செர்விகோஜெனிக் தலைவலி!
வலியை வெல்வோம்
சென்ற இதழில் TTH எனப்படும் Tension type headacheஐ பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் செர்விகோஜெனிக் தலைவலியைப் பற்றி தெரிந்து கொள்வோம். செர்விகோஜெனிக் தலைவலி (CGH) என்பது அட்லாண்டோ-ஆக்ஸிபிடல் மற்றும் மேல் கழுத்து மூட்டுகளில் இருந்து தோன்றி, தலை மற்றும் முகத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் உணரப்படும் ஒரு நாட்பட்ட தலைவலியாகும்.
 கழுத்து எலும்புகளைப் பற்றி ஆரம்ப கட்டுரைகளில் பார்த்திருப்போம். கழுத்தானது 7 முதுகெலும்புகளைக் கொண்டது. இதில், முதல் இரண்டு முதுகெலும்புகள் தனித்துவமான வடிவம் மற்றும் செயல்பாட்டைக் கொண்டவை. அவை மேல் கழுத்து முதுகெலும்பை உருவாக்குகின்றன.
இவை கபாலத்துடன் இணைந்து தலையைத் தாங்கி உள்ளது. இதை அட்லாண்டோ-ஆக்ஸிபிடல் மூட்டு என்போம். இந்த மூட்டு 33% கழுத்து இயக்கத்திற்கு உதவுகிறது. அதாவது, முன்னும் பின்னும் வளைதல் நீட்டித்தல் இயக்கங்கள். இதில் அட்லஸின் வடிவமைப்பு தான் தலையை முன்னும் பின்னும் நகர்த்த அனுமதிக்கிறது. அட்லஸிற்கு கீழே உள்ள ஆக்ஸிஸ் (C2) சுழற்சியை அனுமதிக்கிறது. அட்லாண்டோ -ஆக்ஸியல் மூட்டு மொத்த கழுத்து சுழற்சியில் 60% கொண்டுள்ளது.
கீழ் கழுத்து முதுகெலும்பை உருவாக்கும் 5 கழுத்து முதுகெலும்புகளான C3 முதல் C7 வரை உள்ள எலும்புகள் ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருக்கின்றன, ஆனால் C1 மற்றும் C2 லிருந்து மிகவும் வேறுபட்டவை.
* செர்விகோஜெனிக் தலைவலி 30 முதல் 44 வயதுடையவர்களுக்கு அரிதாக ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
* தலைவலி உள்ள நோயாளிகளிடையே இதன் பரவல் 1% முதல் 4% வரை இருக்கிறதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
* இது ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதிக்கிறது, பெண்/ஆண் விகிதம் 0.97 ஆக உள்ளது.
* தொடக்க வயது 30களின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் நோயாளிகள் மருத்துவ உதவியையும் கண்டறிதலையும் தேடும் வயது சராசரியாக 49.4 எனக் குறிப்பிடுகின்றனர்.
சர்வதேச தலைவலி சங்கம் (IHS) செர்விகோஜெனிக் தலைவலியை ஒரு இரண்டாம் நிலை தலைவலி வகையாக அங்கீகரித்துள்ளது. இது கழுத்துப் பகுதியில் உள்ள வலி உணர்ச்சியிலிருந்து (nociception) தோன்றுவதாக கருதப்படுகிறது.
அறிகுறிகள்
இதன் அறிகுறிகள் தினமும் சந்திக்கப்படும் பல முதன்மை தலைவலி நோய்க்குறிகளை ஒத்திருக்கும். ஆகவே சில நேரங்களில் இது தவறாக கண்டறியப் படுகிறது (mis diagnosis).
முக்கிய அறிகுறிகள்
1.ஒரு பக்க தலைவலி. இது உங்கள் தலையின் அடிப்பகுதியில் தொடங்கி ஒரு பக்கத்தில் மேல்நோக்கி பரவலாம் அல்லது தலையின் பின்பகுதியில் தொடங்கி முன்பகுதிக்கு,
கண்களுக்கு பின்னால் பரவலாம்.
