மகத்தான ஆரோக்கியம் அள்ளித் தரும் மைக்ரோ கீரைகள்!



மண்ணில் தோன்றிய ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்திற்குமான அடிப்படை ஆரோக்கியம்... அதற்கு முக்கிய தேவை உணவு. சத்தான உணவுகள் மட்டுமே நம் உடலையும் அறிவையும் வலுப்படுத்தும். 
இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்தான உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. ஆனால், இன்றளவில் உடை தொடங்கி உணவிலும் மேற்கத்திய நாகரிகம் கலந்துவிட்ட காரணத்தால் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உண்கிறோமா என்பது கேள்விக்குறியே!  
சென்னைப் போன்ற நகரங்களில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளைதான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். அதே சமயம் இந்த உணவினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர் மத்தியில் இருப்பதால், அவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி அதற்கான தேடலில் நேரம் செலவிடுகின்றனர். 
பள்ளிகளிலும் ஜங்க் ஃபுட்ஸ் குறித்த அறிவுரைகள், செயல்முறை விளக்கங்கள், ஃபுட் பெஸ்டிவல் போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகள் மத்தியிலும் சத்தான உணவுகள் குறித்த விழிப்புணர்வு உயர்ந்தே காணப்படுகிறது.

சமூக ஊடகங்களிலும் ஆரோக்கியம் தொடர்பான பல ரீல்ஸ், வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருவதால் ஊட்டச்சத்துகள் குறித்த அறிவு மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். சிறுதானிய உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருவதும் இதன் வெளிப்பாடே ஆகும். 

விவசாயிகளும் தங்களை நம்பும் மக்களுக்காக மண்ணிலே புதுப்புது முயற்சிகளை செய்து பாடுபடுகின்றனர். ஆனால், மண்ணில்லா விவசாயத்திலும் மகத்தான ஆரோக்கியத்தை பெறலாம் என்கிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘சாமு மைக்ரோ கிரீன்ஸ்’ நிறுவனர் திருமதி சாமுண்டீஸ்வரி. 

‘‘எனக்கு சொந்த ஊர் பண்ருட்டி பக்கத்தில திருவதிகை. என் கணவர் ஸ்தபதி. கோயில், மியூசியத்திற்கு சிலைகள் செய்பவர். எனக்கு ஒரு மகள். நான் எம்.ஏ., எம் எட். எஜூகேஷன்ல எம்ஃபில் முடிச்சேன். டீச்சராகணும்னு படிச்சேன். என்  மகள் பிறக்கும் போது அவளின் எடை ஒன்னே கால் கிலோதான் இருந்தது. 

அவளுக்காக வேலைக்கு போகல. குழந்தைக்கு ஆறு மாதங்களான பிறகு இணை உணவா சத்தான கீரை சூப்கள் கொடுக்க சொல்லி டாக்டர் பரிந்துரை செய்தாங்க. 

அதன் மூலம் எடை கூடும் என்று சொன்னாங்க. கடைகளில் கீரை இருந்தாலும் ரசாயனம் மூலம் பயிர் செய்ததாகத்தான் இருந்தது. அதனால் எங்க வீட்டு பின்புறம் கீரைத் தோட்டம் அமைத்து அந்தக் கீரையை தான் என் மகளுக்கு கொடுத்தேன். அவளுக்கு ஒரு வயதான போது, அந்த வயதிற்கான எடையில் இருந்தாள். 

அதன் பிறகு என் மகளுக்கு எந்தக் கீரை கொடுத்தால் அவளுக்கு சத்துள்ளதாக இருக்கும்னு தேட ஆரம்பிச்சேன். கீரைகளைப் பற்றி நிறைய படிச்சேன். அப்போதுதான் ‘மைக்ரோ கிரீன்ஸ்’ பற்றி தெரிய வந்தது. 

மைக்ரோ கிரீன்ஸ் முறையில் வளர்க்கப்படும் கீரைகளில் 40 மடங்கு அதிகம் சத்து இருக்கும்னு தெரிஞ்சது. எந்த வகை கீரைகளாக இருந்தாலும் அவை புதிதாக முளைவிடும் போது, இரண்டு இலைகள் முழுசா வளர்ந்திருக்கும். அந்த நிலையைதான் மைக்ரோ கிரீன் என்று குறிப்பிடுவார்கள். 

அதாவது, விதையில் இருந்து கீரைகள் முளைத்த அடுத்த நிலை. இந்தக் கீரைகள் முளைத்த ஏழு நாட்களில் அறுவடை செய்திட வேண்டும். இதனை அப்படியே சாப்பிடலாம். மூணாவது இலை வந்தால் அதை பேபி கிரீன்ஸ் என்று கூறுவோம். அதை சமைத்துதான் சாப்பிட வேண்டும். பேபி கிரீன்ஸில், மைக்ரோ கிரீன்ஸ் அளவிற்கு சத்துக்கள் முழுமையாக இருக்காது. 

ஆரம்பத்தில் மூங்கில், கொட்டாங்குச்சி, பனைப்பொருட்களில் மைக்ரோ கிரீன்ஸ் வளர்த்து என் மகளுக்கு கொடுத்தேன். என் மகளுக்கு 11 வயதான பிறகு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். அப்போது என் மகள்தான் ‘மைக்ரோ கிரீன்ஸ் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் போது, அதையே பிசினசா பண்ணுங்க, மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க’ணு சொன்னா. எனக்கு அது நல்ல யோசனையாக இருந்தது’’  என்றவர், அதை முறையாக பயின்ற பிறகு பயிற்சி அளிக்க துவங்கியுள்ளார். 

