மேற்குலகின் மையம்



அமெரிக்கப் பயணக் கட்டுரை

மினி தொடர்

சரஸ்வதி சீனிவாசன்

சிகாகோ மிக்சிகன் ஏரி

குழந்தைகள் அருங்காட்சியகம் பார்த்து விட்டு, நேரமின்மையால், லேக்  மிக்சிகன், சிகாகோ (Chicago) பார்ப்பதற்கு மற்றொரு நாள்  நிச்சயித்திருந்தோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு உற்சாகத்துடன் புறப்பட்டோம். ஊர் முழுவதையும் சுற்றிப் பார்ப்பது கூட  ஒரு அருமையான பொழுதுபோக்குதான். காரணம், பழமையான கட்டட நுணுக்கங்களையும், கலைநயத்துடன் கூடியவாறு வடிவமைக்கப்பட்ட  பெரிய பெரிய கட்டடங்களைக் கொண்டு விளங்கும் அழகான ஊர் சிகாகோ.

மிகப்பெரிய ஏரியுடன் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் சிகாகோ. உலகளவில் மிக நீளமான ஏரியும்கூட என்று சொல்லப்படுகிறது. இந்த  நகரம் விஸ்கான்சின், இலிநாய்ஸ், இண்டியானா, மிக்சிகன் ஆகியவற்றின் எல்லையாக இருந்து வடக்கு மற்றும் தெற்குப் பகுதி வரை  நீண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கே பார்க்க வேண்டிய இடங்களில் என்னைப்  பொறுத்தவரை இதற்குதான் முதலிடம் தரவேண்டும்  என்றுதான் சொல்வேன். அதுவும் கோடையில், நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் குளுமையான காட்சிகள் நிறைய உண்டு. முதலில்  நான் லேக் கல்கூன் பார்க்கும் பொழுது ஆச்சரியப்பட்ட விஷயம் ஒன்று.

நிறையப் பேர் கார்களில் படகு பாகங்களை பிரித்துக் கட்டி எடுத்து வருவர். ஏரியை வந்தடைந்த பின், பாகங்களை ஒன்று சேர்த்து பெரிய  படகு அமைப்பை ஏரியில் எறிவர். பின் ஒரு குதி குதித்து படகில் அமர்ந்து துடுப்புப் போடுவர். பார்த்துக் கொண்டேயிருக்கையில் நடு  ஏரிக்குச்  சென்று விடுவர். இப்படியாக அக்கரையில் உள்ள தீவுகள் வரை சென்று மீண்டும் கரை திரும்புவர். ஆண்கள் மட்டுமல்ல,  பெண்களும் சிலர் சொந்த படகு வைத்துக் கொண்டு அக்கரை வரை செல்வதுண்டு. இத்தகைய காட்சிகளைக் கண்டபோது எனக்கு ஒன்று  புரிந்து விட்டது. தங்களின் பொழுதுபோக்காகவும், மன சந்தோஷத்திற்காகவும்தான் நிறைய பேர் நீர்நிலைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

லேக்  மிக்சிகன் பலப்பல கோணங்களில் அற்புதமாக காட்சியளிக்கிறது. குளிர்காலத்தில் பனிப்படர்வு கூட மிக அற்புதம். மனதிற்கு  அமைதி தரக்கூடிய அற்புதமான இடம். அவசரமாக வந்து போகிறவர்களுக்குக் கூட சிலவற்றைப் பார்க்காமல், போக மனசு வராது. அந்த  அளவுக்குப் பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கே நிறைந்து கிடக்கின்றன. ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கான தனி அரங்கம், கலை  சம்பந்தப்பட்ட அரங்கம், கோல்ஃப் கிளப், தண்ணீர் தீவு பார்க், இயற்கை அரங்கம், கிளாசிக் சினிமா, பொழுதுபோக்குமிடம், ஸ்கேட்டிங்  சென்டர், நமக்குப் பிடித்த ஷாப்பிங் இடம் என அனைத்தும் இங்கே இருப்பதுடன் கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளுக்கான பலப்பல  ஆராய்ச்சி மையங்களும் இங்கே உள்ளது.

