தெரப்பிகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!



மாற்று மருத்துவம் என்ற சொல் இன்று மிகவும் பிரபலம். சித்த வைத்தியம் முதல் சைனீஸ் வைத்தியம் வரை சகலவிதமான பாரம்பரிய வைத்தியமுறைகளும் இன்று மாற்று மருத்துவமாகிவிட்டன. 
மேற்குலகில் உருவாகி உலகெங்கும் பரவியிருக்கும் அலோபதி மருத்துவம்தான் இன்றைய மக்கள் மருத்துவம். நோய்க்கூறுகளை அறிவதில் கடைப்பிடிக்கப்படும் விஞ்ஞானத்தன்மை; உடனடியாக பலன் கிடைப்பது; நீண்ட கால நோய்களுக்கும் சிறந்த தீர்வு என்று அலோபதி மருத்துவத்தின் சிறப்புகள்தான் இதற்கான காரணம். ஆனால், நமது பாரம்பரிய வைத்தியங்களும் பலன் தராமல் இல்லை.

சரியான நிபுணர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இவற்றாலும் நமக்கு நன்மை கிடைக்கும். மேலும், பக்கவிளைவுகளும் இருக்காது. இன்றைய உலகமயமாக்கல் சூழல் மருத்துவத்தையும் பாதித்து உள்ளதன் ஆரோக்கியமான விளைவுதான் உலகம் முழுதும் பரவிவரும் மாற்று மருத்துவத் தேடல்கள். பழங்கால கிரேக்கம், ரோம், மத்திய கிழக்கு, சீனா, இந்தியா நாடுகளில் புகழ்பெற்று இருந்த பல மருத்துவமுறைகள் இன்று உலகம் முழுதும் பரவியிருக்கின்றன.

மாற்று மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தெரப்பிகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்து பயனடைந்துவருகிறார்கள். நூற்றுக்கணக்கான தெரப்பிகள் இன்று புழக்கத்தில் உள்ளன. அவற்றில் புகழ்பெற்ற சில தெரப்பிகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

அரோமா தெரப்பி

மனதுக்கு இதமான நறுமணப் பொருட்களைச் சுவாசிக்க செய்வதன் மூலம் மனநலப் பிரச்னைகளை சீராக்குவதுதான் அரோமா தெரப்பி. இந்த தெரப்பிக்காக நறுமணம் மிகுந்த தாவரப் பொருட்களில் இருந்து எஷன்சியல் ஆயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மனதுக்கு உகந்த இனிய வாசனைக்கு மனதை அமைதிப்படுத்தும் குணம் உண்டு.

பயன்படுத்தப்படும் எண்ணெய்கள்

எஷன்சியல் ஆயில்கள்: தாவரங்களில் இருந்து நீராவிமுறையிலும், பிழிந்து எடுக்கப்படும் முறையிலும் பெறப்படும் எண்ணெய்கள் இவை. உதாரணம், யூகலிப்டஸ் எண்ணெய், கிரேப் எண்ணெய்.

அப்சல்யூட்ஸ் (Absolutes) பூக்களில் இருந்தும் குறிப்பிட்ட தாவர திசுக்களில் இருந்தும் சால்வென்ட் முறையில் பெறப்படும் எண்ணெய்கள் அப்சல்யூட்ஸ் எனப்படுகின்றன. உதாரணம் ரோஸ் அப்சல்யூட்ஸ்.

கேரியர் எண்ணெய்கள்: எண்ணெய் வித்துக்கள், விதைகளில் இருந்து பெறப்படும் டிரைசைகிளிசரைட்களின் நீர்த்த வடிவங்கள் கேரியர் எண்ணெய்கள் எனப்படும். உதாரணம், பாதாம் ஆயில்.

மூலிகை வடி எண்ணெய்கள்: வடித்தெடுத்தல் முறையில் பல்வேறு மூலிகைகள், தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்கள் இவை. உதாரணம் ரோஸ் ஆயில், லெமன் ஆயில்.
பைட்டோசைட்ஸ்: பல்வேறு தாவரங்களின் ஆர்கானிக் மூலக்கூறுகளில் இருந்து அதன் கந்தக மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து உருவாக்கப்படும் எண்ணெய்கள் பைட்டோசைட்ஸ் எனப்படும். பொதுவாக, இவை அரிதாகவே அரோமா தெரப்பிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சைமுறைகள்: இந்த எண்ணெய்களில் இருந்து பெறப்படும் நறுமணங்களைக்  காற்றில் பரவவிடுவதன் மூலமும், பாதிக்கப்பட்டவரை நேரடியாக முகரச் செய்வதன் மூலமும், பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த எண்ணெய்கள் காற்றில் கலப்பதற்கு பிரத்யேக ஆவியாக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. அடர் நெடி இல்லாத எண்ணெய்கள் நேரடியாக சுவாசிக்கத் தரப்படுகின்றன. உடலில் பூசும் எண்ணெய்களில் நெடி அடர்த்தியாக இருக்கக்கூடும். தேர்ந்த நிபுணரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

கப்பிங் தெரப்பி

பாரம்பரிய சீன வைத்தியமுறை இது. அத்லெட்டிக் வீரர்களால் உலகம் முழுதும் தற்போது பிரபலம் அடைந்துள்ளது. கண்ணாடி, மூங்கில், மட்பாண்டம், சிலிக்கான் கப்கள் கொண்டு இந்த தெரப்பி செய்யப்படுகிறது. கப்பிங் குவளையில் ஆல்கஹால், மூலிகைச்சாறு போன்ற எரியும் திரவத்தை (Flammable liquid) நிரப்பி, அதை கொளுத்திவிட்டு, உடலின் தேர்ந்தெடுத்த புள்ளிகளில் அதைப் பதித்துவிடுவார்கள். 

