காக்ரோச் காதல்



பூச்சிப் பூக்கள் 45

ஜீவராசிகள் உயிர் வாழ்தலின் ஊர்ஜிதமே சுவாசம்தான்! இத்தகைய சுவாசத்திற்குப் பிரதானமான நுரையீரல்கள் கரப்பான் பூச்சிகளுக்கு இல்லை என்பது ஒரு மூச்சுமுட்டும் ஆச்சரியம். மேலும் இவற்றிற்கு மூக்கோ அல்லது மூக்குத் துவாரமோ கூடக் கிடையாது. அபூர்வமாய் இப்படி நுரையீரல் இல்லாத சில பூச்சியினங்கள் வாயையும் காற்றுக் குழல்களையும் நம்பிக் கொண்டிருப்பது வழக்கம். இவை அவற்றையும் உதாசீனப்படுத்திவிட்டு வேறு டெக்னிக் வைத்திருக்கின்றன. விசித்திர மூச்சு!

பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் நாசித் துவாரத்தின் முடிவில், ஹோஸ் பைப் போல வளையங்களுடன் கூடிய ஒரு மூச்சுக்குழல் நீண்டு நுரையீரல்களுக்குப் போகும். இந்த நுரையீரல் இடைவிடாமல் சுருங்கி விரிந்து, வேண்டாத கார்பன் டை ஆக்சைடை வெளியில் தள்ளியும், வேண்டிய ஆக்ஸிஜனை உள்ளிழுத்தும் ரத்தத்தில் கலக்கிறது. இந்த ஆக்ஸிஜன் ஊட்டம் ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் திசுக்களின் ஒவ்வொரு செல்லிற்கும் செல்கிறது. வாயு மாற்றம்!

 ஆனால் இப்பூச்சிகளுக்கு நுரையீரல்களுக்குப் பதிலாக உடலின் அடிப்பகுதியில் வால்வுகளுடன் கூடிய துவாரங்கள் நிறைய உள்ளன. இவற்றோடு இணைக்கப்பட்ட இதன் மூச்சுக் குழல் ஒரு மரம் மாதிரி பலமுறை கிளைக்கிறது. இத்தகைய கிளைகளின் கடைக்கோட்டு மென்சிறு கிளைக் குழல்கள், கரப்பான் பூச்சியின் உடல் திசுக்களின் ஒவ்வொரு செல்களுடனும் சங்கமிக்கின்றன. கரப்பான் பூச்சி அவ்வப்போது ஆக்ஸிஜனுக்காக தசைகளை சுருக்கி வால்வுகளை இயக்கிக் கொள்கிறது. நேரடி விநியோகம்!

நான்கு மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை வாழக் கூடிய இப்பூச்சிகளின் முக்கிய இனங்கள் பிறந்து எட்டு மாதம் ஆனதும் சிருங்காரத்திற்கு தயாராகி விடுகின்றன. இனப்பெருக்க சமாசாரத்தில் இந்தக் கரப்பான் பூச்சிகள் படு சுட்டி. ஒவ்வொரு பெண் கரப்பான் பூச்சியும் தன் வாழ்நாளில் சுமார் 750 வாரிசு களை நமக்கு டொனேட் பண்ணுகிறது. கணவன்  மனைவி அந்தஸ்து எதுவும் கிடையாது. கிடைக்கும் வாய்ப்புகளை கிளுகிளுப்பாய்க் கழித்ததும் சட்டென்று டைவர்ஸ்!

 ஆண் கரப்பான் பூச்சி சாவகாசமாய் இரை அரித்துக் கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு புஜ்லி கண்ணில் பட்டுவிட்டால் பம்பர் குலுக்கல்தான். உடனே கோதாவில் இறங்கி விடும். எனினும் இணைக்கு சேதி சொல்ல இவை தம் மலத்தின் மூலம் ஒரு ரசாயன வழித்தடத்தை அமைப்பதுண்டு. தேடிக் கண்டுபிடித்து வருவதற்கு ஏதுவாக ஒரு பிரத்தியேகமான ஃபிரமோன் வாடையை காற்றில் தவழ விடுவதும் உண்டு. வாடைவிடு தூது!

