உலக மேடையில் ஒளிர்ந்த சென்னை சிறுமி!
சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன், தனது கித்தார் இசை மூலமாக கர்நாடக இசையையும், ராக் இசையையும் இணைத்து மேடையை அதிரவிட்டதுடன், உலகம் முழுவதும் இன்று பேசப்படும் பெயராக மாறி, இசை ரசிகர்களின் இதயத்தை வசீகரித்திருக்கிறார். அவரின் இசைப் பயணம் இரண்டு வயதில் தொடங்குவதற்கு காரணம் அவரின் பாட்டி. கர்நாடக சங்கீதத்தின் இனிமையை மாயாவின் மனதில் விதைத்திருக்கிறார் அவர். அந்த விதை வேரூன்ற, மாயா ஆறு வயதில் தந்தையின் வழிகாட்டுதலில் கித்தார் கற்கத் தொடங்கி இருக்கிறார்.  மாயாவின் தந்தை அடிக்கடி Metallica மற்றும் Slayer இசைக்குழுக்களின் பாடல்களை மாயாவுக்கு வாசித்துக் காட்டத் தொடங்க, மாயாவின் மனதில் ‘ராக் இசை’ மீது காதல் வளர்ந்திருக்கிறது. ஒன்பது வயதில் கித்தார் பிரசன்னா மூலமாக கர்நாடக சங்கீதத்தின் ஆழங்களை, கித்தார் வழியாகக் கற்றவர், இன்று கர்நாடக இசையோடு, ராக் இசையையும் இணைத்து வாசித்ததன் மூலமாக உலகம் பேசும் சிறுமியாய் உயர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவின் காட் டேலன்ட் (America’s Got Talent) மேடையில் மாயாவின் திறமை உலகையே கவர்ந்தது. தமிழக பாரம்பரிய உடையில் மேடையில் நின்றவர், கர்நாடக ராகத்துடன் தொடங்கி, பாப்பா ரோச் (Papa Roach) இசைக்குழுவின் லாஸ்ட் ரிசார்ட் (Last Resort) பாடலை கித்தாரில் வாசித்து மேடை அதிர அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மாயாவின் திறமையை ‘Perfect audition’, ‘Gutsy and incredible” என்று நடுவர்கள் புகழ்ந்து தள்ள, சைமன் கவெல் அவரை ‘Rock Goddess’ என்று அழைத்த தருணத்தை உலகமே கண்டு ரசித்தது.
மாயாவின் அசாதாரண திறமையை உலகப் புகழ்பெற்ற மெட்டாலிக்கா (Metallica) இசைக்குழுவும் பாராட்டியது. அந்தக் குழுவின் கித்தார் கலைஞர் Adam Jones மாயாவின் திறமையை கண்டு மெய்சிலிர்த்து, கையொப்பமிட்ட Gibson Les Paul கித்தாரை பரிசளித்தார்.
காலிறுதிச் சுற்றில் மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ் (Master of Puppets) பாடலை மாயா வாசித்தபோது, அவர் சிறுமி என்பதையே மறக்க வைக்கும் அளவுக்கான வித்தையை அவரின் விரல்கள் இசைத்துக் காட்டியது. அதன் பின்னர் மாயாவின் பாதை உலக அரங்குக்கே சென்றது.மாயாவை பாராட்டியவர்களில் டூல் (Tool) இசைக்குழுவின் கலைஞர் ஆடம் ஜோன்ஸ், ஸ்லேயர்(Slayer) இசைக்குழுவின் க்ரே ஹோல்ட் போன்ற உலக இசை பிரமுகர்களும் இடம்பெற்றனர்.
தொழிலதிபர் ஆனந்த் மஹீந்திரா மாயாவை மும்பையில் நடைபெறும் Mahindra Blues Festival மேடைக்கு அழைத்தது மேலும் அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
மாயாவின் இசை, உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு இந்தியச் சிறுமி அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், உலகம் முழுவதும் தன் இசையால் தனது அடையாளத்தைப் பதித்திருக்கிறார்.
மாயாவின் திறமை ஒரு குழந்தையின் திறமை மட்டுமல்ல... தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவற்றால், உலகின் எந்த மேடையிலும் பெண்கள் மிளிர முடியும் என்பதை சேர்த்தே உணர்த்துகிறது.
மகேஸ்வரி நாகராஜன்
|