இருதுருவக் கோளாறினை எதிர்கொள்வது எப்படி?
Bipolar disorder சிகிச்சைகள்!
வெறித்தனமான மனச்சோர்வின் (Manic Depression) அடுத்தடுத்த அத்தியாயங்களாகத் தொடரக்கூடிய இருமுனையக் கோளாறு தமக்கு இருப்பதாக பல பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளார்கள். வரலாற்று பிரசித்தி பெற்ற ஓவியக்கலைஞர் Vincent van gogh இருமுனையப் பிறழ்வை அனுபவித்து உள்ளதாக சில குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
 புகழ் பெற்ற பாடகி செலினா கோமஸ் (Celina gomes), கேரி ஃபிஷர் (Carrie fisher), ராபர்ட் டெளனி (Robert downey) போன்ற சர்வதேசப் பிரபலங்களும் தங்களுக்கு பைபோலார் கோளாறு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பைபோலார் மனச்சிக்கலில் இருந்ததாக காவல்துறை விசாரணைகள் கண்டறிந்துள்ளன.
 பாடகி செலினா, ‘‘தன் குறைகளை வெளிப்படையாகக் கூறி கவலை மற்றும் மனச்சோர்வுகளை அதிதீவிரமாக எடுத்துச் செல்லாமல் சுய விழிப்புணர்வோடு கவனிக்க வேண்டியது மனநலத்திற்கு மிக அவசியம்” என்றார். மேலும், ‘‘ஒன்று இதுதான் எனத் தெரிந்த பிறகு, அது நமக்குக் கையாள எளிதாகுமே” என்றும் யதார்த்தமாகக் குறிப்பிடுகிறார். இப்படியான நேர்மறை அணுகுமுறை பைபோலருக்கு மட்டுமல்ல எல்லா மனச் சிக்கல்களுக்கும் மிக அவசியமானது.
 உதாரணத்துக்கு, தனக்கு நெருக்கமானவர் இறந்துவிட்டார் என்று ஒருவர் மனக்கவலையின் அழுத்தத்தில் (Depression) இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யோசித்துப் பாருங்கள். அவர் அப்படியே இருந்துவிட்டால் என்னவாகும்? எனவே, துன்ப நிலையில் இருந்து எழ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அதிலும் கூடுதல் சக்தியோடு மீண்டும் எழுதலுக்கான ஒரு உந்துதிறனும் வேண்டுமில்லையா ? அதற்குத்தான் மனத்தை திசை திருப்புதல் தேவை என்று அன்று முதல் இன்று வரை எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிலர் அன்பின் ஆழத்தை நிரூபிப்பதாக எண்ணிக் கொண்டு அந்த துன்ப நிலையிலே காலம் கடத்திக் கொண்டு வாழ்வை மெல்ல மெல்ல அழித்துக் கொள்வார்கள். இதுகூட மெதுவிஷம் (Slow poison) போன்றதே என்று உணர வேண்டும்.
அதிக துயரமான சூழல்களில் வேறு செயல்களில் ஈடுபடுவது, வேறு இடத்திற்குச் செல்வது, புதியவர்களோடு உரையாடுவது என்று மாற்றத்தை ஏற்படுத்தும்போது உணர்நரம்பியல் கடத்திகளின் சுரப்பில் நல்ல மாற்றம் ஏற்படும்.
தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியின் நிறைவையும் தரக்கூடிய டோபமைன் (Dopamine), நினைவுத் திறனை மேம்படுத்தி, உணர்வுகளைச் சமன்படுத்தும் செரடோனின் (Serotonin), நம்பிக்கையும், உறவின் நெருக்கத்தையும் தருகின்றன Oxetocin, வலிகளையும், கவலைகளையும் நீக்கி மீண்டெழச் செய்யும் எண்டார்ஃபின் (Endorphin) போன்ற சுரப்பிகளின் இயக்கம் சீராகும். அவற்றின் துணையோடு நாம் மீண்டும் பழைய இயல்பான நிலைக்குத் திரும்புவோம். இதுவே பொதுவான வாழ்க்கை சுழற்சி. ஆனால், பைபோலார் பாதிப்பு கொண்டவர்களுக்கு மீண்டு எழுந்து வேறு உணர்வுக்கு மாற புறக்காரணிகளின் உதவி எதுவும் தேவையில்லை என்பதைத்தான் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாமாகவே ஒரு உணர்விலிருந்து சட்டென்று மாறிவிடுவார்கள். சிரித்துக்கொண்டே இருப்பவர் திடீர் என்று அழுவார், அமைதியாக ஒன்றைப் பேசிக் கொண்டிருப்பவர் அடுத்த நொடி ஆத்திரம் கொண்டு கத்துவார். முற்றிலும் தொடர்புகளின்றி இந்த உணர்வு மாற்றங்கள் நேரும்போது மட்டுமே பைபோலர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைய நவீனச் சூழலில், இன்னொருவரின் சொல், செயல் காரணமாக ஒருவர் சட்டென எதிர்த்துப் பேசும்போதும், எதிர்வினை ஆற்றும்போதும் கூட இவருக்கு பைபோலாரா என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். இது முற்றிலும் தவறான மனத்திரிபு தந்திரம் (Manipulation). தூண்டும் காரணிகளை மறைத்து ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பு ( Projection ) செய்யும் முயற்சிக்கு நாம் ஆளாகாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
ஏனெனில், வெகு இயல்பாக நிகழும் குடும்ப விவாதங்கள், ஆரோக்யமான மாற்றுக் கருத்து உரையாடல்களுக்கு நடுவே Bipolar போன்ற மனநோய்களின் பெயரை பலரும் அறிந்தோ அறியாமலோ குறிப்பிட்டு ஒருவரை முத்திரை குத்தி விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும்.
‘‘இப்போதுதான் அழுது கொண்டிருந்தாள்… உடனே எழுந்து சுறுசுறுவென்று வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள்”, ‘‘அப்பா இறந்து விட்டார் பாரு எப்படி துக்கம் இல்லாமல் சோறு தின்கிறான்” என்று எளிய மாற்றங்களை, இயல்புகளைக்கூட அன்றாடம் மனநோயாக இருக்குமோ என்று சந்தேகப்பார்வையில் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
ஆக, முழுமையாக தனக்குத் தெரியாத எந்தவொரு தீர்மான அறிவிப்பையும் (Fixed statement) முன்வைக்காமல் நிதானம் கொள்ள வேண்டும். இது சொல்வதற்கு எளிது. நடைமுறையில் சிரமமே. எனினும், தொடர் பயிற்சிகளின் மனக்கட்டுப்பாட்டின் மூலம் சாத்தியமாகும். இந்த நிதானப் பாதைக்கு நாம் திரும்பாவிடில் தவறான சிகிச்சை அளிப்பு, நேர விரயம், தேவையற்ற மன உளைச்சல் போன்றவையே ஏற்படும்.
பொதுவாக, வீட்டில் ஏதேனும் சண்டை நடந்தால் ஆண்கள் வெளியே சென்று விடுவார்கள். நண்பர்களைச் சந்திப்பார்கள். அதுவே ஒரு நடைப்பயிற்சிதான். புதிய கலந்துரையாடல் மனமாற்றம் தரும் என்று திட்டமிடாமலே உடல் இயக்கம் நமக்கு மூளை வழியாகக் கட்டளை இட்டு Stress harmone அதிகமாகிறது.
இங்கிருந்து ஓடிவிடு என்று சிக்னல் கொடுக்கிறது. இப்படி நமக்கு நாமே உளவியல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இயற்கை நம் உடல் மன செயல்பாடுகளைச் சிறப்பாக உருவாக்கி உள்ளது. அவற்றின் மதிப்பை உணர்ந்து கொடுத்து வைத்தவர்கள் (Feeling blessed) நாம் என்று நன்றியோடு வாழ்வைப் பார்க்க வேண்டும்.