‘‘மைக்ரோ கிரீன்களை நான் பயிரிட்டு என் மகளுக்கு கொடுத்திருந்தாலும், எனக்கும் அது குறித்து முறையான பயிற்சி தேவைப்பட்டது. EDII பெரியகுளத்தில் வசந்தன் செல்வமிடம் கற்றுக் கொண்டேன். 

தமிழ்நாடு முழுவதும் EDII தொழில்முனைவோர் பயிற்சி மையத்துடன் இணைந்து எல்லா ஊர்களிலும் பயிற்சிகள் தர துவங்கினோம். மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என பலர் ஆர்வமாக இதனை கற்றுக்கொள்ள முன் வருகிறார்கள். குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் என்பதால் பலரும் இந்தப் பயிற்சியினை எடுத்துக் கொள்கிறார்கள். 

மைக்ரோ கிரீன்களை, சீனா முதல் எல்லா நாடுகளிலும் 30 வருடங்களாக வளர்க்கிறாங்க. சாலட், சான்வெட்ஜஸ், சூப் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

இந்தியாவில்தான் இன்னும் பிரபலமாகவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் நாங்கள்தான் முதன் முதலில் பிசினசாக ஆரம்பித்தோம். 120 வகையான மைக்ரோ கிரீன்ஸ் வளர்த்து சர்வதேச வேளாண் விருது பெற்றிருக்கிறேன்’’ என்று பெருமையாக கூறுகிறார் சாமுண்டீஸ்வரி.

‘‘காய்கறிகள், பழங்கள், மரங்கள், பூக்கள், விதைகள் என 200 வகையான விதைகளை பயன்படுத்தி மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி செய்யலாம். ஐந்து முதல் முப்பது வகையான மைக்ரோ கிரீன்ஸ் வீட்டிலேயே வளர்க்கலாம். பழங்களில் கொய்யா விதைகளின் கிரீன்ஸ் மிகவும் நல்லது. 

பூக்களில் சாமந்தியின் மைக்ரோ கிரீன்ஸ் மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை மைக்ரோ கிரீன்சில் உள்ள விறுவிறுப்பு தன்மைக்காக நட்சத்திர ஓட்டல்களில் உணவில் சேர்க்கிறார்கள். பல பயன்கள் இருக்கும் சூரியகாந்தியின் மைக்ரோ கிரீன்சுக்கு தான் இப்போது மார்க்கெட்டில் அதிக டிமான்ட் இருக்கு. 

நான்கு வருடங்களுக்கு முன் 100 ரூபாய் முதலீட்டில் என் சொந்த உபயோகத்திற்காக ஆரம்பித்தேன். இன்று அதுவே பிசினசாக தொடங்கி மாதம் பல ஆயிரங்கள் சம்பாதிக்கிறேன். நாங்கள் மதிப்புக் கூட்டுப் பொருட்களும் இதன் மூலம் தயாரிக்கிறோம். 

சாலட் மிக்ஸ், சூப் மிக்ஸ், அடை, தோசா மிக்ஸ், ஸ்மூத்தி, ஜூஸ் மிக்ஸ் போன்றவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், பெரும்பாலானவர்கள் பச்சையாக சாப்பிட விரும்புவதில்லை. கீரைகள் சாப்பிடாத குழந்தைகளும் மிக்ஸாக கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுறாங்க. 

இந்தக் கீரைகளைக் கொண்டு மிக்ஸ் தயாரிக்க, திருப்பூர் மாவட்டம், விஜயமங்கலத்தில் தனிப்பட்ட தொழிற்சாலை ஒன்றை திறந்திருக்கிறோம். இந்தத் ெதாழிலில் நாங்க குடும்பமாக ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு முழுக்க 20 பேருக்கு பிரான்சிஸி உரிமை கொடுத்துள்ளோம். சென்னையில் 100 பேருக்கும், கோவையில் 100 பேருக்கும் மினி பிரான்சிஸி உரிமை கொடுத்திருக்கோம். 

ஜிம், யோகாசன பள்ளிகள், சூப்பர் மார்க்கெட், தனியார் பள்ளிகள், உயர்தர ஹோட்டல்கள், கஃபே ஆகியவற்றிலிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. சித்தா மற்றும் நேச்ரோபதி மருத்துவர்களும் விரும்பி வாங்குகின்றனர். இது உடலை ஆரோக்கியமாகவும், சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழகு நிலையங்களில் முகப் பளபளப்புக்கு இந்த பவுடர்களை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்துகிறார்கள். 

எல்லா தொழிலையும் போல் இந்த பிசினசிலும் சில ரிஸ்க்குகளும் இருக்கின்றன. சில சமயம் விதைகள் 20% முளைக்காமல் போகும். அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தாலும், அதனை செயல்படுத்த ஆரம்பிக்கும் போதுதான் தவறுகளும் குறையும். இந்தியாவின் அனைத்து மாநில விவசாயிகளிடமிருந்தும் விதைகளை வாங்குகிறோம். தமிழ்நாடு அரசு ‘நியூட்ரி கார்டன்’ திட்டத்தில் உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சி அளித்தேன். 

மொபைல் ஃபோன் உபயோகிக்கும் பள்ளிக் குழந்தைகள் முதல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் என அனைவருக்கும் இந்த மைக்ரோ கிரீன்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்து சிறு வயதிலேயே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இனி பிறக்கும் குழந்தையும், பிரசவிக்கும் தாய்மார்களும் சத்துக் குறைபாட்டுடன் இருக்கக் கூடாது என்பதை நோக்கி இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன்’’ என்றார் சாமுண்டீஸ்வரி.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: கணேஷ்குமார்