குவளையில் ஆக்சிஜன் உள்ள வரை எரியும் நெருப்பு அணையும்போது, குவளைக்குள் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனால்  ஒருவித​ உறிஞ்சும் தன்மை​ (Suction​)​ ஏற்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள தோல் நீங்கும். இந்த சிகிச்சைமுறையால், உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சீனாவிலும் வேறு சில நாடுகளிலும், ஹிஜாமா அல்லது​ வெட் கப்பிங்​ ​(​Wet cupping​)​ என்ற முறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, கண்ணாடிக் குவளைகள் வைக்கப்படுவதற்கு முன்னால், அந்த இடத்தில் சிறிய, ‘கீறல்’ ஒன்று ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். இந்த  கப்பிங்கின் சிகிச்சையின் போது சிறிது ரத்தம் கசியும். கப்பிங் சிறந்த வலி நிவாரணி மட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்னைகளைக்கூட தீர்ப்பதாக நம்பப்படுகிறது.

கலர் தெரப்பி

இதை குரோமோதெரப்பி (Chromotherapy) என்றும் சொல்வார்கள். இதில், ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. ஒளியைப் பயன்படுத்தாமல் பல வண்ணப் பொருட்களைக்கொண்டு செய்யப்படுவது இன்னொரு முறை. நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. 

உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன.  சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், மஞ்சள் நிறம் ரத்தத்தையும், பச்சை நிறம் இதயத்தையும், நீல நிறம் தொண்டைப் பகுதியையும், இண்டிகோ நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப் பகுதியையும் காப்பதாக இந்த மருத்துவமுறை சொல்கிறது.

டிஸ்லெக்சியா போன்ற கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், நிற மருத்துவம் என்பதைக் கற்றவர்கள் மிகக் குறைவானவர்களே. அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, எதையாவது செய்தால் மோசமான பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைரோபிராக்டிக் தெரப்பி

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் எலும்பு, நரம்பு, தசைத் தொடர்பான பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை இது. முதுகுத் தண்டுவடத்துடன் தொடர்புடைய நாட்பட்ட பிரச்னைகளான இடுப்புவலி, முதுகுவலி, தசைப்பிடிப்பு, தோள்பட்டைவலி, கழுத்து வலி, சுளுக்கு, பின்பக்க தலைவலி போன்றவற்றுக்குச் சிறந்த தீர்வாக கைரோபிராக்டிக் சிகிச்சைகள் இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்தல், பிடித்துவிடுதல், நீவுதல், தட்டுதல், அழுத்துதல், சுளுக்கு எடுத்தல்  போன்றவையோடு அந்த இடத்துக்கான உடற்பயிற்சி, பிசியோதெரப்பி,  நோயாளிக்கு முதுகுத் தண்டுவடம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவரவர் உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான போஸ்சர் பரிந்துரை, வாழ்வியல்முறை மாற்றங்கள் ஆகியவையும் இந்த சிகிச்சையில் அடங்கும்.

ஐஸ் தெரப்பி

ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுப்பது ஐஸ் தெரப்பி. இதனால்,  ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும். 

அனைவருக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடிய சிகிச்சை இது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். தசைப்பிடிப்பு, கை, கால்வலி, ஒபிஸிட்டி, உயர் ரத்த அழுத்தம், வெரிகோஸ் வெயின், தைராய்டு பிரச்னைகள் போன்றவற்றுக்கு ஐஸ் தெரப்பி நல்ல தீர்வு.

ஹோலிஸ்டிக் தெரப்பி

ஹோலிசிஸ்டிக் என்றால் அனைத்தும் இணைந்தது என்று பொருள். ஹோலிஸ்டிக் தெரப்பி என்பது  பல்வேறு சிகிச்சை முறைகளை ஒருமுகப்படுத்திச் செய்யப்படும் சிகிச்சை. ஒரு நோய் உருவாகக் குறிப்பிட்ட ஒரு காரணம் மட்டுமே உள்ளது எனச் சொல்ல முடியாது. ஒருவரின் பரம்பரையான உடல் அமைப்பு, உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு காரணங்களால் நோய் உருவாகிறது. எனவே, இவற்றுக்கான தீர்வும் ஒரே முறையிலான சிகிச்சையாக இருக்க முடியாது என்பது இந்த சிகிச்சையின் அடிப்படை.