அமெரிக்காவில் பெரும்பாலான இடங்கள் இயற்கையின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையோடு, தொழில்நுட்பத்தையும்  இணைத்து இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் செயலாக்கியுள்ளார்கள். இருப்பினும் ஒவ்வொரு இடத்தையும் புதுப்பித்துக்  கொண்டும், புதிய புதிய முன்னேற்றங்களையும் கொண்டு நிறைய புதுமைகளைப் புகுத்துகிறார்கள். நாங்களும் முதன் முதலில் பார்த்த  இடத்தை ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்பொழுது பலவிதமான மாற்றங்கள் அங்கு நடந்திருப்பதைப் பார்த்தோம். ஏரிகள் இயற்கை  நீர்நிலைகளாக இருந்தபோதிலும், அதிலும் அதைச் சுற்றிலும் எத்தனை இடங்கள் பார்ப்பதற்கு. அதிலும் நடைபாதை கூட என்ன ஒரு  அருமை தெரியுமா? நமக்கு யாரேனும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்களா என்றால் அத்தகைய இடம் இதுவேதான்.

வடஅமெரிக்காவின் ஐந்து முக்கிய ஏரிகளில் கொள்ளளவில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இந்த மிக்சிகன் ஏரி. விஸ்கான்சின்  பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிதான் முதன் முதலில் மிக்சிகன் ஏரியில் ஆழ்ந்த அடிவரை சென்றதாகச் சொல்கிறார்கள். இந்த  ஒரு ஏரி முழுவதும் அமெரிக்காவிலேயே அமைந்துள்ளது. மற்ற ஏரிகள் கனடா வரை செல்வதால் இரண்டு நாடுகளுக்கும் பிரிவாக  இருக்கிறது. எந்த ஏரியாக இருந்தாலும் அதன் நீர் அவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறது. லேக் வாக் என்றாலே ஒரு சுகம் தரும்  அனுபவம் என்றுதான் சொல்கிறார்கள். காரணம் இது நடைபாதை மட்டும் கிடையாது. இங்கே எந்த போக்குவரத்து இடைஞ்சலும்  கிடையாது. சுகமான காற்று உடலுக்குக் குளிர்ச்சி தந்து உடல் பிணியை போக்குகிறது.

சுற்றிலும் கண்களுக்கு விருந்து. இயற்கைக் காட்சிகள் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்று விடும். சீதோஷ்ண மாற்றம் வரும்  பொழுதெல்லாம், மரம் செடிகளின் வண்ண மயமான இயற்கை மாற்றம் வர்ணிக்க முடியாது. அந்த இலைகளின் மாற்றத்தை கண் எதிரே  பார்க்கும்பொழுது என் கண்களையே நம்ப முடியவில்லை. அப்படி அழகழகான வண்ணங்கள், சிவப்பு, பிரவுன், ரோஸ் போன்ற வண்ணங்கள்  இலைகளையே பூக்கள் போன்று மாற்றிக் காட்டியது. அப்படியானால் பூக்களைப் பற்றி யோசியுங்கள். பச்சைப் பசேலென்ற ஏரி  நடைபாதையில் வண்ண வண்ண பூக்கள் கொட்டிக் கிடக்கும். அதன் மேல் கால் வைக்கக்கூட மனது கஷ்டப்படும். இயற்கை அன்னையின்  வரப்பிரசாதமில்லாமல் இதை என்னவென்று கூறுவது? நடந்து சென்றால்தான் இத்தகைய அற்புதக் காட்சிகளை ஒவ்வொன்றாக ரசிக்கலாம்.

இந்த மிக்சிகன் அமைந்துள்ள ஊரே அழகானது. இதன் ஓரங்களில் நடந்து சென்று ரசிப்பதற்காகவே தினம் மக்கள் கூட்டம் வருகிறது.  ஏரியின் நீளத்திற்கு வண்டிகள் பார்க் செய்யப்பட்டிருக்கும். அதிலும் கூட அழகான வரிசை. அழகான சிகாகோவில் அமைந்துள்ள சிகாகோ  நதியும் சரித்திரப் புகழ் பெற்றது. மீன் பிடித்தலும் இங்கு பிரபலம். உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் இந்த  மிக்சிகன் ஏரியின் கட்டட நுணுக்கங்களையும், சிகாகோ நதியின் அமைப்பும் அதன் அழகைக் கூட்டும் வினோதமான கலையம்சங்களையும்  பார்த்தால் போதும். இது போன்ற காட்சிகள்தான் நம் மனதிற்கு சந்தோஷத்தையும், இளமையையும் தந்து சுறுசுறுப்பாக  வைக்கின்றதோ   என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அதனால் தான் இங்கே இருப்பவர்கள் எண்பது வயதுகளில் கூட சுறுசுறுப்பாகத் தெரிகிறார்களோ  என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன்.