ஆனால் ஆண்களின் இந்த தப்பித்தலை ‘‘அவர் பாட்டுக்கு சட்டையை மாட்டிட்டு கிளம்பிட்டாரு” என்று குற்றமாகப் பெண்கள் சொல்கிறார்கள். வாழ்வியலோடு பிணைந்து இருக்கும் அனிச்சை உளவியல் நடத்தைகளைப் பற்றிய புரிதலின்மையே இது. இதேபோல், Bipolar disorder - இன் முதன்மையான அறிகுறியாகக் குறிப்பிடப்படும் உணர்வுகளின் ஏற்ற இறக்கம் (Mood swings) இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் இருக்கக்கூடியதுதான் இல்லையா ? மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் இருக்கும் எரிச்சல் மனநிலை (Irritable mindset) ஆண்களால் பல நேரங்களில் குறையாக சுட்டிக் காட்டப்படுகிறது. மனநோய்க்கும், உடலியல் இயல்புகளுக்குமான வேறுபாட்டினைத் துல்லியமாக அறிய உரிய மனநல மருத்துவரை, நிபுணரை நாடுவது நல்லது.
அன்றைய காலத்தில் பெண்களும் அக்கம் பக்கம் இருப்பவர்களோடு உரையாடுவது, கோவிலுக்குச் செல்வது, கைவினைப் பொருட்கள் உருவாக்குவது, இழுத்துப் போட்டு வீட்டு வேலைகளைச் செய்வது என நவீன உளவியல் சிகிச்சைகளான Talk Therphy, Mindfullness, Nero - Balance practice, Energy cutting Work-outs போன்றவற்றை அன்றாட செயல்பாடுகளின் வழியாகவே ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இத்தகு அற்புதமான வாழ்வியல் முறைமைகளை நாம் மனது வைத்தால் மீட்டெடுத்துக் கொள்ளலாம். Gym, Equipment work-outs என்று பணம் செலவு செய்துதான் உடல் / மன ஆரோக்யம் பெற முடியும் என்பது தவறான பார்வை. பழமையிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டாலே புதியபாதையில் மனநல கோளாறுகளை மிக எளிதாக வரும்முன் தவிர்த்து விடலாம். அதீத ஏற்ற இறக்கத்தின் இரு முனைக்கும் பயணிக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த உலக அளவில் பெரும்பாலும் லித்தியம் (Lithium) எனும் இயற்கைஉப்பு கலந்த மருந்துகளை FDA அங்கீகரித்துள்ளது. உலகெங்கும் உளவியல் மருத்துவர்கள் இவற்றைப் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த மருந்துகள் உணர்வுச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தவும், நரம்புகளைப் பாதுகாத்து சமநிலைப்படுத்தவும் உதவக்கூடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், Mood stabilising drugs எனும் பிரிவில் வருகின்ற இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. BIPOLAR பீடிப்பு மூன்றாம் நிலையைக் கடந்த பின் எடுத்துக்கொள்ள வேண்டிய இவ்வாறான மருந்துகளை ஒருசில மனநல மருத்துவர்களும், அனுபவமற்ற உளவியல் நிபுணர்களும் உடனடி தீர்வு காண்பிக்க BIPOLAR ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் கொடுக்கத் துவங்கி விட்டார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.
இந்த மருந்துகள் தசை இயக்க ஒருங்கிணைப்புத்திறன் குறைபாடு (Decreased Motor coordination), இரைப்பை - குடலியக்கக் கோளாறு (Gastrointentinal disorder) போன்ற எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு உள் மருந்துகளை எடுப்பதில் மிகுந்த விழிப்புணர்வு வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.பைபோலார் சிக்கலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் நமக்கு ஏற்படும்போது, நமக்கு நெருக்கமான உறவுகள், நலன் விரும்பிகள் நம்மைப் பற்றி கூறும் செய்திகளை உற்று கவனிக்க வேண்டும். இவ்வாறு ஆரம்ப நிலையிலேயே சுய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இரு முனையப் பிறழ்வு நோய்க்கு முதல்கட்ட சிகிச்சை முறையாகும்.
தான் இருக்கும் நிலையில் மகிழ்ச்சி கொள்வது, வெளிப்படையான ஆரோக்கியமான உரையாடல்கள், தன்னம்பிக்கை பயிற்சி போன்றவை Bipolar சவாலை எதிர்கொள்ள உதவும்.
மேலும், வழக்கமான நடைமுறைகளைத் தவறாமல் கடைபிடிப்பது (Stick to Routines), முறையான நேர மேலாண்மை ( Proper time Management ), பட்டிலியலிட்டு வேலைகளைச் செய்வது (Scheduling tasks), சமூகத்தோடு இணக்கமாக கலந்து செயலாற்றுவது (Social Interactions), புதியவற்றைக் கற்றுக் கொள்வது (Learning new skills) என்று ஒரு திட்டத்திற்குள் வர வேண்டும்.
