குடல் கட்டியை கண்டறிய சிம்பிள் சோதனை!



குடலில் கட்டி தோன்றினால் இனிமேல் குடலைப் பரிசோதிக்க வேண்டாம். ரத்தப் பரிசோதனை செய்தாலே கண்டுபிடித்து விடலாம் என்கிற அளவுக்கு நவீன மருத்துவ அறிவியல் முன்னேறி உள்ளது.

செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள ஜீரண உறுப்புகளில் எதில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். எனினும் உணவுக்குழாய், இரைப்பை, மற்றும் பெருங்குடல் பகுதியில்தான் இந்த நோயின் தாக்கம் அதிகம்.

சுமார் ஒன்றரை மீட்டர் நீளமுள்ள பெருங்குடல், வலது பக்க அடிவயிற்றில் தொடங்குகிறது. இதில் சீக்கம், ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்கு குடல், வளைகுடல், மலக்குடல் என்று பல பகுதிகள் உண்டு. சிறுகுடலில் உணவு செரிமானமாகி, திரவநிலையில் இங்கு வந்து சேரும். உணவுக் கூழிலிருந்து, தண்ணீரையும் தாது உப்புகளையும் உறிஞ்சி எடுத்து உடலுக்குத் தருவது இதன் வேலை.

புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் போன்ற காரணங்களால் குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை அதிகமாக உண்பவர்களை இது பெரிதும் தாக்குகிறது.

காரணம், கொழுப்பு உணவு செரிமானம் ஆவதற்குப் பித்தநீர்உப்புகள் தேவைப்படுகின்றன. இவை பெருங்குடலின் உட்புற சவ்வில் அடிக்கடி தங்கும்போது புற்றுநோய் ஊக்குவிப்பான்களாக மாறிவிடுவதால் அந்த இடத்தில் புற்றுநோய் வருகிறது. இந்த நோய் வருவதற்குப் பரம்பரையும் ஒரு காரணம்தான். நாள்பட்ட பெருங்குடல் அழற்சி  (Chronic ulcerative colitis)   உள்ளவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது புற்றுநோயாக மாறும் தன்மை உண்டு.

இந்த நோய் வந்துவிட்டால் பசி குறைந்துவிடும். எந்த நேரமும் களைப்பாக இருக்கும். மலச்சிக்கல் தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி வரும். உடல் எடை படிப்படியாகக் குறையும். அடி வயிறு வீங்கி வலிக்கும். மலத்தில் ரத்தம் வெளியேறும். ரத்தசோகை ஏற்படும்.

 இந்த நோயைக் கண்டறிய வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன் ‘சிணிகி’ (Carcino embryonic antigen  CEA)ஆன்டிஜென் பரிசோதனையும் செய்யப்படும். இதில் சிணிகி அளவு அதிகமாக இருந்தால், அது பெருங்குடலில் புற்றுநோய் உள்ளதைக் குறிக்கும். இதைத் தொடர்ந்து, ‘பேரியம் எனிமா’ கொடுத்து, பெருங்குடலை எக்ஸ்ரே படமெடுத்து இந்தப் புற்றுநோயைக் கண்டறிவது வழக்கம்.

அடுத்து, பெருங்குடல் அகநோக்கி (Colonoscopy) மூலம் பெருங்குடலை நேரடியாகப் பார்த்து நோயை அறியலாம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எண்டோ அல்ட்ரா சோனோகிராபி போன்ற பரிசோதனைகள் வழியாகவும் இதைக் கண்டறிய முடியும். இறுதியாக, பெருங்குடலில் உள்ள கட்டி புற்றுநோய்க் கட்டிதானா என்பதை உறுதி செய்ய பயாப்சி எடுத்துப் பரிசோதிக்க வேண்டியதும் முக்கியம்.