2.கழுத்தில் இயக்கம் அல்லது இயக்க வரம்பு குறைவது.
3.கழுத்து அசைவுகளால் உங்கள் தலைவலி மோசமடையலாம்.
4.தலைவலியுடன் ஒரே நேரத்தில் கழுத்து வலி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
காரணங்கள்
கழுத்து முதுகெலும்பு அல்லது கழுத்தைப் பாதிக்கும் காயம் ஆகியவை செர்விகோஜெனிக் தலைவலியை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக, கழுத்து முதுகெலும்பின் பின்வரும் வலி-உணர்திறன் பகுதிகளைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அவை,
* எலும்புகள் (C1 முதல் C3 முதுகெலும்புகள்). * மூட்டுகள். * தசைநாண்கள். * நரம்பு மூலங்கள். * முதுகெலும்பு தமனிகள்.
செர்விகோஜெனிக்
தலைவலியுடன் தொடர்புடைய கீழ்க்கண்ட பொதுவான கழுத்து நோய் கூறுகளாகவும் இருக்கலாம்.
* கீல்வாதம் (Arthritis). * எலும்பு முறிவு (உடைந்த முதுகெலும்பு). * நரம்பு அழுத்தம் (pinched nerve). * வட்டு நழுவுதல். * தசைநாண் திரிபு. * கட்டி. * விபிளாஷ் (கழுத்து அதிர்ச்சி).
நோயறிதல் மற்றும் பரிசோதனைகள்
* அறிகுறிகளை உடல் பரிசோதனையின்போது மதிப்பாய்வு செய்து, நோயறிதலை உறுதிப்படுத்த சில பரிசோதனைகளைக் கூறுவார்கள்.
* பொதுவான பரிசோதனைகளான எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள், கழுத்து முதுகெலும்பை பாதிக்கும் காயங்கள் அல்லது நிலைகளை தான் கண்டறிய உதவும்.
* அறிகுறிகள் மற்ற வகை தலைவலிகளான டென்ஷன் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) போன்றவற்றுடன் ஒத்திருப்பதால் வலி பரவுவதை மட்டும் வைத்து செர்விகோஜெனிக் தலைவலியை கண்டறிவது கடினம்.
* ஆகவே,தசை மற்றும் கழுத்திற்கான சிறப்பு பரிசோதனைகள் மூலமாக தான் பெரும்பாலும் இவை கண்டறியப்படும்.
சிகிச்சை முறை
1.தகுந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் மருந்துகள் ஊசிகள் பரிந்துரைக்கப்படும்.
2.பிசியோதெரபி சிகிச்சை
3.பலர் பிசியோதெரபி சிகிச்சை மூலம் இவ்வகை தலைவலிகளை நிர்வகிப்பதில் வெற்றி பெறுகின்றனர்.
4. ஒரு ஆய்வின்படி , பிசியோதெரபி சிகிச்சையைத் தொடங்கிய 12 மாதங்களுக்குப் பிறகு 72% மக்கள் குறைந்தபட்சம் 50% தலைவலியை அனுபவித்ததாக கூறுகிறது.
5. பிசியோதெரபி சிகிச்சை பயனுள்ளதாக இருக்கலாம் என்றாலும், சிகிச்சை தொடங்கும்போது தலைவலி மோசமடையலாம், இதைத் தடுக்கும் வகையில் உடற்பயிற்சிகளும் , நீட்சிகளும் (stretching) கற்பிக்கப்படும்.
6. பெரும்பாலும் இது பிசியோதெரபி மற்றும் மருந்துகள், ஊசிகள் என்று ஒருங்கிணைந்த மருத்துவத்தால் நன்கு குணப்படுத்த முடியும்.
7. வலியின் அளவு அறிகுறிகளைப் பொறுத்து குணமாகும் கால அளவு மாறுபடும்.
