பாட்டெல்லாம் எனக்கு கேள்வி ஞானம்தான்!



தேவக்கோட்டை அபிராமி

‘‘எல்லையில பூத்தவராம்...
ஏழை மக்களத்தான் காத்தவராம்...
வானுயற நின்னவராம்...

குதிரை வாகனத்தில் வந்தவராம்...’’ என ஆரம்பித்து, ‘‘அங்கே இடி முழங்குது கருப்பசாமி...’’ என தேவக்கோட்டை அபிராமி ஆக்ரோஷம் பொங்க ஆர்ப்பரித்து பாடத் தொடங்க, மொத்தக் கூட்டமும் எழுந்து சாமியாட ஆரம்பிக்கின்றது. எப்படி இதெல்லாம் சாத்தியம் என அபிராமியை ஓரங்கட்டியதில்...

‘‘எனக்கு ஊர் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. என் குடும்பத்தில் யாருக்கும் பாடத் தெரியாது. ஆனால், எனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்துச்சுன்னு எனக்கே தெரியல. பள்ளியில் படிக்கும் போது மேடையேறி பாடுனா பரிசு கொடுப்பாங்க. 
அதனால் பரிசு வாங்குறதுக்காகவே பாட ஆரம்பித்தேன். ஆனால், என் குரல் நல்லா இருக்குன்னு பலரும் சொல்ல ஆரம்பிக்க, அப்பா என்னை அழகப்பா பல்கலைக்கழகத்தில் வோக்கலில் டிப்ளமோ படிக்க வைத்தார். இவ்வளவுதான் எனக்கும் சங்கீதத்திற்கும் உள்ள தொடர்பு. சங்கீதத்தை முறையாவெல்லாம் நான் கத்துக்கல. 

பாட்டெல்லாம் நமக்கு கேள்வி ஞானம்தான்...’’ புன்னகைக்கிறார் அபிராமி.‘‘நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயல் என்ற ஊரில் பாட்டு பட்டிமன்றம் ஒன்று நடந்தது. 

அப்பாவின் நண்பர்தான் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தார் என்பதால், அப்பா என்னை வேடிக்கை பார்க்க அங்கே அழைத்துச் சென்றார். அப்போது அப்பாவின் நண்பர் என்னை மேடையில் ஏற்றி பாட வைக்க, நான் பாடி முடிந்ததுமே பட்டிமன்றம் ஆரம்பிக்க, அங்கு வந்த ஒருவர், ‘இதற்கு முன் பாடிய சிறுமி நன்றாகப் பாடினார். 

அவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்’ என அழைக்க, மீண்டும் மேடையேறியது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அவர் என்னைப் பாராட்டி, என்னுடைய தொடர்பு எண்களை பெற்றுக் கொண்டார்.அதைத் தொடர்ந்து காரைக்குடியில் இயங்கி வந்த ஒரு குழுவில் இணைந்து, கரோக்கி நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தேன். 

நான் நன்றாகப் பாடுவதாக பலரும் பேச, எனது மொபைல் எண் பல்வேறு குழுக்களில் பரவத் தொடங்கியது. இசைக்குழு நடத்து பவர்கள் பலரும் என்னை பாடுவதற்காக அழைக்கத் தொடங்கினர். 

சரி, நாமலே ஒரு இசைக் குழுவைத் தொடங்குவோமேன்னு ‘தேவக்கோட்டை அபிராமி மியூசிக்’ என்கிற பெயரில் ஒரு குழுவைத் தொடங்கினேன். 

இன்று எனது குழுவில் 30 கலைஞர்கள் இருக்கிறார்கள்’’ என்கிற அபிராமி +2 முடித்து, கோவை கல்லூரி ஒன்றில் 4 ஆண்டுகள் கார்டியாக் டெக்னீஷியன் படிப்பை முடித்தவராம். என்றாலும் 
அபிராமியின் ஆர்வம் முழுவதும் பாட்டின் மீதே இருந்திருக்கிறது.

‘‘மேடை கச்சேரி செய்ய, கோவில் திருவிழா, கல்யாணம், அரசியல் நிகழ்ச்சி, கல்லூரி விழான்னு எங்களை அழைக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் சினிமா பாட்டு, நாட்டுப்புற பாட்டு, கானா பாட்டு, ஆட்டம், பாட்டம், கூத்து என கலந்து கட்டி நான்கு மணி நேரம் வரை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திக் கொடுப்போம்.

இந்த நிலையில், 2017ல் நான் ஒரு ஆல்பம் ஸாங் பண்ணி எனது யுடியூப் சேனலில் பதிவேற்ற, என்னோட முதல் ஆல்பம் பாடலே ஒரு மில்லியன் வியூ தாண்டியது. தொடர்ந்து வாரம் ஒரு ஆல்பம் ஸாங் எனத் தயாரித்ததில், 15 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் மட்டுமே இருந்த என்யுடியூப் சேனலுக்கு, 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைத்தார்கள்.

ஆல்பம் ஸாங்ஸை நானும் எழுதியதும் உண்டு. சில பாடல்களை கவிஞர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி பாடியிருக்கிறேன். என் மியூஸிக் குழுவில் கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், கம்போஷர்ஸ், டான்ஸர் என இளைஞர் படை இருக்க... எங்கள் வாழ்க்கை பாட்டு, இசை, நடனம் என ஜாலியாக நகர்கிறது. 

ஒரு முறை நான் மேடையில் எனது இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு கீழிறங்க, அங்கு எனக்காக காத்திருந்த ரசிகை ஒருவர் அவரின் கைகளில் என் முகத்தையும் பெயரையும் பச்சை குத்தியிருந்தார்’’ எனப் புழங்காகிதம் அடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அபிராமி.

‘‘இந்த நிலையில்தான் ஊடக வெளிச்சம் என் மீது விழத் தொடங்கியது. பிரபல சேனல் ஒன்றில், பக்திப் பாடல்கள் குறித்து டாக் ஷோவில் பேச அழைத்தார்கள். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கானா பாடல் ஒன்றை நான் எடுத்து விட, என் வாழ்க்கையில் அது மிகப்பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் என் முகம், சமூக ஊடகங்கள் வழியே பலரையும் சென்றடைய, “தேவக்கோட்டை அபிராமி” எனச் சொல்லும் அளவுக்கு பிரபலம் அடைந்தேன்.

தொடர்ந்து சேனல்கள் என்னை அழைத்து நேர்காணல் செய்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். இசை அமைப்பாளர் இமான் சார், ஜேம்ஸ் வசந்தன் சார் இவர்களின் இசையில் திரைப்படங்களிலும் பாடியிருக்கிறேன். அந்தப் படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

இவை தவிர மேடை நிகழ்ச்சிகளுக்காக குவைத், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன்’’ என்கிற அபிராமிக்கு வயது 22 தானாம்.  அப்பா பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியராகப் பணியாற்ற, அண்ணன் இஞ்சினியரிங் முடித்து ஐ.டி. துறையில் பணியில் இருக்கிறார் என்றவாறு விடைபெற்றார்.

மகேஸ்வரி நாகராஜன்