பட்டாசு, விபத்து, உஷார்!



தீபாவளி ஸ்பெஷல்

மற்ற பண்டிகைகளை விட குழந்தைகள் அதிகம் விரும்பும் பண்டிகை தீபாவளி. காரணம் பட்டாசுகள். விதவிதமான சத்தங்கள், வண்ண  வண்ண மத்தாப்புக்கள் என குழந்தைகளை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை பட்டாசுகளுக்கு மட்டுமே உண்டு. எந்த  அளவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இதில் உண்டு. பட்டாசுகளை கொளுத்தும் போது எடுக்க வேண்டிய முன்  எச்சரிக்கை நடவடிக்கைகள், விபத்து மற்றும் காயங்கள் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி ஆலோசனைகளை அளிக்கிறார்  பிரபல தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.
“குழந்தைகளை பட்டாசுகள் வெடிக்கும் போது மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

* பெரியவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும் போது ஒரு பக்கெட் மணல்,் ஒரு பக்கெட் தண்ணீர் அருகில் இருக்க வேண்டும்.
* தலைமுடியை கட்டிக் கொண்டு பட்டாசு கொளுத்தணும். தீப்பிடிக்கும் ஆபத்துண்டு.
* லூசான, தரையில் புரளும்  ஆடைகளை அணிய  வேண்டாம். நைலான் துணியும் வேண்டாம், தீப்பிடித்தால் உடம்பில் ஒட்டிக்கொள்ளும்.  காட்டன் ஆடைகள் அணிவது நல்லது.
*  பட்டாசு வெடிக்கவில்லை என்று எட்டிப்பார்க்க வேண்டாம். புஸ்வாணம், மத்தாப்பு போன்றவை திடீரென்று வெடித்துவிடும். அதிக அளவு  நகைகளை போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். தீப்பிடித்தால் கழட்டுவது சிரமம்.
 
முதலுதவிகள்


* சின்னச் சின்ன காயம் என்றால் உடனே குளிர்ந்த நீரில் காயம் பட்ட இடத்தை நனைக்க வேண்டும். எரியாமல் இருக்க மாய்ச்சரைசிங்  கிரீம் போடலாம். ஆலோவேரா கிரீம் கூலிங் எபெக்ட் தரும்.
* கொஞ்சம் பெரிய காயம் என்றால் சோப் வாட்டர் போட்டு வெடி மருந்துகளை சுத்தம் செய்து ஆன்டிசெப்டிக் கிரீம் தடவ வேண்டும்.  தோல் பிய்ந்திருந்தால் நீக்க வேண்டாம்.
* தீக்காயத்தின் மீது காட்டன் வைக்காதீர்கள். காயத்தில் பஞ்சு ஒட்டிக்கொள்ளும்.
* மோதிரம் போன்றவை இருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும். தீப்பட்ட இடத்தில் கொப்புளம் வந்தால் கழற்றுவது சிரமமாக  இருக்கும்.
*  கொப்புளம் ஏற்பட்டால் உடைக்காதீர்கள்.
* கையில் அடிபட்டால் கைகளை இதயத்திற்கு மேலே தூக்கிப்பிடிக்க வேண்டும். அப்படி செய்யும் போது வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.
* தீக்காயத்தின் மீது இங்க் மற்றும் கரித்தூள் போடக்கூடாது.
* சுத்தமான துணியினால் காயம்பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
* பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உடம்பில் தீப்பிடித்துக்கொண்டால் Stop –- Drop- Roll என்ற முறையை பின்பற்ற வேண்டும். அதாவது  மணலை கொட்டி அந்த இடத்தில் அவர்களை ஓடாமல் நிறுத்தி படுக்க வைத்து மணலில் உருள வைக்க வேண்டும். திக்கான சுத்தமான  போர்வை போட்டும் உருட்டலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது பதட்டம் கூடாது.''

-ஸ்ரீதேவி மோகன்