8. மிக மிக அரிதாக தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை நிபுணர்களால் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
தடுப்பு முறைகள் (Prevention)
செர்விகோஜெனிக் தலைவலியின் அனைத்து காரணங்களையும் தடுக்க முடியாது. ஆனால் ஆபத்தைக் குறைக்கலாம்.
* காயங்கள், விழுதல் மற்றும் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். * கூன் விழாமல் இருக்க உடல் நிலையைச் சரிசெய்தல். * சரியான தலையணை மற்றும் மெத்தையில் தூங்குதல். * தவறாமல் உடற்பயிற்சி செய்தல்.
டென்ஷன் வகைத் தலைவலி (TTH) மற்றும் சர்விகோஜெனிக் தலைவலி(CGH) இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்…
அம்சங்கள் டென்ஷன் வகை தலைவலி (TTH) செர்விகோஜெனிக் தலைவலி (CGH)
வரையறை டென்ஷன் வகை தலைவலி (Tension-Type Headache) என்பது மன அழுத்தம், பதற்றம் அல்லது தசை இறுக்கம் காரணமாக ஏற்படும் ஒரு முதன்மை தலைவலியாகும். இது பொதுவாக தலையைச் சுற்றி ஒரு இறுக்கமான பட்டை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. செர்விகோஜெனிக் தலைவலி (Cervicogenic Headache) என்பது கழுத்து முதுகெலும்பு (C1-C3 ) முதுகெலும்பு மூட்டுகள், தசைநாண்கள், நரம்பு அழுத்த பிரச்னைகளால் ஏற்படும் ஒரு இரண்டாம் நிலை தலைவலியாகும். இது பரவலான வலியாக (referred pain) உணரப்படுகிறது.
வலியின் இயல்பு இருபுறமும் (bilateral) தலையைச் சுற்றி இறுக்கமான அல்லது அழுத்தும் உணர்வு, பொதுவாக மிதமானது முதல் மிதமான தீவிரம் வரை இருக்கும். ஒரு பக்கத்தில் (unilateral) தலைவலி, பொதுவாக தலையின் பின்பகுதியில் தொடங்கி முன்பகுதி அல்லது கண்களுக்கு பின்னால் பரவுகிறது.
காரணங்கள் மன அழுத்தம் அல்லது உணர்ச்சி பதற்றம் - மோசமான உடல் நிலை (posture) - தூக்கமின்மை - கண்களின் பதற்றம் - பற்களை இறுக்குதல் (clenching) - கழுத்தில் காயம் (எ.கா., விபிளாஷ்) - கழுத்து மூட்டுகளில் பிரச்னைகள் (ஜைகோஅப்போஃபைசியல் மூட்டுகள், குறிப்பாக C2/C3) - கீல்வாதம் - நரம்பு அழுத்தம் - வட்டு நழுவுதல் - தசைநாண் திரிபு. அறிகுறிகள் கழுத்து தொடர்பு ஆண்- பெண் பாதிப்பு விகிதம் - தலையைச் சுற்றி இறுக்கமான பட்டை போன்ற வலி - தோள்கள் மற்றும் கழுத்தில் இறுக்கம் - ஒளி அல்லது ஒலிக்கு உணர்திறன் இருக்கலாம். ஆனால் வாந்தி அல்லது குமட்டல் இல்லை. கழுத்து தசைகளில் இறுக்கம் இருக்கலாம், ஆனால் கழுத்து முதுகெலும்பு பிரச்னைகளுடன் நேரடியாக தொடர்பு இல்லை.
ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு பக்க தலைவலி - கழுத்தில் இயக்க வரம்பு குறைவது - கழுத்து அசைவுகளால் வலி மோசமடையலாம் - ஒரு பக்க தோள்பட்டை அல்லது கையில் வலி - கழுத்து வலி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் கழுத்து முதுகெலும்பு (C1-C3) பிரச்னைகளால் நேரடியாக ஏற்படுகிறது. கழுத்து இயக்கத்தால் வலி தூண்டப்படலாம் அல்லது மோசமடையலாம். ஆண் பெண் பாதிப்பு விகிதம் சமமாக உள்ளது.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|