ஐந்து மணி நேர பகல் டூர், நதி பார்க்க, ஏரியின் பலவித கோணங்களைப் பார்த்து ரசிக்க என விதவிதமான பாஸ் டிக்கெட்டுகள்  பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வலம் வரலாம். ஓடிஸி டின்னர் என்றதும் எனக்கு மிகவும் புதுமையாகப்பட்டது. அவ்வப்பொழுது  புதுப்பித்துக் கொண்டேயிருக்கும் ஆடம்பரமான உணவு விடுதி. ஆடம்பரமான பாத்திரங்கள், முழுவதும் புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள்  போன்றவை எனக்கு நம் ராஜாக்கள் வாழ்ந்த காலத்தை நினைவுபடுத்தின. எதிலும் புதுமையுடன் கலந்த பழமையும், ஆரோக்கியமும்  பாராட்டத்தக்கவை. அமெரிக்கா என்றவுடன் எல்லாமே பெரிய பணக்காரர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். எங்கள் வீட்டு வாசலிலேயே  சிறிய உணவகம் பார்த்தேன். ஒரு பெரிய ஹால் தான். குட்டையான சுவர் அமைப்பு தான்.

ஹால் முழுவதும் நான்கு பேர் அமரும்படியான மேசை நாற்காலிகள். மேசைகளின் மேல் நம் ஹரிக்கேன் விளக்குகள் போல் தொங்கிக்  கொண்டிருந்தன. ஒரு சிறிய மூலை தான் சமைப்பதற்காக இருந்தது. வெளியில் திறந்தவெளி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கு  பார்த்தால் சனி, ஞாயிறுகளில் வரிசையில் கூட்டமாக நிற்கிறார்கள். இடம் சிறிதாக இருந்தாலும், ஆரோக்கியமான சுவையுள்ள உணவுகள்  சுடச்சுட கிடைப்பதால், பனியிலிருந்து வெளிப்படும் கோடைக்காலங்களில் மக்கள் வெளியே வர மிகவும் விரும்புவார்கள். சிகாகோவில்  இரவு சாப்பாடு ஆடல் பாடலுடன் கிடைக்கும். லேக் மிக்சிகன் பார்க்க  விரும்பிப் போனால், ஏரியின் பலவித கோணங்களை, அதன்  மேலுள்ள கட்டட நுணுக்கங்களை, அதன் நடைபாதையை என ஒவ்வொன்றையும் ரசிக்க முடியும். படகு சவாரி கேட்கவே வேண்டாம்.  அப்படி ஒரு அற்புதம். பட்டாசு விடுவதும் ஒரு அற்புதக் கலைதான். ஏரிகளில்தான் விதவிதமான பூச்சரங்கள் வண்ண விளக்குகள் போன்று  சிதறி விழுவதைப் பார்க்கலாம்.

லேக் மிக்சிகன்ல படகு சவாரி செய்து கொண்டு, அதன் அமைப்பை ரசித்துக் கொண்டு லேக் ஃபுட் (Lake food) எடுப்பதற்கு ஈடு இணையே  கிடையாது என்கிறார்கள் அங்குள்ளவர்கள். சாப்பாடு வேண்டாமா, பிட்ஸா டூர் என்று சொல்கிறார்கள். அதுவும் ஒரு ஸ்பெஷல்  என்கிறார்கள். எப்படியும் இதையெல்லாம் கண்டுகளித்தும், கேட்டு ரசிப்பதுமே ஒரு இனிமையான அனுபவம்தான். சாப்பாடு மட்டும்  எனக்கென்று சில கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டதால், வெளியில் ரொம்பவும் சாப்பிட மாட்டேன். மற்ற அனைத்து பொழுது  போக்குகளும், புது இடங்கள் புது மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள் அமெரிக்கா செல்ல நேர்ந்தால்  சிகாகோ மற்றும் மினியோபோலிஸில் நான் சொன்ன இடங்களை பார்க்கத் தவறாதீர்கள். உங்களோடு என் அமெரிக்கா பயணக்  கட்டுரையில் கடந்த மூன்று மாதங்களாக உரையாடி வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.                                                                                                                                                                                     

(முற்றும்)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்