‘#மீ டூ’ இவர்கள் என்ன சொல்கிறார்கள்..?கடந்த சில நாட்களாக இந்த ஹேஷ்டேக் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  பெண்கள், அவர்கள் சந்தித்த பாலியல்  தொந்தரவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த ஹேஷ்டேக் அதிகம்  ட்ரண்டாகியுள்ளது. பல பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் தங்களின் நிலைப்பதிவில்  ‘#Me too’  என்று மிகவும்  தைரியமாகவே  பதிவிட்டிருந்தனர். இது குறித்து சிலரிடம் கருத்துக் கேட்டபோது…

மு.வி.நந்தினி, பத்திரிகையாளர்


நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?


‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே  கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால்  ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள்.  தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’  அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ  இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை  முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல.  நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை  என்பதை நாம் உணர வேண்டும்.

பெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய  ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை  பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய  நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு  கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில்் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள்.  இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்  இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி  கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள்  அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் - அவமானம் கொள்ளச் செய்தல்’ என  அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும்  இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும்  அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த  ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.

மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை?

Abuse(துன்புறுத்தல்) ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ  துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க  வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச்  சேர்ந்ததுதான்.

Boys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள்  சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை  மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் கருதுவது)பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை  சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.

Mansplaining(ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக,  பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.

Molesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு  அழைப்பது.

Negative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு,  பதிலை எதிர்பார்ப்பார்கள்.

Negging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை  சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை  கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது. ஏதோ கிசுகிசு போல எண்ணி  நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில்,  பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால்  வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’

உஷா, திரைப்பட இயக்குநர்

ரகசியம் உடைத்தெறிவதே பயத்தை எதிர்கொள்வதற்கான எளிய வழி!


‘‘எந்தப் பெண்ணும் இங்கு இயல்பாய் இருப்பதில்லை. வேட்டை யாடப்படுவோம் என்ற பயத்தில் எவ்வளவுதான் எச்சரிக்கையாய்  இருந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் இறையாகிறாள். மரியாதைக்குரியவனாய், நம்பிக்கைக்குரியவனாய், உறவிற்குரிய வனாய் இருக்கும்  ஒரு ஆணின் பாலியல் சீண்டலை எதிர்கொள்வது மீளவே முடியாத பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதற்கு பிறகான நாட்களில் ஒட்டுமொத்த  ஆண் சமூகத்தையும் பார்த்து பீதியடைய செய்கிறது. நாடகத்தை எளிதாக அரங்கேற்றும் ஆண்களுக்கு ஒரு சதவிகித வலி கூட  புரிவதில்லை. ஒரு பெண் எதை சொல்லக்கூடாது என்று அமிழ்த்து வைக்கப்பட்டாளோ, எதை சொன்னால் இந்த சமூகத்தில் இருந்து  ஒதுக்கிவைக்கப்படுவாள் என்று தயங்கி விழுங்கினாளோ, அதைப் பற்றி மெதுவாய் துணிச்சல் எடுத்து பேசவர, எங்க நடந்தது..? எப்ப  நடந்தது..? எப்டி நடந்தது..? ஏன் இவ்ளோ நாள் சொல்லல..? ஏன் இப்ப சொல்ற..? ஏன் சட்ட ரீதியா அணுகல..? என்ன ஆதாரம் இருக்கு  என்றெல்லாம் கேள்விகளுக்கு உட்படுத்தி, அதே நிலைக்கு அவளைத் தள்ளுவதை சமூகம் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது.

இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது சொல்லும் போதே கூனிக்குறுக செய்திடும் கேள்விகள் அன்று சொல்லியிருந்தால்  அறியாமையில் வாழ்க்கையையே முடிக்க வைத்திருக்கும். #மீடூவில் பெண்கள் விரல் சுட்டும் ஆண்களின் மீதுள்ள குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவனுக்கு சப்போர்ட் செய்து இது ஒரு ஆணின் இயல்புதானே... அன்றே அதை எதிர்த்திருந்தால் முடிந்திருக்கும்..  இத்தனை வருடங்கள் கழித்து சொல்வதிலே தெரிகிறது லட்சணம் என்றல்லவா நாம் அணுகுகிறோம். கேள்விகளை வளைத்து,  பெண்களிடம் தானே கேட்கிறோம்.. ஆளவிடுங்கடா சாமி என்று கையெடுத்துக் கும்பிடவைக்கிறோம்... ஆயுசுக்கும் சொல்லாமல்  இருந்திருக்கவேண்டும் என்று அவள் குரல்வலையை அறுத்தெரிய முயற்சி செய்கிறோம்.அவள் வாயை அடைத்து,  இது உன் விதி என்று  வீட்டிற்குள்ளேயே கட்டிவைத்ததன் ஒட்டுமொத்த விளைவு தான் அவள் கட்டறுத்து வருவது.

தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்களை, சுரண்டல்களை, அடக்குமுறைகளை வெளிப்படையாய் பேசவேண்டும் என்று வெளிப்படுவதற்கு  மட்டும்தான் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய உந்துதல், துணிச்சல் தேவைப்படுகிறது. அப்படி வெளிப்படுபவளை என்ன முயன்றாலும்  உட்காரவைக்க முடியாது. அவள் எதையும் எதிர்கொள்ளத் தயாரானவள். தூரத்தில் எங்கோ எரிந்த தீப்பந்தம் ஒவ்வொன்றாய் பற்றவைத்து,  இன்று இவள் வீட்டருகில் வந்து நிற்க, ஏற்றலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாள். இதுவரை  ஒத்திகை பார்த்ததெல்லாம் போதும். இனியும் அரங்கேற்றம் நடத்தினால் எதற்கும் தயங்காமல் ஹேஷ்டேக் போட்டுவிடுவாள். ஒரு பெண்ணிடம் அவள் உடலைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை என்று தீர்மானித்து  அதை மட்டுமே அவளிடம்  பகிரக் கேட்கும்  ஆண்கள் வாய்ப்பிழக்கிறார்கள்... தோளுரிக்கப் படுகிறார்கள், #மீடூவால்.

தோளுரிக்கப்பட்டவர்கள் தண்டனைக்குட்படுத்தவெண்டும் என்று போராடப்போவதில்லை..  தொடராமல் இருக்கட்டும் என்று எச்சரிக்கிறாள். என்னை பயமுறுத்தி பயமுறுத்தி என் பயத்திலிருந்து தைரியம் வளர்த்து  ஆண் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, ரகசியமாய்  நிகழ்த்திவிட்டு என் இயலாமையை எள்ளி நகையாட முடியாது. ரகசியம் உடைத்தெறிவதே பயத்தை எதிர்கொள்வதற்கான எளிதான வழி.  வெளியே சொல்வோம்.  தினம் தினமாய் வலியை, சுரண்டல்களை அனுபவிப்பதை விட, அதைப் பற்றி பேசி முடிவுக்கு  கொண்டுவருவோம். இக்கால, வருங்கால பெண்களுக்கு தைரியம் கொடுப்போம். விழிப்புணர்வு கொடுப்போம்.’’

முத்தமிழ் கலைவிழி, நீலம் அமைப்பு

பெண்கள் இங்கு ஒன்றுபட வேண்டும்!


‘‘கவிஞர் மாயா ஏஞ்சலோ சொல்வதைப்போல் “ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக தடைகளை தகர்த்து எழும் போது, தன்னை  போன்ற  எல்லா பெண்களுக்கும் அவள் எழுந்து நிற்கிறாள்.” அமெரிக்க நாட்டினது சமூக ஆர்வலர் தாரானா புர்கே கறுப்பின பெண்களுக்கு  நிகழும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவணப்படம் எடுத்தபோது,  13 வயது சிறுமி தனக்கு  நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலை பகிர்ந்தார். அப்போதுதான் ‘metoo’ பயன்படுத்தப்பட்டது.  கடந்த ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்  ஹார்வி வெய்ன்ஸ்டைனுக்கு எதிராய் வந்த குற்றச்சாட்டுகளால் #metoo மீண்டும் கவனம் பெறத் தொடங்கியது. எல்லா காலத்திலும்  யாராவது ஒரு பெண் தனக்கோ, மற்ற பெண்ணுக்கோ நிகழ்ந்த அநீதிக்கெதிராய் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இது  நடப்பியல் உண்மை என்பதை நவீன போராட்ட வடிவங்கள் மூலமாக பெண்கள் செய்து வருகிறார்கள் என்பதை  “#மீ டூ ஹேஷ்டேக்”  நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

