ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்துகள்!



இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.  அதுமட்டுமல்லாமல், கணினி, டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் உள்ளிட்டவற்றையும் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த பயன்பாட்டு பொருட்களினால் ஏற்படும்  பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சந்திக்கும்  பாதிப்புகள் கூடுதலாகி வருகிறது. 

இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோர் பலரும் ஸ்மார்ட்ஃபோன்களை குழந்தைகள் கையில் விளையாட கொடுக்கின்றனர். எனவே, ஸ்கிரீன் டைம் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் இந்துமதி தயாம்மாள். மேலும், அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்

பிறந்த ஒரு மாத குழந்தை முதல் 18 வயது இளம்பருவத்தினர் வரை செல்போன் பழக்கத்தினால் தினசரி ஒரு பாதிப்பால் வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். தற்போதுள்ள சூழலில் ஒரு குழந்தை பிறந்து தவழுகிற பருவத்திலேயே செல்போனுடன் விளையாட தொடங்கி விடுகிறது. ஒரு வயது கூட ஆகாத குழந்தை செல்போனுடன் அதிக நேரம் செலவிடும்போது, குழந்தைக்கு பேச்சு வளம் தாமதமாகிறது. இதனால் நார்மலாக பேச வேண்டிய வயதில்   குழந்தை பேசுவதில்லை. 

இதற்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணமாகின்றனர். ஏனென்றால், பெரும்பாலான பெற்றோருக்கு குழந்தைகளுடன் பேச விளையாட நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் அவர்களும் செல்போனுடனே நேரத்தை செலவிடுகின்றனர்.  

முந்தைய காலங்களில் பெற்றோர் குழந்தையுடன் செலவிட்ட நேரமும், அவர்களுடன் உரையாடியது போன்றும் இப்போது இல்லை.  இதனால், பெரும்பாலான குழந்தைகளுக்கு பேச்சு தாமதமாகிறது. மேலும், பார்வை பிரச்னையும் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. 

 அடுத்து பள்ளிச் செல்லும் பருவம்.  இந்தப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து அடம்பிடித்து செல்போனை வாங்கி விளையாடுகின்றனர். இதனால், அவர்கள் ஸ்கிரீன்டைம் அதிகரிக்கிறது.  

இதனால், அவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, பரீட்சைகளில் மதிப்பெண்கள் குறைந்து காணப்படுவது, கணக்கு பாடத்தில் கற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. பொதுவாக இந்தப் பருவத்தில் குழந்தைகளிடம் மல்டி டாஸ்க் ஸ்கில் அதிகமாக இருக்கும். 

அதாவது ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் திறன் இருக்கும். இது தற்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விக்குறியாக உள்ளது.  இதற்கு முக்கிய காரணம், அவர்களுடைய ஸ்கிரீன்டைம் அதிகரித்ததால்தான். 

மேலும், ஸ்கிரீன்டைம் அதிகரிக்க அதிகரிக்க குழந்தைகளிடம் உடல்  உழைப்பு குறைந்து  அவர்கள் இந்த வயதிலேயே உடல் பருமனால்  பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோயும் வந்துவிடுகிறது. 

 அடுத்து டீன் ஏஜ் பருவ பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அதிகரித்து வரும் ஸ்கிரீன்டைம் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான். இவர்களிடம், மனக்கவலை, ஒருவித பதட்டம், எதிலும் நாட்டமில்லாமை, மனஅழுத்தம், தூக்கமின்மை, சமூக விரோத நடவடிக்கைகள், சமூகத்தை சமாளிக்கும் திறன் குறைவு போன்றவை காணப்படுகிறது. 

மேலும், ஸ்கிரீனையே அதிகம் பார்த்துக் கொண்டிருப்பதால், சமூக வலைதளங்களில் தேவையற்ற விஷயங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பது. இதனால், சைபர் புல்லிங் குற்றங்களில் ஈடுபடுவது, ஆக்ரோஷமாக நடந்து கொள்வது, தவறான பழக்கவழக்கங்கள் என காணப்படுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அவர்களது ஸ்கிரீன் டைம் அதிகரிப்பே காரணம்.  

வழிகாட்டுதல்

குழந்தைகளிடம் ஸ்கிரீன் டைம் அதிகரிப்பை   குறைக்கவும், இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் IAP (Indian Association of paediatrics) அமைப்பு ஒரு வழிகாட்டுதலை 
வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதலின்படி இரண்டு வயது வரை குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வேண்டுமானால் வீடியோ காலில் பேச அனுமதிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. 

அடுத்து இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள்   ஒருநாளைக்கு ஒருமணி நேரம் மட்டுமே செல்போன் உபயோகிக்க கொடுக்கலாம். அதுவும், பெற்றோர் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும். ஐந்து வயதிலிருந்து பத்து வயது வரை இரண்டுமணி நேரத்துக்கும் குறைவாகத்தான்  ஸ்கிரீன் டைம் கொடுக்க வேண்டும். 

