பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

கொரோனா பரவல் அசுர வேகமெடுத்திருக்கிறது. அதிலும் சென்னையில் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது. ‘அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை’ என்று ஒருபக்கம் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அரசு தரப்பிலோ ‘பொதுமக்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லை.
கொரோனாவின் ஆபத்து புரியாமல் நடமாடுகிறார்கள்’ என்று பதிலளிக்கிறார்கள். இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக ‘கொரோனா ஒழிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் வருவாய் நிர்வாக ஆணையரும், சென்னையின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன்.

‘முதல்வர் தலைமையில் 5 அமைச்சர்கள், 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு பணியாற்ற உள்ளனர். அதேபோன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநகராட்சியுடன் இணைந்து 15 மண்டலங்களிலும் பணியாற்ற உள்ளனர். சென்னையில் மொத்தமுள்ள 39,539 தெருக்களில் இதுவரை பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர் 6,537 தெருக்களில்தான் இருக்கின்றனர். இதுவரை வந்த தொற்றை குறைக்க அனைவரையும் சேர்த்து அதை ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல முயல்கிறோம்.

உலக சுகாதார நிறுவனம் முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், முதியவர்களை பாதுகாத்தல், தனிமைப்படுத்தல்தான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளது. முதலில் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் ஓமியோபதி, சித்தா போன்ற பல்வேறு மருந்துகள் கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய்த்தொற்று பரவியுள்ள 16% தெருக்களையும் குறைத்துவிடுவோம். மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்பதால் முகக்கவசம் அணிந்து களப்பணியாற்றினால் போதும். தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம். முகக்கவசம் அணியாதவர்கள் அதை ஒரு கடமையாக உணர்ந்து, அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு என்று நினைக்க வேண்டும். பொதுக் கழிப்பறை, தண்ணீர் பிடிக்கும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது நம் ஒவ்வொருவரின் தேசிய கடமை என்று நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனால் நமக்கும் நோய் வராது, மற்றவர்களுக்கும் நோய் வராமல் தடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

- க.கதிரவன்