முழு உடல் வலி நோய் !



வலியை வெல்வோம்!

எப்போதும் உடல் சோர்வாக இருந்து அதோடு சேர்த்து உடம்பு வலி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் இது மெனோபாஸின் அறிகுறி, ஹார்மோன் பிரச்னைகள்னு நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கலாம்.இதே 10,12 வயது குழந்தைகளுக்கு இருந்தால் வளர்ச்சிக்கான உடல்வலி (growth pain) குழந்தை பூப்பெய்வதற்கு தயாரா இருக்கிறார்கள் என நாமே காரணங்களை கற்பித்துக் கொள்வோம்…

சரி இது இரண்டுமே இல்லை அப்ப வேற என்னவாக இருக்கும்? என்று எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? நமக்கு இருக்கும் அறிகுறிகளை கூகுள் செய்தோ இல்லை சாட்-ஜிபிடியிடம் கேட்டால் உடனே அது பெரிய வியாதியிடம் கொண்டு நிறுத்தி விடும்.அப்புறம், தலைவலி போய் திருகு வலி வந்த கதை தான். அதைப்படித்து ஸ்டிரஸ்ஸாகி பின் மீண்டும் வலி அதிகரிக்கும். அப்போ அது என்ன பிரச்னையாக இருக்கும்?!

‘Fibromyalgia’னு எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா…ஒரு வேளை இதுவாக கூட இருக்கலாம். சரி இனி அது என்னன்னு பார்க்கலாமா?! எத்தனையோ வலியைப் பற்றிப் படிச்சிட்டோம். இதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

‘பைப்ரோமயால்ஜியா’ என்பது ஒரு நாள்பட்ட (நீண்ட கால) வலி நோயாகும். தமிழில் இதை “முழு உடல் வலி நோய்” அல்லது “தசை-நார்த் தசை வலி நோய்” என்று சுருக்கமாக அழைக்கலாம்.

இந்த நோய் உலக அளவில் 24% மக்களை பாதிக்கிறது. இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இதனால் அவதிப்படுகிறார்கள். பெண்களுக்கு ஆண்களைவிட 7-9 மடங்கு அதிகம் வருகிறது.

30- 50 வயது பெண்களுக்கு ஏன் அதிகம்? 

ஹார்மோன் மாற்றங்கள் (மாதவிடாய் நிற்கும் சமயம்)

வீடு + வேலை + குழந்தை பராமரிப்பு= அதிக stress தூக்கம் கெட்டுப் போவதுபெர்ஃபெக்ஷனிஸ்ட் nature (எல்லாம் சரியா செய்ய வேண்டும் என நினைப்பது) 60-70% பெண்களுக்கு இந்த வயதில் தான் முதன் முதலில் நோய் கண்டறியப்படுகிறது.தற்போது 20-30 வயதினரிடம் கூட அறிகுறிகள் தென்படுகின்றன முக்கியமாக கொரோனா தொற்றிற்கு பிறகு (Long COVID) WFH-ல தூக்கம் கெட்டுப் போனது மற்றும் மொபைல், லேப்டாப் முன் நாள் முழுக்க உட்கார்ந்திருத்தல் போன்ற காரணங்களால் வருகிறது.

குழந்தைகளுக்கு வருமா என்றால்?

ஆமாம், 1-6% குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அதில் 10-18 வயது பெண் குழந்தைகளுக்கு தான் அதிகம் வருகிறது. பரீட்சை stress, பள்ளியில் pressure ஆகியவற்றால் தூண்டப்படுகிறது .இதை ‘Juvenile Fibromyalgia’ என்று கூறுவர்.சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பைப்ரோமயால்ஜியா பொதுவாக 30-50 வயதுக்கு இடையில் அதிகம் தொடங்குகின்றது. ஆனால், 10 வயதில் இருந்து 70 வயது வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வயதானவர்களுக்கு ஏற்கனவே ருமாட்டாய்டு பிரச்னை இருந்தால் அதோடு சேர்ந்து வரும். மற்றபடி தனித்து வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

முக்கிய அறிகுறிகள்

 உடல் முழுவதும் (கழுத்து, தோள், முதுகு, இடுப்பு, கால், கை) பரவலான வலி  குறைந்தது 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.

