சாப்பிட்டவுடன் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!



இன்றைய சூழ்நிலையில், மனிதர்களுக்கு அமர்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்து விடுகின்றது. இதனாலேயே பலருக்கும் உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. அதன்காரணமாகவே, பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. 
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நமது இன்றைய உணவு உண்ணும் முறையும் ஒரு காரணமாகும். அந்தவகையில், உணவுக்கு முன்னும் பின்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

சாப்பிடும்போது பேசக்கூடாது

நாம் உணவு சாப்பிடும் நேரத்தில் நம் மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் பேசிக் கொண்டே சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நாம் உண்ணும் உணவு உடலில் ஜீரணமாக வேண்டும் என்றால் நாம் பேசாமலும், உணவின் மீது கவனம் வைத்தும் சாப்பிட வேண்டும். 

அதுபோன்று, சாப்பிட்ட உடன் பேசுவது, படிப்பது, வெயிலில் நிற்பது, நெருப்பின் அருகில் நிற்பது, வண்டியில் செல்வது, நீந்துவது, சவாரி செய்வது போன்றவற்றையும் செய்யக் கூடாது. இதனால் உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போய்விடும். 

 சாப்பிட்டவுடன் தூங்குவது கூடாது

பொதுவாக, 8 மணி நேர உடல் உழைப்பு என்பது ஒரு மணி நேர மூளைத் திறனுக்குச் சமமானது. இதனாலயே மாலையில் வேலை முடிந்து திரும்பும்போது மனிதன் சோர்ந்து விடுகிறான். இதுவே, இரவில் உணவு உண்ட உடனே புத்துணர்ச்சிக்கு பதில் சப்த தாதுக்களும் பலமிழந்து போவதால் சாப்பிட்டவுடன் சோர்வாக தூக்கம் வருகிறது. 

இப்படி நாம் சாப்பிட்டவுடன் தூங்குவதால் கபம் கோபம் அடைந்து பசி தீயை அணைத்து விடுகிறது. இதனால், ஜீரண மண்டலம், உடலின் சப்த தாதுக்கள் இவற்றில் அதிக வாயு சேர்ந்து உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இதனால், சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், சாப்பிட்ட ஒரு மணி நேரம் சென்ற பிறகே உறங்கச் செல்ல வேண்டும். 

பசியை அடக்கக் கூடாது

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி எல்லாருக்கும் நினைவில் இருக்கும். ஏனென்றால், மனித உடலில் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயை   அடக்குவதால் மேற்கண்ட துன்பங்கள் விளையும்.  

அதுமட்டுமல்ல, மனிதனால் எந்தக் காரியத்தையும் செய்ய இயலாது. அது குழந்தையாக இருந்தாலும் சரி, முதியவராக இருந்தாலும் சரி எல்லாருக்கும் பொதுவானது. பசியை அடுக்குவதால் உண்டாகும் கெடுதி என்னவென்றால் உடல் தளர்ச்சி அடைவது, உணவில் ருசியின்மை, உடல் வாட்டம், களைப்பு, உடம்பு வலி, தலை சுற்றல் இவைகள் உண்டாவதோடு கண் பார்வை பாதிப்பு, பார்வை மங்குதல் போன்ற அவதிகள் ஏற்படும்.

சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்

 இன்றைய சூழலில் பலருக்கும் ஆற அமர சாப்பிட நேரம் இல்லை. இதனால் அவசர அவசரமாக உணவை சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடும் பட்சத்தில் உணவு சரியான முறையில் மென்று அது கூழாகும் வரை பொறுமையாக இருந்து விழுங்குவதில்லை. இதனால், நாம் சாப்பிடும் உணவானது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்கிறது.  அப்படி சிக்கிக் கொள்ளும் உணவுகளை சிறு குச்சிகளால் சுத்தம் செய்துவிட வேண்டும். 

இவ்வாறு செய்யாவிடில் பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பவை வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.  மேலும், இரவு வேளையில் இப்படி சிக்கிக் கொண்டு ஓர் இரவு முழுவதும் வாயில் இருக்கும்போது, அவற்றிற்கு நச்சுத்தன்மை ஏற்பட்டுவிடும். எனவே, சாப்பிட்டவுடன் பற்களை சுத்தம் செய்து நீர்விட்டு வாயை கொப்பளித்துத் துப்பிவிட வேண்டும். 

அதிக இனிப்பு ஆபத்தானது

அதிகமாக இனிப்பு சுவையுள்ள உணவை சாப்பிடும்போது, இனிப்பான நீரானது பசித்தீயை அணைத்துவிடுகிறது. உடம்புக்கு ஏற்காத உணவானது உடம்புக்கு வளர்ச்சியை உண்டாக்குவதில்லை. 

உப்பு அதிகமாக உள்ள உணவானது கண்களுக்குக் கெடுதலைச் செய்யும். அதுபோன்று உரைப்பு, கார்ப்பு, புளிப்பு இந்தச் சுவைகளை அதிகமாகக் கொண்ட உணவானது விரைவில் கிழத்தன்மையை உருவாக்கும்.  இதனால் இளம் வயதிலேயே கிழத்தன்மை ஏற்பட்டுவிடக்கூடும்.

சாப்பிட்டவுடன் நடக்க வேண்டும்

பொதுவாக உணவை சாப்பிட்டவுடன் ஒரு 300 அடிகள் நடக்க வேண்டும்.  இவ்விதம் செய்வதால் சாப்பிட்ட கெட்டியான உணவுப் பொருட்கள் ஜீரணமாவதற்கு அனுகூலமாக பிரிந்து விடுகின்றன.  

அதனால் கழுத்து, இடுப்பு, முழங்கால் இவைகளில் பிடிப்பு ஏற்படாமல் தளர்ந்துவிடுகின்றன. அந்தக்காலத்தில் பெண்கள் பிரசவத்திற்குச் செல்லும் வரை உடல் உழைக்க வேலை செய்தார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆடி, ஓடி விளையாடி மண்ணில் புரண்டு வளர்ந்தனர். 

அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். ஆனால், இன்று அப்படியில்லை. பிரசவத்திற்கு செல்லும் வரை பெண்கள்   எந்த வேலையும் செய்யாமல், சாப்பிட்டு சாப்பிட்டு ஒரே இடத்தில் உட்காருகின்றனர். இதனால், இன்று பிறக்கும் குழந்தைகளோ, பிறக்கும் போதே மஞ்சள் காமாலை, உடல் எடை குறைவு என பல நோய்களுக்கு ஆளாகின்றனர். 

எனவே, சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மேலும், சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால், உடலில் சோம்பல் வளர்கிறது. சாப்பிட்டவுடன் களைப்பு தீர தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல் பருமனாகிறது. எனவே, சாப்பிட்டவுடன் அமரக் கூடாது, தூங்கக் கூடாது 

 - வி.எம்.ஜெயபாலன்