உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!



நலம் யோகம்!

கடந்த வாரம் ‘கூலி’ படக் கொண்டாட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதில் முக்கிய விஷயமாக ரீல்ஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதாவது, “உடம்பை கவனிக்கலைன்னா உடம்பு உன்னை தண்டிச்சிடும்” என நடிகர் ரஜினிகாந்த் அவரது பாணியில் ஸ்டைலாக மேடையில் பேசியிருந்தார்.
இதைத்தான் திருமூலரும் தனது திருமந்திரத்தில் “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என உடம்பை பேணும் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

*நான் அதிக எடையுடன் இருக்கிறேன். என்னால் யோகா செய்ய முடியுமா?
*எனக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. நான் யோகா செய்யலாமா?
*I am not flexible. Can I do yoga?
*கண்களை மூடி என்னால் அமைதியாக உக்கார முடியாது. எனவே, தியானம் எல்லாம் எனக்கானதல்ல.

இப்படியாக பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் பலருக்கும் இருக்கலாம். இதற்கெல்லாம் ஒரே பதில், ஆம். நீங்களும் யோகா செய்யலாம் என்பதே. யோகா செய்வதற்கு உடல், உயிர் இரண்டும் இருந்தால் போதும். ஆனால், யோகாவை, உடலை வருத்தி செய்தல் கூடாது. அவ்வளவே.

உங்களுக்கு அருகாமையில் உள்ள யோகா ஆசிரியர் ஒருவரை அணுகி, உங்கள் பிரச்னைகளை அவரிடத்தில் சொல்லி, ஆலோசனைகளைப் பெறும்போது, எதைச் செய்ய வேண்டும், எதைச்  செய்யக்கூடாதென அவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். இனி இந்த இதழுக்கான ஆசனங்களான உத்தான பாதாசனம் மற்றும் விருக்ஷாசனம் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.

உத்தான பாதாசனம்

விரிப்பு ஒன்றின் மீது மல்லாந்து படுத்த நிலையில், கைகள் இரண்டையும் உடலை ஒட்டி இருக்கும்படியாக வைக்க வேண்டும். அப்போது கால்கள் இரண்டும் நீட்டிய நிலையிலே சேர்த்து வைக்க வேண்டும்.இப்போது தரையிலிருந்து 30 டிகிரி கோணத்தில் கால்கள் இரண்டையும் சேர்த்து மெதுவாக மேலே தூக்க வேண்டும். 

வயிற்றுப் பகுதியில் அப்போது ஒரு இருக்கம் தெரியும். இதே நிலையில் 20 நொடிகள் இருந்துவிட்டு, பிறகு 60 டிகிரி கோணத்திற்கு கால்கள் இரண்டையும் மெல்ல மேலும் உயர்த்த வேண்டும். 

இதே நிலையிலும் 20 விநாடிகள் இருக்க வேண்டும். அடுத்து கால்கள் இரண்டையும் 90 டிகிரி கோணத்திற்கு மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையிலும் 20 விநாடிகளுக்கு அப்படியே இருந்து விட்டு மெதுவாக கால்களை கீழே இறக்க வேண்டும்.

சிலருக்கு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மேலே தூக்கிப் பிடித்து, அதே நிலையில் அப்படியே வைத்திருப்பது கடினமானதாகத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் படத்தில் காட்டியிருப்பதுபோல், ஒவ்வொரு கால்களாக 30 டிகிரி, 60 டிகிரி, 90 டிகிரி கோணத்தில் கொண்டுவந்து இந்த ஆசனத்தை எளிமைப்படுத்தியும் செய்ய முயற்சிக்கலாம்.

பலன்கள்

* இந்த ஆசனம் செய்வதால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறையத் தொடங்கும்.

* முதுகுத்தண்டு, வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் பலம் பெறும்.

* அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

* பெண்களுக்கு பேறு காலத்தில் விரிவடைந்த வயிற்றுப் பகுதி, குழந்தை பிறந்த பிறகு இயல்பு நிலைக்கு வராமல் அப்படியே நின்றுவிடும். காரணம், இவர்களின் abdominis rectus தசைகள் விரிந்திருக்கும்.

இவர்கள் சாதாரண வேலைகளையும் செய்ய முடியாத சிரமங்களுக்கு உள்ளாவார்கள். எனவே, இந்த ஆசனத்தை தினம் 10 முதல் 15 விநாடிகள் தொடர்ந்து செய்து
வர பிரச்னை தீர்ந்து பலன் கிடைக்கும்.

விருக்ஷாசனம் (Tree pose)

விருக்ஷம் என்றால் மரம். தலை, கழுத்து, முதுகுத்தண்டு நேர்க் கோடாக இருக்கும்படியாக, இரண்டு பாதங்களையும் விரிப்பின் மீது இணைத்து வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும். பார்வையை அப்போது ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியில் செலுத்துதல் வேண்டும்.

இப்போது வலது காலின் முட்டியை மடக்கி உயர்த்தி, இடது காலின் உள்தொடையில் பாதம் பதிய வைக்க வேண்டும். தொடக்க நிலை பயிற்சியாளராக இருந்தால் படத்தில் காட்டியிருப்பது போல், தொடைக்குப் பதிலாக கெண்டை கால் அல்லது கணுக்கால் பகுதியில் பாதத்தை வைத்துக் கொள்ளலாம். 

அப்போது உடலில் சம நிலை ஏற்பட்டது எனில், இரண்டு கைகளையும் மார்புக்கு நேராக வைத்து வணக்கம் வைப்பதைப்போல் நமஸ்கார முத்திரை செய்தல் வேண்டும். இந்த நிலையிலும் உடலுக்கு சமநிலை கிடைத்துவிட்டது எனில், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் அப்படியே தூக்கிப் பிடிக்க வேண்டும். 

இதுவே விருக்ஷாசனம்.இதே நிலையில் 60 விநாடிகளுக்கு அப்படியே நின்று விட்டு, கைகளை பக்கவாட்டில் இறக்க வேண்டும். பிறகு காலை தொடை மீதிருந்து மெல்ல விலக்க வேண்டும். இதை அப்படியே இடது பக்கம் முட்டியை மடக்கி அதேபோல் செய்தல் வேண்டும்.

பலன்கள்

* மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்தி, கவனச் சிதறலை குறைக்க பயனுள்ள ஆசனம்.

* கால் தசைகளை வலுப்படுத்துவதுடன் உடலும், மனமும் சமநிலை பெறுகிறது.

* பார்வையை ஒரு புள்ளியில் மையப்படுத்துவதால் கவனச்சிதறல் ஏற்படாது என்பதுடன் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள் இந்த ஆசனத்தைச் செய்ய உயரம் அவர்களுக்கு அதிகரிக்கும்.

(நலம் யோகம் தொடரும்...)

ஆ.வின்சென்ட் பால்