நானி ஃபிட்னெஸ்!



தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நானி. காதல் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்ற இவர், சமீபகாலமாக தனது பாணியை மாற்றி பல்துறை திறனை வெளிப்படுத்தும் விதமாக மாஸ் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். அந்தவகையில், தசரா திரைப்படத்தில் அவரது நடிப்பு, கரடுமுரடான, அதிரடி கதாபாத்திரங்களை எளிதாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்தது. 

சமீபத்தில் வெளியான ஹிட் 3 இல்,  அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் நடித்து வரும் நானி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தனது தீவிர உடற்பயிற்சி அமர்வுகளின் காட்சிகளைப் பகிர்ந்து வருகிறார். 

அவரின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்,ஒர்க்கவுட்ஸ் சூட்டிங் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி நான் எப்போதும் என்னை சுறுசுறுப்பாகவே வைத்திருப்பேன். இது என்னை நல்ல உடல் நலத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.  

சோம்பல் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்கிறேன். அந்தவகையில், 30 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது வொர்க்அவுட்டைத் தொடங்குகிறேன். இது எனது இதயத் துடிப்பை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, டிரெட்மில்லில் ஓடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளையும் செய்து வருகிறேன். 

மேலும், வலிமை பயிற்சி மற்றும் செயல்பாட்டு பயிற்சி ஆகியவற்றின் கலவையாகவும் இருக்கும். ரசிகர்களின் மனதில் நமக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான உழைப்பை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும்.   நடிகன் என்று இல்லை பொதுவாகவே எனக்கு ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம்.  அதனால் எனக்காக நான் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன். 

கார்டியோவுக்குப் பிறகு, வலிமை பயிற்சியில் கவனம் செலுத்துவேன். அவை தசையை வளர்க்கவும் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனுடன் குந்துகைகள், டெட்லிஃப்ட்ஸ், பெஞ்ச் பிரஸ் மற்றும் புல்-அப்கள் போன்ற கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன்.  அடுத்ததாக செயல்பாட்டு பயிற்சிகள்.  இது எனது சுறுசுறுப்பு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பர்பீஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ் மற்றும் போர் கயிறுகள் போன்ற பயிற்சிகளையும் செய்கிறேன்.

டயட்

உணவு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. எல்லாவற்றையும் சாப்பிடுவேன். அதேசமயம் கட்டுப்பாட்டுடனும் இருக்கிறேன். இதனால், எனது உடலை நான் விரும்பும் விதத்தில் வடிவமைக்க முடிகிறது.  அதுபோன்று சிறுவயதிலிருந்தே உடல் பழக்கப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்  உடலில்  பெரிய பாதிப்புகள் ஏற்படாது. எனவே, திடீர் உணவு மாற்றங்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.

எனவே, எனது உணவு திட்டத்தில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் பழங்கள், காய்கறிகள், கோழி இறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி, பருப்பு போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கும். மேலும் போதுமான நீரேற்றமும் முக்கியமானது. 

உதாரணமாக, காலையில் சிறிது மாதுளை, வாழைப்பழம் மற்றும் உப்பு சேர்த்த ஏதேனும் ஒரு ஜூஸ் (300-400ml) குடிப்பேன்.மதிய உணவில் பச்சரிசி சாதம், பருப்பு, காய்கறிகள் (பீன்ஸ், அவரைக்காய்), 150 கிராம் அளவு கோழி இறைச்சி மற்றும் 3 முட்டை வெள்ளைக்கரு இருக்கும்.மாலையில் பழங்கள் அல்லது 200 கிராம் அளவு மீன் அல்லது கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு அல்லது சூப் இருக்கும். 

அதுபோன்று நாள் முழுவதுக்கும் 3.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதில் உறுதியாக இருப்பேன்.சுருக்கமாக சொன்னால், எனது ஃபிட்னஸ் ரகசியம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட, புரதம் நிறைந்த உணவு, போதுமான நீர் அருந்துதல் மற்றும் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியாகும்.

- ஸ்ரீதேவி குமரேசன்