இவை எல்லாம் இதுவரை இருந்த பரிசோதனை முறைகள். நோயாளி மருத்துவமனையில் தங்கி இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். அதிக செலவாகும். எனவே, இது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. இத்தனைக்கும் மாற்றாக மிக எளிய ரத்தப் பரிசோதனை ஒன்றை இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘லிம்போசைட் ஜீனோம் சென்சிடிவிட்டி டெஸ்ட்’ (Lymphocyte Genome Sensitivity Test - சுருக்கமாக LGS) என இதற்குப் பெயர்.

இதைக் கண்டுபிடித்த பேராசிரியர் டயானா ஆன்டர்சன் இந்தப் புதிய பரிசோதனை குறித்து என்ன சொல்கிறார்... ‘‘நம் ரத்தத்தில் உள்ள ‘லிம்போசைட்’ எனும் வெள்ளை அணுக்கள்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்குப் பாடுபடுபவை. இவைதான் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகள் மற்றும் உடலுக்குள் வளர்கின்ற புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகின்றன. புற்றுநோய் செல்களுடன் இவை போராடும்போது இவற்றின் ஜீன்களும் பாதிக்கப்படுகின்றன.

அப்போது அவற்றின் வடிவமும் மாறிவிடுகிறது. பயனாளியின் வெள்ளை அணுக்களைச் சேகரித்து, ஒரு அகார் (Agar) மீடியத்தில் வைத்து, அதன் மீது புற ஊதாக் கதிர்களைச் (Ultra violet rays) செலுத்தினால், ஏற்கனவே சேதமான ஜீன்கள் மேலும் சேதமடைகின்றன.

இம்மாதிரி சேதமடைந்த ஜீன்களை மின்பகுப்பாற்றல் மூலம் பகுத்துப் பார்த்தால், ஒவ்வொரு ஜீனிலும் ஒரு வால் நட்சத்திரம் முளைத்தது போல் காணப்படுகிறது. வால் நட்சத்திரத்தின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஜீன் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருள். இவை புற்று செல்களுடன் அதிகம் போராடியுள்ளதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை 208 பேரிடம் இந்த சோதனையைச் செய்துள்ளோம். இவர்களில் 58 பேருக்கு லிம்போசைட் அணுக்களில் வால் நட்சத்திர ஜீன்கள் மிக நீளமாகக் காணப்பட்டன. 56 பேருக்கு குறைந்த நீளம் கொண்ட வால் நட்சத்திரங்கள் தெரிந்தன.

மீதி 94 பேருக்கு வால் நட்சத்திர ஜீன்கள் காணப்படவே இல்லை. இவர்கள் அனைவரையும் மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தினோம். மிக நீளமாக வால் நட்சத்திர ஜீன்களைக் கொண்டிருந்த 58 பேருக்கு குடலில் புற்றுநோய் இருப்பது நூறு சதவீதம் உறுதியானது.

குறைந்த நீளம் கொண்ட வால் நட்சத்திர ஜீன்களைப் பெற்றிருந்த 56 பேருக்குப் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. மீதி 94 பேருக்குக் குடலில் புற்றுநோய் பாதிப்பு இல்லவே இல்லை. இதன் மூலம் குடல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே மிக எளிதாகவும் சீக்கிரமாகவும் கண்டுபிடித்துவிட முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனை செய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு. ரத்தப் பரிசோதனைக் கூடங்களிலேயே இதைச் செய்துகொள்ள முடியும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.  குடல் புற்றுநோய்க்கு கொலோனோஸ்கோப்பி பரிசோதனை செய்யும்போதும் பயாப்சி எடுக்கப்படும்போதும் நோயாளிக்கு வலி உண்டாகும்.

இந்தப் பரிசோதனையில் வலி கிடையாது’’ என்கிறார் ஆன்டர்சன். இந்தப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயையும், ‘மெலனோமா’ என்னும் தோல் புற்றுநோயையும் கண்டுபிடிக்க முடியும் என்பது ஒரு கூடுதல் தகவல்.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்