உடல், மனம், ஆரோக்கியம் காக்கும் நடனம், யோகாசனம்!



‘நடனமும் யோகாவும் எனது இரு கண்கள்’ என்கிறார் லண்டனில் வசித்து வரும் திவ்யா ஸ்ரீலஷ்மி. ‘‘பிரகதிலயா என்றால் மாற்றம், வளர்ச்சி என்று பொருள். அதனால்தான் அந்தப் பெயரை என் நடனப் பள்ளிக்கு வைத்திருக்கிறேன். 
நடனம், யோகா மூலம் நம் உடலில் நல்ல மாற்றம் மற்றும் வளர்ச்சியினை அடையலாம்’’ என்றவர் நடனத்தோடு இணைந்து யோகக் கலைகளையும் கற்றுத் தருகிறார். கலைக் குடும்பத்தில் பிறந்த திவ்யாவிற்கு நடனக் கலையை அடுத்த தலைமுறைக்கும் சிறப்பான வகையில் கடத்த வேண்டும் என்பதே இலக்கு.

‘‘நான் 6 வயது முதல் நடனம் பயின்று வருகிறேன். அம்மாவிற்கு இருக்கும் நடன ஆசைதான் என்னையும் நடனம் கற்றுக் கொள்ள தூண்டியது. ஆனால் எனக்கு மூன்று வயது இருக்கும் போது ஒரு விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
அதன் பிறகு நடனம் ஆட இயலுமா என்று எங்க வீட்டில் பயந்தனர். என் பாட்டி வீணை வித்வான். 85 வயதிலும் வீணை வகுப்பு எடுத்து வருகிறார். நான் இசையும் பயின்றேன். தியாகராஜ உற்சவத்தில் பாடி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு நடனம் ஆடுவதில்தான் கூடுதல் ஆர்வம் இருந்ததால், அதனை பயில ஆரம்பித்தேன்.

என்னுடைய குருக்களான சரயூ சாய் மற்றும் லஷ்மி ராமசாமி இருவரும் என் நடனப் பயணத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். 14 வயதில் அரங்கேற்றமும் செய்தேன். கல்லூரி காலத்தில் என்னால் நடனத்தை தொடர முடியவில்லை. அதன் பிறகு 2014ல் இருந்து மீண்டும் தொடர ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் நடனக் கலைஞர் டாக்டர் லஷ்மி ராமசாமி அவர்களை சந்தித்தேன். 
அவர்களின் நடனப் பள்ளியில் ஆடியவர்களின் நடனத்தைப் பார்த்து வியந்து போனேன். காரணம், நான் வழூவூர் முறை நடனம்தான் பயின்று இருந்தேன். இவரிடம்தான் தாளம் குறித்து நடனம் அமைப்பதை அறிந்து கொண்டேன்’’ என்றவர் நடனத்துடன் யோகாவும் பயில காரணத்தை விவரித்தார்.

‘‘நான் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். அதில் யோகா ஒரு பாடமாக இருந்தது. அப்போதுதான் எனக்கு யோகாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. லஷ்மி ராமசாமியிடம் பயின்ற பிறகு 2021ல் எனது பிரகதிலயா நடனப்பயிற்சி பள்ளியை துவங்கினேன். 

அதனைத் தொடர்ந்து லண்டனில் ஆர்ட்ஸ் அண்ட் ஈவென்ட்  மேனேஜ்மென்ட் குறித்து படித்தேன். வெளிநாடுகளில் நம் நடனக் கலையை தெற்காசியா கலை என்று அழைப்பார்கள். அங்கு என் படிப்பு முடிந்ததும் தெற்காசியா கலை அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணி கிடைத்தது. அதன் மூலம் நம் நடனத்தை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நடனம் மேல் ஆர்வம் இருப்பது போல் யோகாசனமும் பயில வேண்டும் என்று விரும்பினேன். கேரளாவில் உள்ள சிவானந்தா மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டேன். அதனைத் ெதாடர்ந்து மைசூரில் அஷ்டாங்க யோகாசனமும் கற்றுக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து யோகாசன ஆசிரியர் குறித்த பயிற்சியும் எடுத்தேன். 

தொடர்ந்து யோகாசனம் மேற்கொண்டால், உடலுக்கான நெகிழும் தன்மையும் கிடைக்கும். மேலும் பல நன்மைகளும் உண்டாகும். நான் தற்போது இந்தியா மற்றும் லண்டன் என இரண்டு இடங்களில் ஆன்லைன் மற்றும் நேரடி யோகா வகுப்புகள் எடுத்து வருகிறேன். எனது பயிற்சி வகுப்புகளில் நடனம் மற்றும் யோகா என இரண்டையும் கற்றுக் கொடுக்கிறேன்’’ என்றவர் நடனம், யோகா இரண்டும் கற்றுக்கொள்வதன் பயன்களை விவரித்தார்.

‘‘நடனத்தோடு இணைந்து யோகக்கலையும் கற்றுக்கொள்வதால் ஏராளமான நன்மைகளை தருகிறது. தினமும் யோகா செய்வதால் உடல் தசைகள் நல்ல முறையில் மாறும். அதனால் நடனமாடும் போது எளிதாக இருக்கும். மேலும் உடலில் எந்த தசைகள் எவ்வாறு இயங்குகிறது என்ற புரிதல் ஏற்படும். நடனமும் யோகாவும் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

தற்போது யோகாசனம் மற்றும் நடனம் பயிற்சி அளித்து வருகிறேன். மேலும் இசை, வாத்தியக் கருவிகள் என அனைத்து கலைகளையும் என் பயிற்சி பள்ளி மூலம் சொல்லித்தர வேண்டும் என்ற விருப்பம் இருக்கு. தற்போது வயதானவர்களுக்கு யோகா சொல்லித் தருகிறேன். தொடர்ந்து முதியோர்களுக்கு யோகா கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. 

நடனம், யோகா இரண்டுமே கடல் என்றுதான் சொல்லணும். கற்றுக் கொடுக்கவும் கற்றுக் கொள்ளவும் நிறைய உள்ளது’’ என்று கூறும் திவ்யா ஸ்ரீலஷ்மி நாட்டிய ரத்தினம், சிறந்த நடனக்கலைஞர், நிஷ்டா விருது, யத்ன பிரதீபா மற்றும் யத்ன பிரவீணா போன்ற  விருதுகளை பெற்றுள்ளார்.

தனுஜா ஜெயராமன்