SCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்




SCARF INDIA நிறுவனம் 1984ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மனச்சிதைவு நோய்களைப் பற்றிய  ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், மனநலம் பாதிப்புக்குள்ளான பலருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிறுவனம்  கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த சிறந்த கட்டுரைகளை எழுதி வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களின் சிறந்த  கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, சிறந்த பத்திரிகையாளர் விருதை வழங்கி வருகின்றது.

இந்த 2018ம் ஆண்டுக்கான SCARF மீடியா விருதை, மாநில மொழிகளுக்கான பிரிவில் எங்களின் தினகரன் குழுமத்தைச் சேர்ந்த  இதழ்களான ‘குங்குமம் டாக்டர்’  இதழில் இடம்பெற்ற “குடும்பத்  தகராறுகளால் நிகழும் துயரங்களுக்கு தீர்வு என்ன?!” என்ற தலைப்பில்  வெளியான கட்டுரைக்காக அதன் தலைமை உதவி ஆசிரியர் உஷா நாராயணன் மற்றும் ‘குங்குமம் தோழி’ இதழில் உண்மைச் சம்பவத்தை  தழுவி எடுக்கப்பட்ட ‘பேரன்புடன்’ குறும்படத்தை வைத்து எழுதிய ஆட்டிசம் விழிப்புணர்வுக் கட்டுரையான “இயற்கையின் தவறை மனிதம்  கொண்டு உடைப்போம்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் மகேஸ்வரி இருவரும் பெற்றுள்ளனர்.

விருது தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இடம்பெற்ற பல முக்கிய ஊடகங்களின் கட்டுரைகளில்  இருந்து, மிக முக்கியமான ஐந்து கட்டுரைகள் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆங்கில ஊடகங்கள் மூன்று விருதை  வென்றுள்ளது. தமிழ் ஊடகங்களுக்கான இரண்டு விருதுகளும்  குங்குமம்  குழுமத்திற்கே கிடைத்துள்ளது.