குளிர்கால சூப் வகைகள்!
முருங்கைக் கீரை சூப் தேவையான பொருட்கள் முருங்கை இலை - 1 கைப்பிடி அளவு தண்ணீர் - 200 மி.கி மிளகு - 1தேக்கரண்டி பூண்டு - 4 பல் சிரகம் - அரை தேக்கரண்டி.
செய்முறை: ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம், மிளகு, பூண்டு இவை அனைத்தும் ஒன்றுக்கு இரண்டாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும் பிறகு காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
பலன்கள்: முருங்கைக்கீரை உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும், உடல் வீக்கத்தைக் குறைக்கவும், கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையைத் தடுக்கிறது மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
வாழைத்தண்டு சூப்
தேவையான பொருட்கள் வாழைதண்டு - 1 துண்டு சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 3 பல் மிளகு தூள் - 1தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி வெண்ணெய் - 5 கிராம் சோளமாவு - 1மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப தயிர் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை: வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன் கலந்த கரைசலில் போடவும். இது வாழைத்தண்டை நிறம் மாறாமல் காக்கும். குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும். வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை வடிகட்டி வாழைத்தண்டு சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றி உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் மிளகு தூள், சீரகம் சேர்த்து வதக்கவும். சத்தான வாழைத்தண்டு சூப் தயார். பலன்கள்: வாழைத்தண்டு, நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது சிறுநீரக கற்களைக் கரைக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், உடல் எடையைக் குறைக்க உதவும், மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன.
வெஜிடபுள் சூப்
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், பட்டாணி, குடைமிளகாய், வெங்காயம் கலவை - 2 கப் இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப சோளமாவு - 1 தேக்கரண்டி.
செய்முறை: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டாணி, குடைமிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
இடை இடையில் கிளறி விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். ஆரோக்கியமான காய்கறி சூப் தயார்.
பலன்கள்: காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன, எடை மேலாண்மைக்கு துணைபுரிகின்றன, மேலும் சிறுநீரகக் கற்கள் உருவாவதையும் தடுக்கின்றன.
- ஸ்ரீதேவி
|