வந்தாச்சு பயோனிக் கணையம்!நாளுக்கு நாள் வளர்ந்துவரும் மருத்துவத்துறையில், கால் இழந்தவர்களுக்கு பயோனிக் கால், கை இழந்தவருக்கு பயோனிக் கை, பார்வை இழந்தவருக்கு பயோனிக் கண் என்று புதுப்புது கண்டுபிடிப்புகள் வரிசைகட்டி வந்துகொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போதைய புதுமுகம், பயோனிக் கணையம். ‘பயோனிக்’ என்றால் எலெக்ட்ரானிக் மற்றும் மென் பொருட் களால் தயாரிக்கப்பட்ட செயற்கை உடலுறுப்பு என்று அர்த்தம். உடலில் இயற்கை உறுப்பு செய்யும் அதே வேலையை இந்த பயோனிக் உறுப்பு உடலின் வெளியிலிருந்து செய்யும்.

கணையம் என்பது இன்சுலின், குளுக்ககான் எனும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கின்ற உறுப்பு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்வது இதன் வேலை. சர்க்கரை அதிகரிக்கும்போது, இன்சுலினை சுரந்து சர்க்கரையைக் குறைக்கும்;

சர்க்கரை ரொம்பவே குறைந்துவிட்டால் குளுக்ககானைச் சுரந்து ரத்தச் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இன்சுலின் சரியாகச் சுரக்கவில்லை என்றால் அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதன் விளைவாக ரத்தச் சர்க்கரை அதிகரித்து விடும். இதைத்தான் ‘நீரிழிவு’ என்கிறோம்.

இதில் இரண்டு வகை உண்டு. டைப் 1 மற்றும் டைப் 2.  டைப் 1 நீரிழிவு, குழந்தைகளுக்கு வருகிறது. பரம்பரைத் தன்மை, வைரஸ் தொற்று, உடற்பருமன் போன்ற பல காரணிகளால் இது வருவது தூண்டப்படுகிறது. இந்தியாவிலுள்ள நீரிழிவு நோயாளிகளில் 100ல் 5 பேர் குழந்தைகள். இவர்களுக்கு மாத்திரைகள் பலன் தராது; வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், இன்சுலின் அளவு மாறினால், குழந்தையின் உணவுமுறை மாறினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீர் திடீரென்று அதிகரிப்பதும் குறைவதுமாக இருக்கும். இதனால் குழந்தைக்கு மயக்கம் வந்துவிடும். இந்த மயக்கம் உறக்கத்தில் வந்துவிட்டால், உயிருக்கே ஆபத்து.

இந்த ஆபத்தைத் தடுக்க ‘இன்சுலின் பம்ப்’ நடைமுறைக்கு வந்தது. இது ஒரு இன்சுலின் பெட்டி. இதை இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள குழாயின் ஊசிமுனையை வயிற்றுத் தோலில் பொருத்திக்கொள்ள வேண்டும் இது உடலுக்குத் தேவையான இன்சுலினை குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்துகிறது. இதனால், இவர்களுக்கு ரத்தச் சர்க்கரை ஒரே சீராக இருக்கிறது. நம் தேவைக்கு ஏற்ப இன்சுலின் அளவை மாற்றி அமைக்க இதில் வசதி உண்டு.

இன்சுலின் பெட்டி யில் இன்சுலின் மருந்தை அவ்வப்போது நிரப்பிக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஒரே குறை, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து பயனாளிக்கு மயக்கம் வந்துவிட்டால், அதை சரி செய்ய இதனால் முடியாது. இந்தக் குறையைத் தீர்ப்பதற்குத்தான் புதிதாக வந்துள்ளது பயோனிக் கணையம். இதைக் கண்டுபிடித்துள்ள எட்வர்ட் டாமியானோ அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பேராசிரியர். 

இதைக் கண்டுபிடிக்க இவரைத் தூண்டியது இவருடைய மகன் டேவிட். இவன் 11 மாதக் குழந்தையாக இருந்தபோது ‘உங்கள் மகனுக்கு டைப் 1 நீரிழிவு இருக்கிறது’ என்று டாக்டர்கள் சொன்னதும் அதிர்ந்து விட்டார்.