இப்படி ஜோடிப் பூச்சிகள் தோதாக சந்தித்து விட்டால், ஆண் பூச்சி உடனே தன் உணர் கொம்புச் சாட்டையால் புஜ்லியை லேசாக உரசிப் பார்க்கும். பதிலுக்கு பெண் பூச்சி ஜகா வாங்காமல், அதன் சாட்டையை இதன் மீது நீட்டினால் போதும். அதுதான் கிரீன் சிக்னல்! இதற்கப்புறம் ஆண் பூச்சி ஏதோ புதையல் கிடைத்த மாதிரி, பெண் பூச்சி முன்னிலையில் குஷியில் கொஞ்ச நேரத்திற்கு ஆர்ப்பரிக்கும்.

தன் அடி வயிற்றுத் துவாரங்கள் வழியே காற்றை வேகமாகச் செலுத்திக் கொண்டே, றெக்கைகளை மின்னல் மாதிரி படபடக்கும். இதனால் வெளிப்படும் காற்று விசிலடிப்பது போல் இருக்கும். அதுவும் புஜ்லி கொஞ்சம் அழகாக இருந்துவிட்டால் இந்த விசிலோசை நேர்த்தியான ரிதத்தில் நீண்ட நேரத்திற்கு விட்டு விட்டு நீடித்திருக்கும். காதல் புல்லாங்குழல்!

இசைத்து முடித்ததும், தொடக்க பீடிகையாய் இரண்டும் தம் கூட்டுக் கண்களால் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். சட்டென்று ஞானம் வந்தது போல் தம் ஆண்டெனாக் கொம்புகளால் ஒன்றை ஒன்று துழாவ விடும். பின்னர் தம் கால்களில் உள்ள பிரிஸ்டில் முடிகளினால் பரஸ்பரம் கிளர்ச்சி யூட்டிக் கொள்ளும்.

அங்க ஆலிங்கனம்!னீ உச்ச கட்டத்தில் இரண்டும் எதிரெதிர் திசையில் திரும்பிக் கொண்டு நீள் புணர்ச்சியில் ஈடுபடும். முடிவில் பெண் கரப்பானின் வயிற்றில் கடைப் பகுதியில் இருக்கும் ஒரு கலெக்க்ஷன் பையில் ஏராளமான விந்தினை நிரப்பி விட்டு ஆண் பூச்சி ஈஸியாய் அம்பேலாகிவிடும்.

குட்பை! காதல் பரீட்சை முடித்த பெண் கரப்பான் சில தினங்களில் 1530 முட்டைகளைக் கருவுறச் செய்யும். பிறகு தன் எச்சிலில் சுரக்கும் ஒரு விதமான ஜெல் போன்ற வஸ்துவினால் ‘ஓதிக்கா’ என்னும் கெட்டியான முட்டைக் கவசத்தை உருவாக்கும். இந்தக் கவசம் பழுப்பு, செம் பழுப்பு அல்லது அடர் சிகப்பு போன்ற நிறங்களில் இருப்பது உண்டு.

ஒரு கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் எத்தனை கவசங்களை உருவாக்குகிறது என்பதும், எத்தனை பேட்ச் முட்டைகளை இடுகிறது என்பதும், இனத்திற்கு இனம் மாறுபடும். கவசத்தில் முட்டைகளை நிரப்பி ஒரு பொட்டலம் போல் தன் உடலின் வயிற்றுப் பகுதியில் 3040 நாட்களுக்கு பத்திரமாய் சுமந்து கொண்டே திரியும். இறுதி யில் இந்தக் கவசத்தை ஒரு பாதுகாப்பான இடுக்கில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிவிடும். பொரிந்து வாழ்க!

மேலும் சில நாட்கள் அவகாசத்தில், அதாவது இடப்பட்ட நாளில் இருந்து 2438 நாட்களில் முட்டைகள் பொரிந்து நிம்ஃப் எனப்படும் குஞ்சுகள் வெளிப்படும். இவை பிரசவிக்கும்போதே தாயின் சாயலில் இருக்கும். றெக்கைகள் மட்டும் முழு வளர்ச்சி அடையாமல் இருக்கும். இவை வெள்ளை நிறத்தில் மிகவும் மென்மையாக இருக்கும்.

மேற்தோல் கெட்டிப்படும்போது இயல்பான அடர் நிறத்தை அடைந்துவிடும். இந்தக் குஞ்சுகள் எட்டு மாதங்களில் ஏழு முறை தோலை உரித்துக் கொண்டு முழு வளர்ச்சி அடைகின்றன. பிறகு ஆன்டெனாவை முறுக்கிக் கொண்டு அலைபாயத் துவங்கும். புஜ்லி வேட்டை!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்