சிறு உதவி சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மக்களை உலுக்கிக் கொண்டிருந்தபோது, தன் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனைகளுக்கு கொடுத்து உதவி செய்த சீதா நமக்கு பிரபலமானவர். 23 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பல சேவைகளை செய்து வரும் சீதா, ஸ்ட்ரீட் விஷன் (street vision) தொண்டு அமைப்பின் சார்பில் மேலும் பல்வேறு உதவிகளையும் மாற்றங்களையும் செய்து கொண்டே இருக்கிறார். சீதாவின் 23 வருட சேவைக்காக அவரை பாராட்டி அவரிடம் பேசிய போது...  “சாலையோரங்களில் தங்கியிருக்கும் கஷ்டங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். எனக்கு அவர்களின் வலிகள் புரியும். எனவே, தொடர்ந்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்து மறுவாழ்வினை அமைத்துக் கொடுத்து உதவி வருகிறேன். சென்னையில் தொடர்கின்ற சேவை மட்டுமின்றி, மணிப்பூரில் பிரச்னையில் பலரும் கொல்லப்பட்ட நிலையில், பசியும் பட்டினியுமாக சாலையோரங்களில் இருந்த மக்களுக்கு உதவ சென்றேன். நிறைய குழந்தைகள், கர்ப்பிணிகள் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து இப்போது வரை உதவி வருகிறேன்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் நலன் கருதி, அவர்களுக்காக ‘வாழ்வகம்’ என்ற பெண்கள் காப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளோம்.
சென்னையில் சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களை மீட்க எங்களுக்கு அழைப்பு வரும். காவல்துறையின் உதவியுடன் அவர்களை மீட்டு காப்பகத்தில் பாதுகாப்பு அளித்து பராமரித்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஒரு பெண் நகைகளுடன் வீட்டை விட்டு வந்துவிட்டார். அந்தப் பெண்ணிற்கு பாதுகாப்பு அளித்து காப்பகத்தில் தங்க வைத்தோம். சில மாதங்களுக்குப் பிறகு யதார்த்தமாக ஒரு கடையின் வாசலில் அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் அவரை காணவில்லை என்று நோட்டீஸ் ஒட்டியிருந்தது.
தகவல் அளித்ததும் ஆந்திராவில் இருந்து பெண்ணின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர் கொண்டுவந்த நகைகளை பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தோம்.
மாதக்கணக்கில் எங்களுடன் காப்பகத்தில் இருந்த போது அந்தப் பெண் தனக்கு என்ன பிரச்னை என்று எதையும் சொல்லவில்லை. அவரின் பாட்டி திட்டியதால் வீட்டை விட்டு வந்துவிட்டதாக போகும்போது தெரிவித்தார்.
கருவில் இருக்கும் குழந்தை முதல் தள்ளாத வயதில் உள்ள பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்கள் முதல் வயதான கிழவி வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
இவர்கள் மட்டுமில்லை... வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைப்பதில்லை. வீட்டில் உள்ளவர்களே உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துகிறார்கள். அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். செல்ல இடமின்றி சாலையில் ஒதுங்கும் இவர்களுக்கு பாதுகாப்பும் கிடைப்பதில்லை. இது போன்ற பெண்களை காப்பகத்தில் தங்க வைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மீட்டு சிறு தொழில், வேலை அமைத்து தருவது, படிக்க உதவுவது போன்றவற்றை செய்து வருகிறோம். சில பெண்கள் குழந்தைகளுடன் ஆதரவில்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு காப்பகம் அமைத்து பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதில் பல சவால்களும் நிறைந்துள்ளன. சிலரின் உண்மையான பிரச்னை என்னவென்று தெரியாது.
கவுன்சிலிங் கொடுத்து அவர்களை மனரீதியாக பலப்படுத்த வேண்டும். சில பெண்களின் கணவன்மார்கள், ‘என் மனைவியை அடிக்க உரிமை இருக்கிறது’ என்று கூச்சலிடுவார்கள். இது போல் பல சவால்களை தாண்டித்தான் பெண்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. காலங்கள் மாற, நாகரிகம் வளர மாற்றங்கள் வரும் என்றெல்லாம் எதிர்பார்த்தால் அது நடப்பதில்லை.