டயட், யோகா, பிசியோதெரப்பி, அக்குபஞ்சர், அக்குபிரெஷர், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம், உளவியல் ஆலோசனை, கைரோபிராக்டிக் தெரப்பி, காந்த சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மூலம் நோயாளியின் பிரச்னைகளைக் களைவதால் இது முழுமையான தெரப்பி (ஹோலிஸ்டிக்) எனப்படுகிறது.

எலும்பு, மூட்டு சம்பந்தமான பிரச்னைகள், ஒற்றைத் தலைவலி, அடிக்கடி தலைச்சுற்றல், வெர்ட்டிகோ தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை மூலம் எளிதில் தீர்வு கிடைக்கும்.  

காந்த தெரப்பி

காந்தத்தைக் கொண்டு உடலில் காந்த அலைகளைப் பரவச் செய்வதன் மூலம் உடலின் மின்காந்த அலைகளைத் தூண்டும் சிகிச்சை காந்த தெரப்பி எனப்படுகிறது. இதில், எலெக்ட்ரோ மேக்னெட் தெரப்பி, நிரந்தர காந்த தெரப்பி என இருவகை உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை ஒரு நாற்காலியில் அமரவைத்து அவர்களின் கை, கால் மூட்டுகள், கழுத்துப்பகுதி, கணுக்கால் ஆகிய இணைப்புகளின் இருபுறமும் காந்தங்கள் பொருத்தப்படும். 

காந்தத்தின் எதிரெதிர் துருவங்களில் இருந்து பரவும் காந்த அலைகள், உடலில் பாய்ந்து நமது உடலின் மின் காந்தத்தைத் தூண்டுவதன் மூலம், நமது நரம்புமண்டலம், ரத்த ஓட்டம் சீராகும். இதனால், கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி, உடல் அசதி நீங்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும், நரம்பு மண்டலம் சீராகச் செயல்படும்.

ரெஃப்லெக்சாலஜி

உள்ளங்கைகள், பாதங்களில் முக்கியமான சில அக்குபிரெஷர் புள்ளிகள் உள்ளன. இவற்றை தூண்டுவதன் மூலம் கைகள், காலுக்கு ரிலாக்‌ஷேசன் செய்து முழு உடலையும் புத்துணர்வு செய்யும் முறை ரெஃப்லெக்சாலஜி. இது அக்குபிரெஷர் சிகிச்சைகளில் ஒன்று. இதன் மூலம், கை, கால்வலி, தலைவலி, சோர்வு நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் பெருகும்.

களிமண் தெரப்பி

களிமண்ணை உடல் முழுதும் பூசிக்கொண்டு மட் பாத் எடுப்பதன் மூலமாக நோய்களைத் தீர்க்கும் தெரப்பி முறை இது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்சபூதங்களின் கூட்டே மனித உடல். பஞ்ச பூதங்களில் ஒன்றான மண் கொண்டு நம் உடலுக்கான சிகிச்சை செய்யும்போது, நல்ல பலன்கள் கிடைக்கின்றன. உடலுக்கு மட் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்குள் இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும். நோய்களும் சரியாகும்.

இந்த சிகிச்சைக்குப் பெரும்பாலும் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண். மண்ணுடன் மஞ்சள், வேப்பிலை, துளசி, புதினா, கற்றாழைப் பொடி போன்றவையும் கலந்து பூசப்படுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. களிமண் அல்லது சிவப்பு மண்ணில் மூலிகை சேர்த்து உடலில் பூச வேண்டும். வெந்நீர் கலந்து செய்யப்படும் மட் பேக் ஆக இருந்தாலும், குளிர்ந்த நீர் கலந்து தயாரிக்கப்படும் மட் பேக்காக இருந்தாலும் உடலில் பூசிய 20-30 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட வேண்டும்.

மலர் தெரப்பி

இது ஹோமியோபதி மருத்துவத்தின் பகுதிகளில் ஒன்று. பொதுவாக இந்த தெரப்பி ஹோமியோபதி மருத்துவத்தில் நம்பிக்கை மருத்துவமாக (Placebo) பயன்படுகிறது. அதாவது, நோயாளிக்கு உடலுக்கான சிகிச்சையோடு மனதுக்குமான சிகிச்சையும் தேவைப்படும்போது இந்த மலர் தெரப்பி தரப்படுகிறது. இதில், தண்ணீர் மற்றும் ஆல்கஹாலை 50:50 என்ற விகிதத்தில் கலப்பார்கள்.

இதை, தாய் மருந்து (Mother tincture) என்பார்கள். இந்தக் கலவை பலமுறை திரும்பத் திரும்பச் செய்யப்படுவதால், இறுதியாக நோயாளிக்குக் கொடுக்கப்படும் கலவையில் எந்த ருசியும் மணமும் இருக்காது. மலர் மருத்துவம் பலன் தருவது இல்லை என்ற கருத்துகள் எப்போதுமே இருந்துவருகின்றன. மேலும், இதில் போலிகள் அதிகம் என்பதால், ஹோமியோபதி மருத்துவத்திலும் உளவியலிலும் தேர்ந்த நிபுணர் ஒருவரிடமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- இளங்கோ கிருஷ்ணன்