வாழ்நாள் முழுவதும் இனி இன்சுலின்தான் அவனுக்குத் துணை என்பதை நினைத்தபோது நெஞ்சு கனத்தது. அவனுக்கு இன்சுலின் அளவு அதிகமாகி மயக்கம் அடையும்போதெல்லாம், ‘இதற்கு ஒரு தீர்வு தர முடியாதா’ என்று யோசித்தார். அந்த யோசனை அவரது ஆராய்ச்சிக்கு வழி விட்டது. புதிதாக ஒரு கருவியையே கண்டுபிடிக்கும் அளவுக்குத் தன் ஆராய்ச்சியில் தீவிரமானார். முடிவில் கைக்கு வந்தது ஒரு பயோனிக் கணையம்.

இதைப்பற்றி அவரே கூறுகிறார்... ‘‘இந்தக் கருவியில் மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. கையடக்க செல்போன் அளவில் இரண்டு பகுதிகள். ஒன்றில் இன்சுலின் மருந்தும் மற்றொன்றில் குளுக்ககான் மருந்தும் வைக்கப்பட்டிருக்கும்.

இவற்றை வயிற்றின்மேல் பொருத்திக்கொள்ள வேண்டும். இந்தக் கருவியில் இருக்கும் ஊசியை வயிற்றுத்தோலில் பொருத்திக்கொள்ள வேண்டும். ஐபோன் அளவில் இருக்கும் இன்னொரு கருவியை இடுப்பு பெல்ட்டில் மாட்டிக்கொள்ள வேண்டும். இது மற்ற இரண்டு கருவிகளுடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் குளுக்கோஸ் மானிட்டர் எனும் சிறு கருவியையும் வயிற்றின்மேல் பொருத்தி விடுவோம். ரத்த சர்க்கரை அளவை இது கண்காணித்து, ஐபோன் கருவிக்குத் தகவல் கொடுக்கும். பயனாளியின் ரத்தச் சர்க்கரைக்கு ஏற்ப இன்சுலினை அனுப்பும்படி இன்சுலின் உள்ள கருவிக்கு ஐபோன் கருவி கட்டளையிடும். ரத்த சர்க்கரை மிகவும் குறைந்து பயனாளிக்கு மயக்கம் வந்து விட்டால், தீயணைப்பு வீரர் மாதிரி இது செயல்படும்.

எப்படி தீயணைப்பு வீரர் தீயையும் அணைத்து, தீயில் சிக்கிக் கொண்டவரையும் காப்பாற்றுகிறாரோ அதுமாதிரி ஐபோன் கருவியிலிருந்து ‘இன்சுலினை நிறுத்தி விடு’ என்று இன்சுலின் கருவிக்குக் கட்டளை போகும்.

அதேவேளையில் குளுக்ககான் கருவிக்கு எவ்வளவு குளுக்ககான் ரத்தத்துக்குப் போக வேண்டும் என்று கணக்கிட்டு அந்த அளவில் குளுக்ககானை ரத்தத்துக்கு அனுப்பிவைக்கும். இதன் பலனால் ரத்த சர்க்கரை அதிகரித்துவிடும். இப்படி இது பயனாளிக்கு மயக்கம் வராமல் தடுத்துவிடும்.

இன்சுலின் பம்புக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், குழந்தைக்கு மயக்கம் வரும்போது, குறைந்துவிட்ட ரத்தச் சர்க்கரையைச் சரி செய்ய குளுக்ககான் தேவை. இதை உடலுக்கு அனுப்ப இன்சுலின் பம்ப்பில் வழியில்லை. அதேவேளையில், பயோனிக் கணையமானது பயனாளியின் இன்சுலின் தேவையையும் தானாகவே கணித்துக்கொள்கிறது. ரத்தச் சர்க்கரை குறையும்போது இன்சுலின் சப்ளையை நிறுத்திக்கொள்கிறது.

பயனாளிக்கு மயக்கம் வரும் அளவுக்கு ரத்தச் சர்க்கரை மிகவும் குறைந்துவிட்டால், அதைத் தடுக்க குளுக்ககான் மருந்தை அனுப்பிவைக்கிறது. இதன் மூலம் ரத்தச் சர்க்கரையை அதிகரிக்கச் செய்து நிலைமையைச் சரி செய்துவிடுகிறது. இப்படி இயற்கை கணையம் செய்யும் வேலையை பயோனிக் கணையம் சரியாகச் செய்துவிடுவதால், இது நீரிழிவு நோயாளிகளுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம்’’ என்கிறார் டாமியானோ.

( இன்னும் இருக்கு )

டாக்டர் கு.கணேசன்