பெண்களைத் தாக்கும் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு



அகமெனும் அட்சயப் பாத்திரம்

1994 ஆம் ஆண்டின் DSM 4 தொகுப்பில் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறினை துல்லியமாகக் கண்டறிவது  சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டு,  பண்புகளை மட்டும் தெளிவாக வரையறுத்துள்ளார்கள். அதன்படி, எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு சிறுவயதிலேயே அறிகுறிகளைக் காட்ட அதிகமான வாய்ப்புகளுண்டு. 

குழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களோடு ஓயாமல் சண்டையிடுவது, பள்ளியில் நண்பர்களை அடிப்பது என முரட்டுத்தன்மை தலை காட்டும்போதே கவனமாகிவிட வேண்டும். நிறுத்த இயலாமல் தொடர்ந்து கோபமான வார்த்தைகளை உரக்கப் பேசிக் கொண்டே இருப்பதுவும் ஒரு ஆரம்ப அறிகுறியே. உரிய நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், புற்றுநோய் போல் மெல்ல மெல்ல முற்றி தீவிர BPD பாதிப்பில் கொண்டுபோய் விடும்.

குடும்ப உறவுகள் மட்டுமல்லாமல் சமூகத்திலும், பணியிடங்களிலும் BPD மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.
தற்காலத்தில் மனங்கள் விலகி, ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலை அதிகமாகிவிட்டது என்பதை நாம் மறுக்கவே முடியாது. ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? யாருக்காக மாற வேண்டும்? நீ நீயாகவே இரு.. போன்ற தனிப்பட்ட சுய அடையாளத் தூண்டுதல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. 

இதனால் மனிதர்களோடு இணக்கமாகி,  இறங்கி நெகிழும் மனப்போக்கு வெகுவாகக் குறைந்து வருகிறது என்கிறது புள்ளி விவரம். எனவேதான் எல்லைக்கோடு ஆளுமைக் கோளாறு நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று உளவியல் உலக வல்லுநர்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.

நம் நாட்டில் நூறில் 26 பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது BPD அறிகுறிகளைச் சந்திக்கிறார்கள் என்று Ministry Of Health and Family Welfare சுட்டிக்காட்டியுள்ளது.ஆனால்,  பிபிடி பாதிப்புக்குள்ளானவர்கள் பலர் அதிபுத்திசாலிகளாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும், சமூகத்தில் உயர்ந்த பதவி வகிப்பவர்களாகவும் கூட இருப்பார்கள் என்பதை நாம் நடைமுறையில் பார்க்கலாம். நிர்வாகத்தில் உயரிய பதவியில் இருப்பவர்கள் தமக்குக்கீழ் இருப்பவர்களின் மேல் அதிகக் கோபப்படுவதைப் பார்த்து உடனே BPD என்று கருதிவிடக் கூடாது.

ஏனெனில், மத்திம வயதுகளில், தலைமைப் பண்புகளின் தீவிர செயல்பாடுகளும் BPD- யின் சாயலையே கொண்டிருக்கும் . இன்னொரு பக்கம் சிலர் வாழ்வில் அந்தஸ்து மாறி நிலை உயரும்போது, பிறர் தன்னை மதிக்க வேண்டும்,தனக்குக் கட்டுப்பட வேண்டும் என ஈகோ திருப்திக்காக கோபப்பட ஆம்பித்து விடுவார்கள். இது தானாகவே வலியப் போய் பாம்பைப் பிடித்துக் கொள்வது போலாகிவிடும்.

 ‘‘நிலையின் திரியாது அடங்கியான் தோற்றமாக” வள்ளுவர் சொன்னதுபோல சுயக்கட்டுபாடுடன் இருந்து கொள்ள வேண்டும்.வளரிளம் பருவத்தினரிடையே சுய அங்கீகாரம், இலட்சியம், பாலியல் சீண்டல்கள் போன்ற காரணிகளில் நிறைவு ஏற்படாதபோது ஏற்படும் மன அழுத்தங்களால் BPD -யின் குணநலன்கள் பரவலாகக் காணப்படுகின்றன. எனவேதான் அவர்களைக் கட்டுப்படுத்துவது இன்றைய பெற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற Girl Indifferent ( 1999 ) என்ற திரைப்படத்தில் சூசன்னா எனும் கதாபாத்திரம் பிபிடியின் சில பாதிப்புகளைக் கொண்டிருக்கும். சுய அடையாளமின்றி தன்னைத்தானே வெறுத்துக்கொள்வது, நாடகத்தனமாக மிகையுணர்ச்சியோடு பிரச்சனைகளை எதிர்கொள்வது போன்றவற்றை ரசிகர்களுக்குத் தெளிவோடு காட்ட முயற்சி செய்த திரைப்படம் அது.

