வீட்டைச் சுற்றி மூலிகை வனம்சின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று  யாரை கேட்டாலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், சிறுநீரகப் பழுது, புற்றுநோய், இதய நோய் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் குணப்படுத்த எத்தனையோ ஆயிரங்களை செலவு செய்கிறோம். ஆனால் இந்த வியாதிகளை குணப்படுத்த நம் நாட்டு மூலிகைகளே போதும் என்கிறார் சென்னை மாடம்பாக்கத்தில் மூலிகை பண்ணை வைத்து நடத்தும் கண்ணகி ராஜகோபால். அவரது மூலிகைப் பண்ணையில் அவரை சந்தித்தோம்.

‘‘நம் வீட்டைச் சுற்றி எத்தனையோ மூலிகைகள் செடி, கொடி, மரமாக கிடக்கிறது.  ஆனால் அதை என்னவென்று தெரியாமல், மதிக்காமல், அதைப் பயன்படுத்துவதில்லை. உலகத்திலேயே எல்லா மூலிகைகளும் கிடைப்பது தமிழ் நாட்டில்தான். இது பல சித்தர்கள் வாழ்ந்த பூமி. அவர்கள் எத்தனையோ மூலிகை பொக்கிஷங்களை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளனர். நாம்தான் மறந்து விட்டோம். 

எனக்கு இதில் ஆர்வம் வர காரணம்,  எனக்கு உடலில் ஏற்பட்ட சில பிரச்னைகளுக்கு சிகிச்சையாக மூலிகை மருந்துகளை சாப்பிட்ட பின்னர்தான் பல நாள் கஷ்டம் ஒரேநாளில் தீர்ந்தது. இதை முதலில் நம்பவேண்டும். அதன்பிறகு தேடித்தேடி மூலிகைகள் பற்றி தெரிந்துகொண்டேன்.

காடுகள், மலைகள் எல்லாம் அலைந்து திரிந்து தேடிப்பிடித்தேன். இப்போது என்னிடம் நூற்றுக்கணக்கான மூலிகைகள் உள்ளன. வீட்டிலேயே பண்ணை அமைத்து  விற்பனையும் செய்து வருகிறேன்’’ என்றவர், தன்னிடம் உள்ள மூலிகை மற்றும் அதன் சிறப்புப் பண்புகள் பற்றி கூறினார்.

இந்த மூலிகைகளை தேடி நீங்கள் காடுகரை என அலைய வேண்டாம். இவை எல்லாமே நம் வீட்டைச்சுற்றி வளர்ந்து நிற்கும் தாவரங்கள்தான். ஆனால், நமக்குதான் எதையும் தெரியவில்லை.

ஏனெனில், நம் முன்னோர்கள் அவற்றை நமக்கு அடையாளப்படுத்தாமலே இருந்துவிட்டனர். ஒருசிலவற்றை நமக்கு அடையாளப்படுத்தியும் நாகரிக வளர்ச்சியில் நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டோம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், காடு, விவசாய பூமி என அனைத்தையும் அழித்துவிட்ட நிலையில் இன்று அதன் அருமை தெரிய வருகிறது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. இந்த மூலிகை இந்த நோய்க்கு பயன்படும் என்பது தெரிந்துகொண்டாலே நம் கண்முன் நம் உயிர்காக்கும் மூலிகைகளை அழியாமல் பாதுகாக்கலாம்’’ என்றவர், இந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்துவரும் பொருட்கள் பற்றியும் கூறினார். ‘‘மூலிகைகளைக்கொண்டு நிறைய பொருட்களை தயாரித்து வருகிறேன்.

மூலிகை மூட்டுவலி தைலம், மூலிகை பல்பொடி, மூலிகை பேன்மருந்து, மூலிகைபேஸ்பேக், கோபுரம்தாங்கி கூந்தல் தைலம். இவை மட்டுமல்லாமல் பல அரியவகை மரங்களையும் வளர்த்து வருகிறேன். புன்னை, ருத்ராட்சம், திருவோடு, மனோரஞ்சிதம், கடம்பம், மருதம், பாதிரி, முள்ளுசீத்தா, பன்னீர் மரம், வெப்பாலை.இவற்றை வளர்ப்பது எளிது’’ என்கிறார்.


- தோ.திருத்துவராஜ்