கிளிமஞ்சாரோ ரகசியம்!



மலையேறுபவர்களின் லட்சியக் கனவுகளில் ஒன்றாக விளங்கும் மலை கிளிமஞ்சாரோ. ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயரமான இம்மலையைப் பற்றிய சுவையான தகவல்கள் சிலிர்ப்பூட்டுபவை...

*டான்சானியாவில் 756 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவில் கிளிமஞ்சாரோ மலை உள்ளது.

*உலகின் உயரமான தனித்த மலை இதுதான். மற்ற உயரமான மலைகளெல்லாம் ஏதேனும் ஒரு மலைத் தொடரின் அங்கமாக இருக்கும். உலகின் புகழ்பெற்ற ஏழு மலைமுகடுகளில் கிளிமஞ்சாரோவும் ஒன்றாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர்.

*கிளிமஞ்சாரோ ஒரு ராட்சஸ பல அடுக்கு எரிமலை ஆகும். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கி வழிந்த எரிமலைக் குழம்பால் உருவான மலை இது.

*இம்மலையானது, கிபோ (Kibo), மாவென்சி (Mawenzi), ஷிரா (Shira) ஆகிய மூன்று முக்கிய எரிமலைகளால் உருவானது. இதில் மாவென்ஸியும் ஷிராவும் இறந்துவிட்ட எரிமலைகளாகும். கிபோ ஓர் உறங்கும் எரிமலை. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். கடைசியாக இது 200 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. கிபோ எரிமலையின் உச்சியின் பெயர் ‘உகுரு’ (Uhuru).

*கிளிமஞ்சாரோ என்ற பெயரின் உருவாக்கமும் பொருளும் எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்ரிக்காவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் ‘சுவாஹிலி’ மொழியில் ‘கிளிம’ என்றால் ‘மலை’ என்றும், ‘ஞ்சாரோ’ என்றால் ‘வெண்மை’ என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். அதாவது ‘வெள்ளை மலை’ என்பது கிளிமஞ்சரோவின் அர்த்தங்களில் ஒன்றாகும்.

*கிளிமஞ்சாரோவில் 2.2 சதுர கி.மீ. அளவுள்ள பனி முகடு உள்ளது. ஆனால், புவி வெப்பமயமாதலால் இதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. 1912ம் ஆண்டு காணப்பட்ட பனியின் அளவில் 80 சதவீதம் இப்போது குறைந்து விட்டது.

*இங்கு ஒரே மலையில் வேளாண் நிலம், மழைக் காடு, புதர்க் காடு, தரிசு நிலம், மலைப்பகுதியைச் சார்ந்த பாலைவனம், பனி முகடு என்று ஆறு விதமான நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இது உலகில் வேறெந்த பகுதியிலும் காணக் கிடைக்காத அதிசயம். மலையின் ஒவ்வொரு ஆயிரம் அடியிலும் ஒவ்வொரு வகை நிலப்பரப்பு காணப்படுகிறது. மலையின் கீழ்ச்சரிவுகளில் காப்பி விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

*மலை உச்சியைச் சென்றடைய ஆறு பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இதில் ‘மாரங்கு’ என்ற பாதை புகழ்பெற்றதாகும்.
  
*1848ம் ஆண்டு ஜெர்மனி மதபோதகரான ‘ஜோஹன்னஸ் ரெப்மான்’ (Johannes Rebmann) என்பவர், கிளிமஞ்சாரோ மலையைக் கண்டறிந்து, ராயல் புவியியல் சங்கத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். ஆனால், அங்கிருந்த எந்த நிபுணர்களும் இதை நம்பவில்லை. வெப்பம் நிறைந்து காணப்படும் நிலமான, பூமத்திய ரேகைப் பகுதியில் பனி மூடிய மலைக்கு சாத்தியமே இல்லை என்று சந்தேகித்தனர்.

*1889ம் ஆண்டு ஜெர்மனியின் ஹான்ஸ் மேயர் (Hans Meyer) என்பவர், டான்சானியாவின் யோகானஸ் கின்யாலா (Yohanas Kinyala) மற்றும் ஆஸ்திரியாவின் லுட்விக் புர்ட்ஷெல்லர் (Ludwig Purtscheller) ஆகியோரின் துணையோடு கிளிமஞ்சாரோ மலையில் முதன்முதலாக ஏறி சாதனை படைத்தார்.

*முதல் மலை யேற்றத்தில் மலை உச்சிக்குச் செல்ல ஆறு வாரங்கள் பிடித்தது. ஆனால், இன்றோ ஒரு சுமாரான மலையேற்ற வீரர் கூட ஐந்தாறு நாட்களில் ஏறி விடுகிறார்.

*தென் ஆப்ரிக் காவின் பெர்னார்ட் கூசென் என்பவர், முதன்முறையாக வீல் சேரில் ஏறி இந்த சிகரம் தொட்டார். 2003ம் ஆண்டு ஒன்பது நாட்களில் ஏறினார். பின்னர் இரண்டாம் முறையாக 2007ம் ஆண்டு ஆறே நாட்களில் ஏறி சாதனை புரிந்தார்.

*கிளிமஞ்சாரோவில் வேகமாக ஏறி சாதனை புரிந்தவர், ஒரு உள்ளூர் வழிகாட்டி. சைமன் மிடுய் (Simon Mtuy) என்ற பெயர் கொண்ட அவர், 2004ல் வெறும் எட்டு மணி 27 நிமிடங்களில் மலையில் ஏறி இறங்கி சாதனை படைத்துள்ளார்.

*மலையேற்றத்திற்கும் சுமைகளை சுமப்பதற்கும் அருகிலுள்ள கிராம மக்கள் துணை புரிகின்றனர். முதல் மலையேற்றத்திலிருந்து பணிபுரிந்து வந்த ஒரு போர்ட்டர், சுமார் நூறு முறை மலையேறியுள்ளார். அவருடைய நூறாவது மலையேற்றத்தின்போது அவருக்கு வயது 118.

*ஆண்டுதோறும் சுமார் 25,000 மக்கள் கிளிமஞ்சாரோ மலையில் ஏறுகின்றனர். மலையேறுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர், உயர உபாதைகளால் பாதிக்கப்பட்டு உச்சிக்குச் செல்ல முடியாமல் திரும்பி விடுகின்றனர்.

*உகுரு சிகரத்திற்கு செல்வோர் ஒவ்வொருவரும் அங்கு ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் தங்கள் எண்ணங்களை பதிவு செய்து விட்டு வருகின்றனர்.

 ஹெச்.தஸ்மிலா, கீழக்கரை.