காலங்காலமாக மறைக்கப்பட்ட  உண்மைகளை பெண்கள் உரக்க பேசியதோடு, குற்றவாளிகளை தைரியமாய் அடையாளம் காட்டும்   துணிச்சல் வரவேற்கத்தக்கது.  பெண்களுக்கு மன வலிமையையும் தைரியத்தையும் இந்த #மீ டூ பிரச்சாரம் நிச்சயம் தருகிறது அப்பாவிற்கு  கிடைத்த வாய்ப்புகளும், சுதந்திரமும் அம்மாவுக்கும் கிடைத்திருந்தால் என்ன மாதிரியான சாதனைகளையெல்லாம் அவர் செய்திருப்பார்  என நினைக்கத் தோன்றும். பெண்களுக்கு பலவிதமான உரிமைகளும், வாய்ப்புகளும், சட்டங்களும், கொள்கை சார்ந்த மாற்றங்களும்  ஏற்பட்டிருப்பது கவனத்திற்குரியது. ஆனால் முக்கியமாக நிகழ வேண்டிய மாற்றம் நமது அணுகு முறையிலும், சிந்தனையிலும் தான்.  பெரும்பாலும் நாமெல்லாம் பழைமையை இறுகப் பிடித்து மாற்றங்களை ஏற்பதில் வெறுப்புக் காட்டுகின்றோம். மாற்றங்களை ஏற்று,  ஆண்கள் தங்களை சரி செய்ய முற்படும்போது, பெண்களுக்கு எதிராய் நிகழும் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவர்களாக ஆ்ண்கள்  இல்லாவிட்டாலும், அதை நிகழ்த்துபவர்களாக இருக்கமாட்டார்கள்.

அனைத்துப் பெண்களும் ஒடுக்குமுறையை தனது வாழ்நாளில் வெவ்வேறு பரிணாமங்களில் அனுபவித்தும், கடந்தும், எதிர்கொண்டும் தான்  வருகின்றனர். இந்த ஒடுக்குமுறைக்கு  எதிராக ஒற்றுமையை பெண்கள் கட்டமைக்க வேண்டும். ஒற்றுமைதான் பெண்கள் மீது  நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்களையும், வக்கிரங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் மிகப்பெரும் ஆயுதம்.‘மீ டூ’ பெண்கள்  தொடுத்திருக்கும் ஒரு யுத்தம். இந்த யுத்தத்தில் ஆண்களை அடையாளப்படுத்துவதே வெற்றிக்கு முக்கியம். சாதி, மதம் கடந்து  நிபந்தனையற்ற ஆதரவை எல்லா பெண்களும் கொடுக்கவேண்டும்.  அ

ப்படிப் பெண்கள் ஒன்றுபட்டால் மட்டுமே இது சாத்தியம். பாதிக்கப்பட்டவர்களின் குரலை உயர்த்துவதுதான் இந்த பிரச்சாரத்தின்  முக்கிய  குறிக்கோள். இது  பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது கதைகளை  உரக்க சொல்லும் பிரச்சாரம். ஓங்கி ஒலிக்கும் பல குரல்களுக்கு  நடுவிலும், ஒருசில ஆண்களின் மனிதத் தன்மை இன்னும்  வறண்டு போய்தான்  இருக்கிறது. மனித சமூகத்தை இரண்டு கூறுகளாகப்  பிரித்து அதில் ஒன்றை அடக்கி வைப்பதுதான் உலகின் வரலாறு. இந்த வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டு சமத்துவத்தை நோக்கி  செயல்பட முன்வந்தால் மட்டுமே தீர்வை நோக்கிப் போக முடியும். ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே உண்மையாக நடந்து கொள்ளும்  நீதி நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும்.’’

-மகேஸ்வரி