பாப் டிலன்



2016-ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பாடலாசிரியரான பாப் டிலனுக்கு கிடைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நோபல் பரிசு வரலாற்றிலேயே பாடலாசிரியர் ஒருவருக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது அதுவே முதல்முறை. ‘அமெரிக்க பாடல் மரபுக்குள் புதிய கவித்துவ வெளிப்பாடுகளை உருவாக்கியதற்காக’ இந்தப் பரிசு என நோபல் கமிட்டி அறிவித்தது.

நோபல், கோல்டன் குளோப், கிராமி மற்றும் ஆஸ்கர் (‘வொண்டர் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக) என்று நான்கு பரிசுகளையும் பெற்ற ஒரே ஆளுமை இவர்தான். பெர்னார்ட் ஷா மட்டும் நோபல் மற்றும் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் 1941ல் பிறந்த டிலன், சிறு வயதிலிருந்தே அமெரிக்க மரபார்ந்த இசையின் மீது பெருங்காதல் கொண்டிருந்தார். படிக்கும் காலத்திலேயே காபி விடுதிகளில் கச்சேரி நடத்தி தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். சமூக ஒடுக்கு முறைகள் மற்றும் போருக்கு எதிரான கலகக்குரலாக இவரின் பாடல் வரிகள் ஒலித்தன.

அழகான விஷயங்களுக்குப் பின்னால் வெளியே சொல்ல முடியாத வலி இருக்கும் என்பது போல, ‘உன்னால் பாடவே முடியாது, குரல் தவளை கத்துவது போல கரகரப்பாக இருக்கிறது’ என்று நிராகரிக்கப்பட்டவர்தான் இன்றைக்கு நடிகர், பாடகர், இசைக்கலைஞர், பாடலாசிரியர் என்று பன்முகக் கலைஞனாக விளங்குகிறார். ‘டிலன் ஒரு சிறந்த இசைக் கலைஞர். ஒரு இசைக் கலைஞருக்கு பரிசு  வழங்கும்பொழுது, ஒரு எழுத்தாளரை கௌர விக்கும் வாய்ப்பை நோபல் குழு இழந்து விடுகிறது.

உலகெங்கும் வாசிப்புப் பழக்கம் குறையும் வேளையில் இதுபோன்ற முடிவுகள் ஆபத் தானது’ என்ற விமர்சனம் ஒரு பக்கம் எழுந்தது. இன்னொரு பக்கம், ‘இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க கவிஞர்கள் ஹோமர், ஷப்போ போன்றோர் இசையமைத்து, பாடுவதற்காக வாய்மொழிப் பாடல்களை இயற்றினார்கள்.

 இப்போதும் அவை உயிர்ப் போடு உள்ளன. இதே மாதிரி டிலனின் பாடல்கள் 2500 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப்படும்’ என நியாயப்படுத்தி னார், ஸ்வீடிஷ் அகாடமி சார்பில் பரிசை அறிவித்த சாரா டானியஸ்.காலம் பதில் சொல்லட்டும்!

த.சக்திவேல்