மாற்றுத்திறனாளிப் பெண்களின் ரோல் மாடல்!
பொதுவாக தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிப்பது, குடிக்க தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையோரம் உள்ள குழந்தைகளுக்கு உடைகள் கொடுப்பது என்று மக்களின் தேவையினை அறிந்து அவர்களுக்கான தொண்டினை செய்து வருகிறார்கள். இதைத் தானே காலம் காலமாக பல தொண்டு நிறுவனங்கள் செய்கிறார்கள் என்று தோன்றலாம்.  ஆனால் இதற்கு நேர்மாறாக, மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து அவர்களின் மன வலியினை ‘தியாகம் பெண்கள் அறக்கட்டளை’ மூலம் போக்கி வருகிறார் மதுரையை சேர்ந்த அதன் நிறுவனரான அமுதசாந்தி! 
இவரும் ஒரு மாற்றுத்திறனாளி. இடதுகை முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில்தான் இவர் பிறந்தார். இனி இவரால் எதுவுமே செய்ய முடியாது என்று பெற்றோர் நினைக்க... அந்த நினைப்பினை தவிடுபொடியாக்கி தனக்கான ஒரு பாதையை அமைத்துள்ளார் அமுதசாந்தி.  ‘‘நான் பிறக்கும் போதே என்னுடைய இடது கை முழுமையாக வளர்ச்சியடையாமல்தான் இருந்தது. அதைப் பார்த்து என் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தார்கள். என்னை எப்படி ஆளாக்கப் போகிறோம் என்று பயந்தார்கள்.
கூடவே வறுமையுடன் காலங்கள் கடக்க, நானும் அதே குறைபாட்டுடன்தான் வளர்ந்தேன். இந்த சமயத்தில்தான் திடீரென்று எங்க வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது.
அப்பா மற்றும் சகோதரர் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக இழந்தோம். வீட்டில் வறுமை காரணமாக நான் திருநெல்வேலியில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்துதான் பள்ளிப் படிப்பை முடித்தேன்.
அங்கு ஆசிரம வேலைகள் மட்டுமில்லாமல் தையல் பயிற்சியும் மேற்கொண்டேன். மேலும் ஆசிரமத்தின் உதவியுடன் வணிகவியல் மேலாண்மை படித்தேன். அதன் பிறகு என் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் மதுரையில் உள்ள ஒரு பண்பாட்டு மையத்தில் கணக்காளர், ஒருங்கிணைப்பாளர், செயலாளர் என மூன்று பணியினை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
வேலை கிடைத்த பிறகு என்னுடைய கல்வியினையும் மேம்படுத்த நினைத்தேன். தொலைதூரக் கல்வி முறையில் வங்கி மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றேன். மேலும் கணினி மற்றும் டேலியில் டிப்ளமோ முடித்தேன்.
மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து எங்களின் அடிப்படை உரிமை, வாய்ப்புகளுக்காக குரல் கொடுத்தேன். அது சார்பாக பல கூட்டங்கள், கருத்தரங்குகளில் எல்லாம் பங்கு பெற்றேன். ஆனால் எங்களுக்கான அடையாளம் மட்டும் கிடைக்கவில்லை. அது எனக்குள் பல கேள்வியினை எழுப்பியது. அதனால் நானே நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் துணிந்து தனியாக களமிறங்க திட்டமிட்டேன். அதில் உருவானதுதான் தியாகம் பெண்கள் அறக்கட்டளை’’ என்றவர், அறக்கட்டளையின் செயல்பாட்டினை விவரித்தார்.
‘‘வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், தன்னம்பிக்கை இல்லாமல் தனக்குள் ஒளித்துக் கொண்ட திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் கிராமப்புற மாற்றுத்திறனாளிப் பெண்களை வெளிஉலகிற்கு கொண்டு வரவே நான் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தேன். அதில் முதல் கட்டமாக இலவச தையல் கலைக்கான பயிற்சி அளித்தேன். இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து கணிப்பொறி மையம் ஒன்றை துவங்கினேன். வெளியூரிலிருந்து வரும் பொருளாதார வசதியில் பின்தங்கியவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இங்கேயே தங்கி இரண்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்று பலர் தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தியுள்ளனர்.
மேலும் பெண்களுக்கான சுயஉதவிக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் இவர்கள் தைக்கும் உடைகள், எம்பிராய்டரி வேலைப்பாடு மற்றும் கூடை பின்னுதல் என பலவற்றை விற்பனை செய்து அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்’’ என்றவரின் அறக்கட்டளை மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைந்துள்ளனர். ‘‘என்னுடைய 22 வயது வரை நான் தாழ்வு மனப்பான்மையுடன்தான் வாழ்ந்து வந்தேன். அதற்கு காரணம் என்னுடைய இயலாமை. அதே சமயம் வீட்டில் உள்ளவர்களையும் பார்த்துக் கொள்ளணும். மேலும் மாற்றுத்திறனாளியான என்னைப் போல் பல பெண்கள் இன்றும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் அறக்கட்டளை ஆரம்பித்த பிறகு நாம் செய்யும் உதவிகள் அவர்களை தவறாமல் போய் சேர வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தேன். அதே சமயம் நன்கொடை கொடுப்பவர்களுக்கும் அதற்கான ரிப்போர்ட்டினையும் சரியாக அனுப்பினேன். இதன் மூலம் நன்கொடையாளர்களிடம் நம்பிக்கையை பெற்றேன். அவர்களும் எங்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய முன்வந்தார்கள். அதுவே எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
ஒருமுறை அழகர் கோயில் அருகே உள்ள வள்ளாலப்பட்டி கிராமத்திற்கு சென்றிருந்த போது, அந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்கள் இருந்தாங்க. மேலும் அங்கு
3 அடி உயரமான சகோதரிகளையும் சந்தித்தோம். இவர்களால் வெளியே சென்று வேலை பார்க்க முடியாது. அதனால் அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வழிகாட்டினோம்.
எல்லோருமே பிறக்கிறோம், வாழ்கிறோம். அந்தக் காலத்தில் நல்லதொரு செயலை செய்ய வேண்டும். எங்களின் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிப் பெண்கள், சமூதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போதும் உறுதுணையா இருக்கும்’’ என்று கூறும் அமுதசாந்தி தன் களப்பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
மதுரை ஆர்.கணேசன்
|