 பத்து முதல் பதினெட்டு வயது வரை குறைந்தபட்சம் இரண்டுமணி நேரம் கொடுக்கலாம். அதுவும், இடை இடையில் அவர்களுக்கு மற்ற வேலைகளை கொடுக்க வேண்டும். அதாவது, அரைமணி நேரம் போன் பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்த அரை மணி நேரம் அவர்கள் விளையாட சொல்ல வேண்டும். 

அல்லது அடுத்த கால் மணி நேரம் போன் பார்க்கிறார்கள் என்றால் அடுத்த ஒருமணி நேரம் வீட்டுப் பாடங்களை செய்ய சொல்ல வேண்டும்.  அடுத்த கால்மணி நேரம் பார்க்கிறார்கள் என்றால் விளையாட்டு பயிற்சிகளில்  ஈடுபடுவது, குடும்பத்துடன் அமர்ந்து பேசுவது, விளையாடுவது  போன்றவற்றை  செய்ய வைக்க வேண்டும் என  குழந்தைகள் நல அமைப்பு தெரிவிக்கிறது.

இதைத் தவிர்த்து, ஸ்கிரீன்டைம் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், பெற்றோர் குழந்தைகளுடன் கண்டிப்பாக நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடன் உரையாடுவது, அன்றைய நாள் முழுவதும் நடந்த விஷயங்களை கேட்டறிவது, அவர்களுடன் அமர்ந்து டிவி பார்ப்பது, குழந்தைகளிடம் எதிர்காலம் குறித்த இலக்குகளை உருவாக்குவது, அவர்களுக்கு சமூக நலன்களில் எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை கவனிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

அதுபோன்று பெற்றோர் முக்கியமாக  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,  குழந்தைகள்  செல்போன் கேட்டு அடம்பிடித்தால்,  நீ இதை செய் நான்  போன் தருகிறேன் என்பதை சொல்லவே கூடாது.  அதுபோன்று படுக்கை அறையில் செல்போன் உபயோகிப்பதை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. 

அதுபோன்று, குழந்தைகள் ஆகட்டும் இளைஞர்களாகட்டும் செல்போன் உபயோகிக்கின்றனர் என்றால், அவர்களது செல்போன் லாக் எண்கள், கடவுச் சொல் போன்றவற்றை கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். 

பொதுவாக பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டியது என்னவென்றால், குழந்தைகளின் ஸ்கிரீன்டைம் அதிகரிக்கும்போது, நேரடியான பாதிப்புகள் ஒருபுறம் என்றால், மறைமுக பாதிப்புகளும் பல இருக்கின்றன. அதாவது, ஸ்கிரீன்டைம் அதிகரிக்கும்போது, பழக்கவழக்கங்கள் மாறுபடுவதால் மன அழுத்தம் ஏற்படலாம். 

மன அழுத்தத்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மேலும், ஸ்கிரீன்டைம் அதிகரிப்பதால், உடல் உழைப்பு குறைகிறது. இதனால் உடல்பருமன் அதிகரிக்கும். உடல்பருமன் அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சர்க்கரைநோய் ஏற்படலாம்.  இதுபோன்று மறைமுக பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

மேலும், குழந்தைகளின் ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல நாடுகளில் பலவித ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தும் முக்கியமாக சொல்லப்படுவது என்னவென்றால், ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் குழந்தைகளின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.   மேலும், இது குறித்து நடத்தப்பட்ட 63 ஆய்வுக் கட்டுரைகளின் கூற்றுப்படி குழந்தைகள் நல அமைப்பின் வழிகாட்டுதலை நான்கில் ஒருபங்கு பெற்றொர் கூட கடைபிடிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.  

உதாரணமாக, இந்த வழிகாட்டுதல்களை 24 சதவீதத்தினருக்கும் குறைவாகவே கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, ஸ்கிரீன் டைம் குறித்து முதலில் பெற்றோருக்குத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

பெற்றோர் எனும் போது, இதில் தாத்தா பாட்டியும் அடங்குவர். ஏனென்றால், பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பெரும்பான்மையான நேரத்தை குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியுடன் செலவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கும் குழந்தைகளின் செல்போன் பயன்பாடு குறித்து கட்டாயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஸ்கிரீன்டைம் பழக்கம்  குறையும்.

அதுபோன்று, மற்றொரு ஆய்வுப்படி, டிவி பயன்பாடு, கணினி பயன்பாடு, கேமிங் பயன்பாடு என பிரித்துள்ளனர். அதில் டிவி அதிக நேரம் பார்ப்பதால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்கிறோமோ அதுபோன்றே கணினி பயன்பாட்டினாலும் பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர். 

அதுபோன்று கேமிங் விளையாட்டுகளால் அதிகளவு குழந்தைகளின் பார்வை திறன் பாதிக்கப்படுவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் பயன்பாட்டை குறைக்க பெற்றோர் விழிப்புடன் இருக்க 
வேண்டும். 

- தேவி குமரேசன்