அதேபோல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த மான்ஸ்டர் எனும் அமெரிக்கத் திரைப்படத்தில் Aileen Lee Wuornos என்ற பெண் கதாபாத்திரம் இருக்கும். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்த கதாபாத்திரம் வழியாக, பெண்களின் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு பாதிப்பின் விளைவுகளைக் கூர்மையாக சுட்டிக் காட்டிய திரைப்படம் என்று சொல்லலாம். 

உணர்வுகளின் உந்துதலும், அதீதக் கோபமும், சமூக வெறுப்புமாக தனக்கு யாருமே கவனிப்பு தரவில்லை என்ற நிலையில் Alieen, ஏழு ஆண்களைக் கொலை செய்கிறார். தொடர்க் கொலைகள் பற்றி உலகில் பேசப்படும் இடங்களில் எல்லாம் பெண்களில் சீரியல் கில்லர்கள் உண்டு என இவருடைய கதையும் பேசப்படுவது வாடிக்கை.

நம்மூரில் முதல் மரியாதை திரைப்படத்தின் வடிவுக்கரசி அவர்கள் ஏற்றிருந்த பொன்னாத்தாளை இங்கே குறிப்பிடலாம். மலையாளத் திரைப்படங்கள் மணிசித்திரத்தாழ்,  உள்ளடக்கம் போன்றவையும் பெண்களின் வெவ்வேறு மனக்கோளாறுகளைக் காட்ட முயன்றவை என்றாலும் முழுமையான பிபிடி பாதிப்பு கொண்ட நடைமுறைப் பெண் உதாரணம் என்றால் நாம் பொன்னாத்தாளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பெரும்பாலும் இவர்கள் ராட்சசிகளாக,  கொடூர மனம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்களின் BPD குறித்த போதிய விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புகள் நம்மிடையே இல்லை எனலாம்.

சமீபத்தில் வெளிவந்த DNA என்ற திரைப்படத்தின் திவ்யா கதாபாத்திரம் பிபிடியின் சில பொருத்தமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடலாம். புதிதாக குழந்தை பிறக்கும்போது அதை ஏற்றுக் கொள்வதில் ஏற்படும் தயக்கம் (Post pregnancy trauma), சந்தேகங்கள் காரணமாக நாயகிக்கு அடிக்கடி மனநிலை மாறும். 

Emotional Instability, Hyper Senstivity, தேவைற்ற கோபத்தை நுட்பமாக கவனித்து விரித்துக் கொண்டே போவது (Detailing unnecessary Angers) போன்ற குணாதிசயங்களை அந்தப் பெண்பாத்திரம் வெளிப்படுத்தியிருக்கும்.

சர்வதேசப் பெண் பிரபலங்களில்  மர்லின் மன்றோ,  பிரின்சஸ் டயானா போன்றவர்களுக்குக்கூட BPD இருந்திருக்கிறது என்று சான்றுகளை நம் முன் வைக்கும் நவீன உளவியலானது, சில ஆண்டுகளுக்கு முன் பொதுவாக Narcissitic ஆளுமைக் கோளாறு ஆண்களில் அதிகமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியது. அதேபோல் தற்போது எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களோடு உறுதிப்படுத்துகிறது.

ஏனெனில், மரபு ரீதியான காரணிகள் பெண்களுக்கு அதிகமாகக் கடத்தப்படுவதும், சிறு வயது முதல் பூப்பெய்தல், குழந்தைப்பேறு ,ஊட்டச் சத்து மற்றும் எதிர்ப்புசக்தி குறைபாடு மற்றும் சமூகத்தில் காலம் காலமாக நிலவும்  ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள்  போன்ற பல்வேறு காரணிகளாலும்,  பெண்களை BPD எளிதில் பற்றிக் கொள்கிறது. 

உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகும்போது இவர்கள் அடிக்கடி மனச்சோர்வடைந்து, உறவுகளில் கைவிடப்பட்டு விடுவோமா என்ற நிலையில், கடும் எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கிவிடுவார்கள்.

இத்தகைய அடிப்படை அறிவியல், உளவியல் காரணிகளைப் புரிந்து கொள்ளாத பல ஆண்கள்/  கணவன்மார்கள்  மனைவி என்றாலே கோபப்படுவார், மனைவி என்றாலே அதீதமாக ‘ரியாக்ட் ‘செய்வார் போன்ற  நகைச்சுவைகளை உலகெங்கும் சொல்லிக்கொள்கிறார்கள்.புலம்பிக்கொண்டே இருக்கும் பெண்கள் திடீரென கோபப்பட்டு விடுவாய் என்றெல்லாம் முத்திரை குத்துவது முற்றிலும் தவறு.

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்