முன்பெல்லாம் பிறந்த பிஞ்சு குழந்தையை எங்கேயேனும் வீசி விட்டு செல்வார்கள். அந்தக் குழந்தைகளை மீட்டெடுத்து ஆதரவு இல்லங்களில் சேர்த்து படிக்க வைக்கும் போது, சமூகத்திற்கு அந்த குழந்தை யாருக்கேனும் உதவி செய்யும்.
தற்போது பிள்ளைகளே பெற்றோர்களை ஆதரவு இல்லங்களில் சேர்க்கின்றனர். இந்நிலை மாறவே இல்லை. சிலர் அவர்களை மொழி தெரியாத ஏதாவது ஒரு ஊரில் விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். வயதானவர்களை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்களுக்கான காப்பகங்கள் உள்ளன.
எத்தனையோ நல்லுள்ளம் கொண்டவர்கள் அவர்களுக்கு உதவுகின்றனர். அங்கு சேர்த்துவிடுங்கள். இவ்வாறு தவிக்கவிட்டு செல்ல வேண்டாம்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.“23 வருடங்களாக ஸ்ட்ரீட் விஷன் எனும் அமைப்பின் மூலம் பல சேவைகளை செய்து வருகிறேன்.
கொரோனா சமயத்தில் ஆக்சிஜன் சப்ளை செய்ய உதவிய போதுதான் ரும்பாலானவர்களுக்கு என் சேவை பற்றி தெரியவந்தது. இப்போது வரையிலும் ‘ஆக்சிஜன் ஆட்டோ’ இயங்கி கொண்டுதான் இருக்கிறது.
மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் இயக்கி வருகிறோம். அவசர உதவிகளுக்காக எங்களுக்கு பல இடங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. எனவே, மேலும் சில வாகனங்கள் கிடைத்தால் எங்களால் சிறப்பாக சேவையினை தொடர முடியும். ஸ்ட்ரீட் விஷன் சார்பாக மகிழ்வகம், வாழ்வகம், தாயகம் போன்ற காப்பகங்கள் செயல்பட்டு வருவது போல், ஆதரவில்லாமல் தவிக்கும் மக்களுக்காக ஒரு வாழ்விடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆதரவு தேடி யார் வந்தாலும், எங்க இல்லத்தில் இடம் அளிக்க விரும்புகிறேன். அதற்கான பெரிய அளவில் இல்லம் அமைக்க இடம் உள்ளது. ஆனால், கட்டுமானத்திற்கான உதவி இன்றளவும் கிடைக்கவில்லை.
யாரேனும் உதவியினை செய்ய முன்வந்தால் நிச்சயம் விரைவில் அமைதியான சூழல் கொண்ட வாழ்விடத்தை அமைத்து தர முடியும். அந்த இல்லத்தில் வயதானவர்கள் நிம்மதியாக உண்டு உறங்க வேண்டும் என்பதே என் ஆசை. என் தாயார் கொரோனா தொற்று பாதிப்பினால் இறந்த நிலையில் என் தந்தையும் இரண்டு வருடங்களுக்கு முன் காலமானார். நான் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுடன் என் சேவையை தொடர்ந்து வருகிறேன்.
எல்லோரையும் முழு நேர சேவை செய்ய வேண்டுமென நான் கேட்கவில்லை. ஆனால், சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் யாரேனும் ஆதரவின்றி, உடல்நலம் மற்றும் மன நலம் சரியில்லாமல் தங்களின் நிலையறியாமல் இருப்பதை பார்த்தாலோ, அவர்களே உங்களிடம் உதவியென்று கேட்டாலோ அவர்களுக்கு உதவுங்கள்.
ஒருவேளை உணவு வாங்கி கொடுத்து காவல்துறைக்கு அல்லது பாதுகாப்பு இல்லங்களுக்கு தகவல் கொடுங்கள். இது போன்ற சமயங்களில் உதவுவதற்கு அரசு சார்பாக அவசர உதவி எண்களும் உள்ளன. உங்களின் சிறு உதவி சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிற சமூக அக்கறையுடன் சில கோரிக்கையை முன்வைத்தார் சீதா.
ரம்யா ரங்கநாதன்
|