காலையில் எழுந்தவுடன் உடல் விறைப்பு (stiffness)
தூங்கியும் சோர்வு நீங்காத தீவிர களைப்பு
“மூளை மூடுபனி” (fibro fog)  நினைவாற்றல் குறைவு,
கவனக் குறைவு, சொற்களை மறத்தல்
தலைவலி அல்லது ஒற்றை தலைவலி
வாய்-தாடை மூட்டு வலி (TMJ pain)
 குடல் பிரச்னைகள் (IBS  எரிச்சல் கொண்ட குடல் நோய்)
சிறுநீர்ப்பை வலி, அடிக்கடி சிறுநீர் வருதல்

மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஏற்படக் காரணங்கள் இதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூற இயலாது ஆகவே மருத்துவர்கள் இதை “மத்திய உணர்தல் நோய்” (Central Sensitization Syndrome) என்று கூறுகிறார்கள். அதாவது, மூளையும் முதுகுத் தண்டும் வலி சிக்னல்களை அதிகமாக உணர்கின்றன (வலியை பெரிதாக்குகிறது)

செரோடோனின், டோபமைன் போன்ற ரசாயனங்களின் குறைவு

சப்ஸ்டன்ஸ் P என்ற வலி ரசாயனம் அதிகமாக இருத்தல்
மரபணு காரணங்கள் (குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவருக்கு வர வாய்ப்பு உண்டு

தூண்டுதல்கள்: விபத்து, அறுவை சிகிச்சை, தொற்று நோய்கள் (கொரோனா, எப்ஸ்டீன்-பார் வைரஸ், லைம் நோய்), மிகுந்த மன அழுத்தம் அல்லது PTSD(Post Traumatic Stress Disorder) சமீபத்திய ஆராய்ச்சிகளில் (2020-2025) நோயாளிகளில் 40-60% பேருக்கு “சிறிய நரம்பு நார்கள் சேதம்” (small fiber neuropathy) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் கண்டறிதல்

இதற்கென்று தனியொரு ரத்தப் பரிசோதனையோ ஸ்கேனோ கிடையாது. ஆகவே மருத்துவர் உடல் பரிசோதனையும் நோயாளியின் அறிகுறிகளையும் வைத்து எச்சரிக்கை அடிப்படையில் கண்டறிவார்.2016 அமெரிக்க ருமட்டாலஜி கல்லூரி விதிகளை வகுத்துள்ளது. அதன்படி:1. வலி உடலின் இரு பக்கங்களிலும், இடுப்புக்கு மேலும் கீழும் இருக்க வேண்டும்.

2. குறைந்தது 3 மாதங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்.

3. மற்ற நோய்களை (தைராய்டு குறைவு, ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், வைட்டமின் D குறைவு) நீக்கிய பிறகு இதை உறுதி செய்யலாம்.

சிகிச்சைகள்- மருந்துகள்

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை உங்கள் குடும்பநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும். தவிர்க்க வேண்டிய வலி நிவாரணிகளையும் தவிர்க்கவும்.
மருந்து அல்லாத சிகிச்சைகள்

1. படிப்படியாக அதிகரிக்கும் உடற்
பயிற்சி (நடை, நீச்சல், சைக்கிள்)
2. காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி (CBT)
3. யோகா, நீர் உடற்பயிற்சி (Aquatic therapy)
4. தியானம், மன அழுத்த மேலாண்மை.
வாழ்க்கை முறை மாற்றங்கள்

*தினமும் ஒரே அளவு நடை அல்லது உடற்பயிற்சி (ஒரு நாள் அதிகம், மறுநாள் படுக்கையில் ஓய்வெடுப்பது  இதைத் தவிர்க்கவும்)

*இரவு 10-11 மணிக்குள் தூங்கி காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்க முயற்சி.

*சூடான நீரில் குளியல், லேசான மசாஜ்..

*உணவியல் ஆலோசகர்களின் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுப் பழக்கங்களை தவிர்த்தல்.

பைப்ரோமயால்ஜியா உயிருக்கு ஆபத்தானது அல்ல. உறுப்புகளையும் சேதப்படுத்தாது. ஆனால் நாள்பட்ட நோய்க்கு சரியான சிகிச்சை + உடற்பயிற்சி + மனநல ஆலோசனை இருந்தால் 30-50% நோயாளிகள் பெரிதும் குணமடைகிறார்கள்.முழு குணமாகுதல் அரிது. ஆனால் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்த முடியும். நல்ல ருமட்டாலஜிஸ்ட் அல்லது வலி மேலாண்மை மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனை பெறலாம்.

பைப்ரோமயால்ஜியாவில் பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சிகிச்சை

பைப்ரோமயால்ஜியா நோயாளிகளுக்கு மருந்துகளைவிட மிக முக்கியமான சிகிச்சை உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி ஆகும்.உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க ருமட்டாலஜி கல்லூரியும் (ACR), ஐரோப்பிய லீக் அகெய்ன்ஸ்ட் ருமட்டிசமும் (EULAR 2016 & 2023 வழிகாட்டுதல்கள்) பிசியோதெரபியை முதல் வரிசை சிகிச்சையாக (first-line treatment) பரிந்துரைக்கின்றன.

