முடி உதிர்வை தவிர்க்க!



தலைமுடி பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், தலைமுடிக்கு வழக்கத்தை விட கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது என்று அர்த்தம். தலைமுடி ஆரோக்கியமாகவும், பள
பளப்பாகவும் இருக்க வேண்டுமானால், தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது மட்டுமின்றி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி உடைவதைத் தடுக்கும், ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்படியான ஒருசில ஹேர் ஆயில் அல்லது மாஸ்க்குகளைப் போட வேண்டும்.

அதுவும் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அவர்களின் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பின்வரும் வைத்தியங்களை தான் பயன்படுத்தினார்கள். அதுவும் இந்த வைத்தியங்களைத் தொடர்ந்து 8-12 வாரங்கள் பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாரம்பரிய வழிகள் என்னவென்பதைக் காண்போம்.

நெல்லி எண்ணெய் : இதற்கு ஒரு கிண்ணத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது  பிரஷ்ஷான நெல்லிக்காயை எடுத்து  கொட்டை நீக்கி தூள் செய்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து, குறைவான தீயில் 8-10 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும். எண்ணெய் குளிர்ந்ததும், அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலுவடைவதோடு, பளபளவென்றும் இருக்கும்.

வெந்தய மாஸ்க்: இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த விதைகளை அரைத்து, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை தலையில் தடவி 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, தலைமுடி உடைவது குறையும். அதேசமயம் இது குளிர்ச்சியானது என்பதால் அதிக குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்: இதற்கு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு அல்லது சீயக்காய் தூள் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, தலைமுடியில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படும்.

 செம்பருத்தி எண்ணெய்: இதற்கு செரும்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மீதமான தீயில் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.  பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வர, தலைமுடியில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படும்.

வெங்காயச் சாறு: இதற்கு ஒரு சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.  இப்படி மாதத்திற்கு 1 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
குறிப்பு:  இதுவும் குளிர்ச்சி அதிகமானது என்பதால், அதிக குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் இதை தவிர்க்க வேண்டும். அதுபோன்று இந்த வழியை முயற்சிக்கும் முன், பேட்ச் டெஸ்ட் செய்து கொண்டு பின்னர், பயன்படுத்தலாம். 

கற்றாழை ஜெல் மாஸ்க்:  இந்த மாஸ்க்கிற்கு பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கால்ப் என்றால் கற்றாழை ஜெல்லுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும். பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வந்தால், முடி ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.

- ரிஷி