால் பவுடர், கன்டென்ஸ்டு மில்க் - தலா 3 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து கொள்ளவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், பால் பவுடர் கலந்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மிதமான தீயில் வைத்து பிரெட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, சர்க்கரை பாகில் போட்டு 5 மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும்.
சென்னா ரசமலாய்
என்னென்ன தேவை?
பனீர் - 1/4 கிலோ, சர்க்கரை - 3/4 கிலோ, பால் - 1 லிட்டர், குங்குமப்பூ - சிறிது, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாலை சுண்ட காய்ச்சி சிறிது சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு ஆறவிடவும். ரசமலாய் ரெடி. பாத்திரத்தில் பனீரை நன்றாக உதிர்த்து மிருதுவாக பிசையவும். மெத்தென்று வந்ததும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பனீர் உருண்டைகளைப் போடவும். இது நன்றாக வெந்து மேலே மிதந்து வந்ததும் கரண்டியால் எடுத்து சிறு கிண்ணத்தில் 4, 5 உருண்டைகள் போட்டு அதன் மீது ஒரு கரண்டி ரசமலாய் ஊற்றி பரிமாறவும்.
நட்ஸ் பனீர் பர்ஃபி
என்னென்ன தேவை?
பனீர் - 1/4 கிலோ, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா 1 சிட்டிகை, நெய் - 50 கிராம், பொடித்த நட்ஸ் கலவை - 1 கப், இனிப்பான கோவா - 100 கிராம், பால் - 1/4 லிட்டர், அலங்கரிக்க சில்வர் தாள் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி சிறிது நட்ஸை வறுத்து தனியே வைக்கவும். கடாயில் பாலை ஊற்றி கொதிக்க விட்டு அதில் துருவிய பனீர் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து கிளறவும். பின்பு சர்க்கரை சேர்த்து கிளறி கெட்டியாக வந்ததும் துருவிய கோவா, நட்ஸ், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு கைவிடாமல் நன்கு கிளறவும். மீதியுள்ள நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி நட்ஸ், சில்வர் தாள் கொண்டு அலங்கரித்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
 சோயா அல்வா
என்னென்ன தேவை?
சோயா மாவு - 1 கப், பால், சர்க்கரை, நெய் - தலா 2 கப், முந்திரி - 30, ஏலக்காய்த்தூள், பச்சை கற்பூரம் - தலா 1 சிட்டிகை, குங்குமப்பூ, கேசரி பவுடர் - சிறிது.
எப்படிச் செய்வது?
பாலில் சோயா மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கெட்டியாக இரட்டைக் கம்பி பாகுபதம் வந்ததும், கரைத்த சோயா கூழ் ஊற்றி கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். அல்வா சுருண்டு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி தூவி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
பலாப்பழ கேசரி
என்னென்ன தேவை?
நறுக்கிய பலாப்பழ துண்டுகள் - 2 கப், சர்க்கரை, ரவை, பால் - தலா 1 கப், முந்திரி - 15, நெய் - 6 டீஸ்பூன், ஏலக்காய் - 4.
எப்படிச் செய்வது?
கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி ரவை, முந்திரியை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆற விடவும். கடாயில் பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் ரவை சேர்த்து கிளறவும். ரவை வெந்து கேசரி பதம் வந்ததும் பலாப்பழத் துண்டு, முந்திரி, மீதியுள்ள நெய், ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
 சிறு பயறு லட்டு
என்னென்ன தேவை?
பயத்தம்பருப்பு - 300 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 கிராம்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயை அடுப்பில் வைத்து பயத்தம்பருப்பை போட்டு பொன்னிறமாக வாசனை வரும்வரை வறுக்கவும். பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் மாவாக அரைக்கவும். பாத்திரத்தில் மாவு, சர்க்கரை பவுடர் இரண்டும்கலந்து நெய்யை சூடாக்கி ஊற்றி கிளறி கைபொறுக்கும் சூட்டிலேயே லட்டுகள் பிடித்து பரிமாறவும்.
சோயா பருப்பு வடை
என்னென்ன தேவை?
சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா 1/2 கப், நறுக்கிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சோயாவை 3 மணி நேரமும், கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். மிக்சியில் சோயா, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து கறிவேப்பிலையை போட்டு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை எடுத்து வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.
- கவிதா சரவணன், திருச்சி.
|