மருந்துகள் வலியை சற்று குறைக்கலாம்; ஆனால் நீண்டகால நிவாரணம் பிசியோதெரபி மூலமே கிடைக்கிறது.

*பைப்ரோமயால்ஜியாவில் மூளை வலி சிக்னல்களை அதிகமாக்குகிறது (central sensitization). உடற்பயிற்சி மூலம் மூளையின் வலி பாதைகளை “மறுபயிற்சி” (re-training) செய்ய முடியும்.
*தசைகள் பலவீனம் ஆவதை தடுக்கும்.
*தூக்கத்தை மேம்படுத்தும்
*மனச்சோர்வு, பதற்றத்தை குறைக்கும்
*வாழ்க்கைத் தரத்தை பெரிதும் உயர்த்தும்

6 மாதங்கள் தொடர்ந்து பிசியோ

தெரபி செய்தவர்களில் 40-60% பேர்.வலியில் 50% குறைவு கண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

பைப்ரோமயால்ஜியாவுக்கு சிறந்த பிசியோதெரபி முறைகள்

1. Graded Exercise Therapy (GET)  படிப்படியான உடற்பயிற்சி முதலில் 5 நிமிட நடை, பின்பு ஒவ்வொரு வாரமும் 12 நிமிடம் அதிகரிக்கச் செய்வது. இது மிகவும் பாதுகாப்பான முறை. திடீரென அதிக உடற்பயிற்சி செய்தால் “post-exertional malaise” வரலாம்.

2.நீர் உடற்பயிற்சி (Aquatic / Hydrotherapy)

சூடான நீச்சல் குளத்தில் (32-34°C) செய்யும் பயிற்சி. நீர் உடலின் எடையை தாங்குவதால் மூட்டுகளுக்கு அழுத்தம் குறையும். வலியும் களைப்பும் வெகுவாக குறையும். வாரம் 2-3 முறை 30-45 
நிமிடம் போதும்.

3.யோகா:
ஆசனங்கள் + பிராணாயாமம் + தியானம். வாரம் 2 முறை.

4. Aerobic Exercise:

நடைபயிற்சி, ஸ்டேஷ்னரி சைக்கிள், எலிப்டிகல் ட்ரெய்னர்  இதயத்துடிப்பு 60-70% வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

5.Manual Therapy & Stretching மென்மையான மயோஃபேஷியல் ரிலீஸ், லேசான ஸ்ட்ரெச்சிங்.

6.TENS (Transcutaneous Electrical Nerve Stimulation)
மின் தூண்டுதல் கருவி வீட்டில் பயன்படுத்தலாம். வலியை தற்காலிகமாக குறைக்கும்.

உடற்பயிற்சியை மிக மெதுவாக தொடங்கவும். முதல் வாரங்களில் வலி சற்று அதிகரிக்கலாம்  இது இயல்பு. வலி அளவுகோல் 6/10-க்கு மேல் போனால் உடனே நிறுத்தி ஓய்வெடுக்கவும்.

நல்ல பிசியோதெரபிஸ்ட் (fibromyalgia பயிற்சி பெற்றவர்) உதவியுடன் உடற்பயிற்சி திட்டத்தை வடிவமைக்கவும்.

பைப்ரோமயால்ஜியாவை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், சரியான பிசியோதெரபி மூலம் 50-70% நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
வீட்டிலேயே எளிதாக நமக்கு நாமே ஒரு திட்டத்தை தயாரித்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, காலை எழுந்தவுடன்,

*5 நிமிடம் கழுத்து-தோள்-முதுகை சுழற்றுங்கள். (பலமாக வேண்டாம், மெதுவாக)

*5 முறை மூச்சை ஆழமாக இழுத்து விடுதல் காலை 10 மணி

*10-15 நிமிடம் மெதுவாக நடைபயிற்சி செய்தல்.

மதியம்

*சூடான தண்ணீரில் குளிக்கவும், வலி சற்று மட்டுப்படும்.

மாலை 5 மணி

*மீண்டும் 15 நிமிட நடை அல்லது ஸ்டேஷனரி சைக்கிள் இரவு 9:30 மணி

*மொபைல் ஆஃப்

*10 மணிக்குள் படுக்கை.

வாரத்தில் 2 நாட்கள் யோகா அல்லது ஏதாவது ஆன்லைன் உடற்பயிற்சி. மேலே குறிப்பிட்டவை , ஒரு உதாரணத்திற்காக தரப்பட்ட அட்டவணை, நீங்கள் உங்கள் பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று பின் உங்களுக்கு தகுந்தாற்போல் திட்ட அட்டவணை தயாரித்துக் கொள்ளலாம்.