377 சர்ச்சை!



ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளியாக்கும் இந்தியச்சட்டம் 377 (1862)யை மாற்றக்கோரி பல்வேறு மனித உரிமை அமைப்புகள், எல்ஜிபிடிக்யூ( LGBTQ-Lesbian, Gay, Bisexual, and Transgender) குழுவினரும் போராடி வருகின்றனர். 1871 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இச்சட்டப்படி இயற்கைக்கு விரோதமான வழியில் பாலுறவு கொள்வோருக்கு அபராதம் பிளஸ் ஆயுள் வரை தண்டனை அளிக்க முடியும்.  

எல்ஜிபிடி குழுவினரை தண்டனையிலிருந்து காக்க, நீதா நாக்பால், பிரீதா குமார், சௌரப் கிர்பால், மேனகா குருசாமி, அருந்ததி கட்ஜூ உள்ளிட்ட ஐவரைக் கொண்ட வழக்குரைஞர்கள் குழு வாதிட்டு வருகிறது. “எனது நண்பர்கள் கூட இச்சட்டத்தினால் குற்றவாளியாக்கப்படும் நிலையில் இவ்வழக்கை மனிதநேயப்படி வாதாட எடுத்துள்ளேன்.

அரசியலமைப்பு சட்டப்படி இச்சமூகத்தில் வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு.” கனிவாகப் பேசுகிறார் வழக்குரைஞர் நீதா நாக்பால். இக்குழுவிலுள்ள பிற வழக்குரைஞர்கள் நால்வரும் வழக்கிற்கான ஆராய்ச்சிப்பணியைச் செய்து வருகின்றனர். மேனகா குருசாமி ஹார்வர்டிலும், அருந்ததி கட்ஜூ கொலம்பியா சட்டக்கல்லூரியிலும் படித்தவர்கள். இதிலுள்ள ஒரே ஆண் வழக்குரைஞர் சௌரப் கிர்பால்.”காலத்திற்கேற்ப மாறாத இச்சட்டத்தினால் பலரின் வாழ்வு ஆபத்திற்குள்ளாகியுள்ளது” என உறுதி மிளிரப் பேசுகிறார் வழக்குரைஞர் சௌரப் கிர்பால்.