இதனைத் துவங்க முதலில் ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்துவிட்டோம் என்றாலே உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். எவ்வளவு எளிதான தீர்வுகள் கண்முன்னே கொட்டிக் கிடைக்கின்றன... இல்லையா? அதேபோல், சரிவிகித உணவு - காய்கறிகள், பழங்கள், கீரை மற்றும் பருப்பு வகைகள் என எடுத்துக் கொள்வதும் நல்ல மாற்றத்தைத் தரும். மன அமைதிக்கான யோகா, தியான பயிற்சிகளை மேற்கொள்வதும் எப்போதும் மனநல ஆலோசகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பவைதான். ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் எனில், அதில் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்கு ஏதோ சிக்கல்.
அது நினைவு மறதி, மொழித்திறன் குறைபாடு ஏன் மனநோயாகக்கூட இருக்கலாம். எனவேதான் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறார்கள். இரண்டு அவர்கள் சொல்வது மிக முக்கியமானது, நலம் தரக்கூடியது, எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற அளவில் உங்கள் மேல் அவர் அக்கறையும் நம்பிக்கையும் கொண்டுள்ளார்.
இந்த இரண்டு கோணத்தில் எதை எடுத்துக் கொள்வது என்பது நம் கையிலேதான் உள்ளது. சரியான கோணத்தை எடுத்துக் கொள்வது மனநோய்களுக்கு மட்டுமல்ல மனித வாழ்வின் இதர பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவும்.
Bipolar சிக்கலின் முதல் கட்டத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் தானாகவே சரியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அக்கறையோடு அணுகுவதே நல்லது.ஒருவர் நீண்ட காலம் Bipolar சிக்கலில் நீடிக்கும்போது Mania எனப்படும் மனப்பிறழ்வு ஏற்படும். மனம் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உணர்வுகளின் வேகம் இன்னும் கூடும்.
எதாவது செய்து நான் சரியாக வேண்டுமே என இயற்கையான தற்காப்பு உள்ளுணர்வு (Survival Insticnt) அதிகமாகும்போது விழித்துக் கொண்டு உதவியை நாடி விடுதல் நலம். கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விடவும் எளிய வாழ்க்கை நடைமுறைகளை ஏற்று, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே ஆகச்சிறந்த முதற்கட்ட உளவியல் பயிற்சியாகும். முறையான பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களின் ‘சைக்கோதெரபி’ சிகிச்சையும் பலன் தரும்.
‘‘காலுக்குச் செருப்பு இல்லை என்று கவலைப்படாதே கால் இல்லாதவனை நினைத்துக் கொள்” என்பது பழைய மொழியல்ல. என்றைக்கும் தேவைப்படும் அறிவுரையாகும். பொருளாதாரத்திலும், வசதி வாய்ப்புகளிலும், உறவுகளின் நிலைகளிலும் நம்மை விட தாழ்நிலையில் இருக்கிறவர்களைப் பார்த்து சமாதானப்பட்டுக் கொள்வது நல்லது.
அதேபோல், கல்வி, திறன் மேம்பாடு, சுய முன்னேற்றம் போன்றவற்றில் நம்மை விடவும் அதிக சாதனைகள் புரிந்தவர்களை கவனித்து அதே போல் நாமும் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று தன்னம்பிக்கை நடை போட வேண்டும். மனம் இவ்வாறு அமைதி கொள்ளும்போது மனச்சோர்வு, மனஅழுத்தம் போன்றவை வெகுவாகக் குறையும். அடிப்படைக் காரணிகளைக் கட்டுப்படுத்துவதே புத்திசாலித்தனம் இல்லையா? இதுவே பைபோலார் போன்ற மிக நுண்ணிய மன உணர்வுகளோடு தொடர்பு கொண்ட மனசிக்கல்களை சமாளிக்க உதவும் எளிய மாற்றுச் சிந்தனை. ஆரம்ப நிலைகளிலேயே சிறுசிறு மன மாற்றங்களைக் கண்டறிந்து ஊதித்தள்ளி உற்சாகமாக வாழ்வைக் கொண்டாடுவோம்.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|