அல்சைமரிலிருந்து விடுதலை!
அல்சைமர் என்பது மூளை செல்கள் பாதிப்பால் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இது நினைவாற்றல், பகுத்தறிவு மற்றும் பிற சிந்தனை திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 இதற்கு தற்போது மேம்பட்ட சிகிச்சைகள் உள்ளபோதிலும் இது 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே இந்த நோய் குறித்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இந்நோய் எதனால் வருகிறது. அதற்கான புதிய சிகிச்சை முறைகள் என்ன? தற்காத்துக்கொள்ளும் வழிகள் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த ஆலோசகரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் அருண் குமார்.
அல்சைமர் நோய் என்றால் என்ன? அல்சைமர் என்பது பொதுவாக 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது, இருப்பினும் இளம் வயதிலேயே இது ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய் அமிலாய்டு-பீட்டா பிளேக்குகள் மற்றும் நியூரோபைப்ரிலரி பாதிப்பால் ஏற்படுகிறது. இது நியூரான்களின் இழப்பு மற்றும் மூளை சுருங்குவதற்கு வழிவகுக்கிறது. இதற்கான அறிகுறிகள் என்பது உடனடியாக தெரியாது.
அது குறித்து படிப்படியாகத் தெரியவரும். பொதுவாக லேசான நினைவாற்றல் இழப்புடன் துவங்கும் இந்த நோயானது இறுதியில் மொழி, முடிவெடுக்கும் திறன் மற்றும் காட்சித் திறன்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நோய் கடுமையாகும்போது, நோயாளிகள் அன்றாடப் பணிகளைக்கூட செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நவீன சிகிச்சை முறைகள்: கடந்த காலங்களில், அல்சைமர் நோயைக் கண்டறிவது என்பது மிக சவாலாக இருந்த நிலையில் தற்போது மேம்பட்ட மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக இந்த நோயை மிக விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறியலாம்.
நோயாளியின் பின்னணி, அறிவாற்றல் சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய் குறித்த பரிசோதனை செய்யப்படுகிறது. பயோமார்க்கர் சோதனை: தற்போது, அமிலாய்டு மற்றும் டௌ புரதங்களின் பிளாஸ்மா அளவை அளவிடும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரத்தப் பரிசோதனைகள் நோயறிதல் செயல்முறையை மாற்றி வருகின்றன. இது முதுகெலும்பு திரவ சோதனைகள் அல்லது பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்களை விட எளிதாகவும் குறைவான ஊடுருவல் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
நியூரோஇமேஜிங்: நினைவாற்றல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஹிப்போகாம்பல் சுருக்கம் மற்றும் அமிலாய்டு குவிப்பைக் கண்டறிய எம்ஆர்ஐ மற்றும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நோயறிதல் அளவுகோல்: நவீன நோயறிதல் DSM-5 மற்றும் NIA-AA வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. இது பயோமார்க்கர் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் அல்சைமர் நோயை மற்ற மூளை பிரச்னைகளில் இருந்து வேறுபடுத்த உதவுகிறது. தற்காத்துக் கொள்ளும் வழிகள்
அல்சைமர் நோயை நிர்வகிப்பது என்பது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு குழு அணுகுமுறை ஆகும். அறிகுறி முன்னேற்றத்தை மெதுவாக்கி, அன்றாட செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
நோய் - மாறுபட்ட அணுகுமுறைகள் புதிய சிகிச்சைகளில் அமிலாய்டு - பீட்டா மற்றும் டௌ புரதங்களை இலக்காகக் கொண்ட மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அடங்கும். இது உண்மையான நோய் மாற்றத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறது. இருப்பினும் இதன் செயல்திறன் குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம்: மனதுக்கு பிடித்தமானதை செய்தல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மத்திய தரைக்கடல் பாணியிலான உணவுமுறை அதாவது காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்கள் என சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது இந்த நோய் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரலாம்.
உளவியல் கல்வி மற்றும் ஆதரவு: நோய் பாதித்தவர்களை பார்த்துக் கொள்பவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர், எனவே அவர்களுக்கான ஆதரவு சேவைகள், ஓய்வு மற்றும் ஆலோசனை ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.வளர்ந்து வரும் சிகிச்சைகள்: மரபணு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் புதிய மருந்துகளைப் பயன்படுத்தி ஆரம்பகால நோயறிதல் மற்றும் தடுப்பு உத்திகள் என பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், மருத்துவ பராமரிப்பு, மரபணு காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள், தொடர்ச்சியான ஆராய்ச்சியுடன் சேர்த்து, அல்சைமர் நோயின் சிக்கலான சவால்களைச் சமாளிக்க அவசியமாகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தற்போது அல்சைமர் நோய் முன்பை விட தற்போது துல்லியமாகக் கண்டறியப்படுகிறது. புதிய சிகிச்சைகள் அதன் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்கின்றன. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மாற்றம் ஆகியவை இந்த நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான சிறந்த வழிமுறைகளாக உள்ளன.
- ஸ்ரீதேவி குமரேசன்
|